Tuesday, June 30, 2015

பணம் என்னும் மதம்!



என்ன வடிவேலு அண்ணே !நல்லாருக்கீங்களா?

வாப்பா லோகநாதா! என்ன விசயம் இவ்வளவு தூரம்?

நம்ம கந்தசாமி ஐயா வீட்டுக்குப் போயிருந்தேன்.அவருக்கு எழுபது வயசாகுதில்ல!வாழ்த்துச் சொல்லப் போயிருந்தேன்.வீடு ஜே ஜே ன்னு இருக்குது.அவரோட மகள்கள்,மகன்.,மருமகள்  மருமகன்கள் பேரன் பேத்திகள் எல்லாம் வந்திருக்காங்க

அப்படியா?

அவர் உண்ன்மையிலே முற்போக்கான ஆளுதான் அண்ணே!ஒரு குட்டி இந்தியாவே இருக்கிதில்ல வீட்டில?முதல் மருமகன்கிறித்தவர்;இரண்டாவது முஸ்லீம்.ஆனா எல்லாரையும் ஏத்துகிட்டாரே,பெரியமனுசன்தான் அண்ணே!

என்னண்ணே சிரிக்கிறீங்க? நான் சொன்னது சரிதானே.

லோகநாதா.உனக்கு முழு விசயமும் தெரியாது.முதல் பொண்ணு கிறித்தவப்பையனைக் காதலிச்சா..கட்டிக்கிட அப்பாகிட்ட அனுமதி கேட்டா.அவர் மறுத்திட்டாரு.அதுக்குப் பொறகுதான் அந்தப் பெண் அதே பையனைக் கல்யாணம் பண்ணிகிடுச்சு.வீட்டூக்கே வராதேன்னு சொல்லி விரட்டி விட்டுட்டார்.

அப்புறம்?

ரெண்டாவது பெண்  முஸ்லிம் பையனைக் காதலிச்சது.அப்பாகிட்ட சொன்னா அனுமதிக்க மாட்டார்னு சொல்லாம போய்க் கல்யாணம் பண்ணிக்கிடுச்சு.கல்யாணத்துக்கு மொத நாளே மதமும் மாறிடுச்சு.பிறகு அப்ப கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்திச்சு.அவரும் ஏத்துக்கிட்டாரு.
அப்படியாண்ணே

அப்புறம்தான் சின்னப் பொண்ணு விசயத்தில விட்டுக் கொடுத்துட்டு பெரிய பெண்ணைத் தள்ளி வைக்கிறதைப் பத்தி ஊரெல்லாம் ஒரு மாதிரிப் பேசுவாங்களேன்னு அவங்களையும் ஏத்துக்கிட்டார்”

ஏண்ணே இந்தப் பாரபட்சம்?

லோகநாதா! அவருக்கு மதம் பத்தியெல்லாம் கவலை இல்லை.முதல் மருமகன் வசதி இல்லாதவன்.இரண்டாவது பெரிய பணக்காரன்!

அவருக்குப் பணம்தான் மதம்!

Monday, June 29, 2015

சாந்தியும் சமாதானமும்!



கோடைவிடுமுறைக்குப் பின் அன்றுதான் பள்ளி திறந்திருந்தது.
மாலை பள்ளியிலிருந்து திரும்பிய சாந்தி,புத்தகப் பையை எறிந்து விட்டு அம்மாவிடம் வந்து ஆர்வமாகப் பேசலானாள்,
“அம்மா!இன்னிக்கு என் வகுப்பில்,ஒரு புதுப் பெண் சேர்ந்திருக்கா.அவ பேரை இது வரைக்கும் நான் கேட்தே இல்லை.சமாதானம் தான் அவ பேரு. நீ கேள்விப்பட்டிருக்கயா?”
ஓ!கிறித்தவப் பெண்ணாக இருப்பாள்.அவர்கள்தான் அப்படிப் பெயர் வைப்பார்கள்”என்றாள் அம்மா.
சாந்தி  கேட்டாள்”என் வகுப்பில் இருக்கும் எஸ்தர் பொட்டு வைப்பதில்லை.இவள் வைத்திருக்கிறாளே?”
கத்தோலிக்கராக இருப்பாள்.அவர்கள் பொட்டு வைப்பதுண்டு” இது அம்மாவின் பதில்
“கெட்டிக்காரியாக இருக்கிறாள் அம்மா.ரொம்ப நல்லவளும் கூட.என் அருகில்தான் அவளுக்கு இருக்கை.அன்பாகப் பேசுகிறாள்.அவள் கொண்டு வந்த கேக்கை எனக்கும் கொடுத்தாள்”சாந்தி
”பெயருக்கு  ஏற்றபடி இருக்கிறாள் போலும். நீயும் அது போலத்தான் இருக்க வேண்டும்.
இன்று நம் வீட்டில் செய்த முறுக்கை நாளை அவளுக்குக் கொண்டு போய்க் கொடு.”
அம்மா தொடர்ந்தாள்”உன் பெயர் சாந்தி .சாந்தி என்றால் அமைதி இல்லியா? ஆங்கிலத்தில் பீஸ் என்ற வார்த்தைக்கு அமைதி ,சமாதானம் என்ற இரு பொருளும் உண்டு.எனவே 
உன் பெயரும் அவள் பெயரும் ஒன்றுதான்”
”இதையே வேறு விதமாகவும் சொல்லலாம்.உலகில் சண்டை இன்றி இருந்தால்தான் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.அதாவது சமாதானம் இருந்தால்தான் சாந்தி நிலவும்.சாந்தி இருந்தால்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும்.எனவே சாந்தியும் சமாதானமும் மிக அவசியம்.”
”ஆமாம் அம்மா.என் வகுப்பு உவைஸ் கூடச் சொல்லியிருக்கான்,அவர்கள் ஒருவரை ஒருவர்  சந்திக்கும்போது சாந்தியும் சமாதானமும் நிலவுக  என்று கூறிக்கொள்வார்கள் என்று .” சாந்தி சொன்னாள்

”உங்கள் வகுப்பில் அனைவருடனும் பிரியத்துடன் சண்டைகளின்றிப் பழக வேண்டும்
 நீங்கள் இருவரும் என்றும் சேர்ந்தே இருந்து நன்கு படித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.
ஒரு நாள் அவளை நம் வீட்டுக்கு அழைத்து வா”
அம்மா சாந்தியை அணைத்துக் கொண்டாள்