Thursday, August 20, 2015

புதுக்கோட்டைக்குப் போகும் நாரதர்!



இடம்:தேவலோகம்,இந்திர சபை.

ரம்பா,ஊர்வசி ஆகியோரின் நடனத்தை தேவேந்திரன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.

நவக்கிரகங்கள்,தேவர்கள் .அஷ்ட திக் பாலகர்கள் எல்லோரும் அமர்ந்திருக் கின்றனர்.

அப்போது நாராயண,நாராயணஎன்ற குரல் கேட்கிறது.

நாரதர் வருகிறார்.

இந்திரன்:வாருங்கள் நாரதரே!பூலோக சஞ்சாரம் எல்லாம் சுபமாக முடிந்ததா?

நாரதர்:ஆகா!தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தேன்.

இந்:அப்படியா?என்ன விசேஷம்?

நா:அக்டோபர் 11ஆம் தேதியன்று தமிழ் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி புதுக் கோட்டையில் நான்காவது வலைப்பதிவர் திருவிழா நடத்த இருக்கிறார்கள். மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இ:புதுக்கோட்டையா?அது அவ்வளவு பெரிய ஊரா என்ன?

நா:பெரிய ஊர் இல்லாமல் இருக்கலாம்;ஆனால் பெருமை வாய்ந்த ஊர்!

இந்:ஓகோ,சென்ற ஆண்டு மதுரையில்;இந்த ஆண்டு புதுக்கோட்டையிலா? நம் தேவலோகத்திலும் வலைப்பதிவுகள் தொடங்கினோமே?எப்படி நடக்கிறது நம் வலைப்பதிவுலகம்?

நா:உனக்குத் தெரியாதா இந்திரா?

இந்:எனக்கு அதற்கெல்லாம் நேரமேது நாரதரே?

நா:ஆமாம்,ஆமாம்,நடனம்பார்க்கவே நேரம் போதவில்லை!

இந்:நாரதரே!

நா:தப்பு,தப்பு. முதலில் உற்சாகமாக எழுதினார்கள்.இப்போது யாரும் எழுதுவ தில்லை. பிரம்மா ஒருவர்தான் தலையெழுத்தே என்று எழுதிக் கொண்டிருக் கிறார்

இ.நம் முருகன் சங்கத் தமிழ் பற்றி எழுதலாமே

நா:லாம்! புரிய வேண்டுமே!யாராவது அர்த்தம் கேட்கப் போனால் தலையில் குட்டினாலும் குட்டி விடுவார்!

இ:சரி நான் கணேசனை பயணப்பதிவு எழுத வேண்டிக் கொள்கிறேன்

நா:நல்ல யோசனை.அவர் மூஞ்சூற்றின் மீது ஏறி தேவலோகத்த்லிருந்து கைலாயம் போகவே ஒரு வருடம் ஆகும்,.ஒரு வருடத்துக்குக் கவலையில்லை!

இ:ரம்பா,மேனகை ,ஊர்வசி அனைரும் ஆடல் பாடல் பற்றி எழுதட்டும்.

நா:மெதுவாக.உன் முன்னால மானாட மயிலாட மாதிரி ஆடவே நேரம் போதலை.

இ:என்ன நாரதரே?

நா:நல்ல யோசனை என்று சொன்னேன்.

இ:பீமன்,நளன் இருவரும் சொர்க்கத்தில்தானே இருக்கிறார்கள்?

நா:ஆம் பீமன் சாப்பிட்டுச் சாப்பிட்டு இன்னும் பருத்து விட்டான்

இ: அவர்கள் சமையற்குறிப்புகள் எழுதட்டும்,விச்வகர்மா கட்டிடக்கலை பற்றி எழுதுவார்.

நீங்கள் கிசு கிசு எழுதுங்கள் நாரதரே.அதுதான் உமக்குச் சரி.



நா: நான் விழாவன்று புதுக் கோட்டைசென்று கண்டு களிக்கப் போகிறேன். தேவேந்திரா நீயும் என்னுடன் வந்து விழாவில் கலந்து கொள்ளேன்.

இந்:நானே நினைத்தேன்;நீங்கள் சொல்லி விட்டீர்கள்,அவசியம் வருகிறேன்.

என்ன நிகழ்ச்சிகள் தெரியுமா நாரதரே!

நா:இன்னும் திட்டமிட்டு முடியவில்லை.அதன் பின் தெரிய வரும்.

இந்:அப்படியா.எப்படிப் போகலாம்?




நா: என்னைப்போல் மறைவாக இருந்தால் சுவை இருக்காது.நீ ஒன்று செய்.குட்டன் என்று ஒரு குசும்புப் பதிவர் இருக்கிறார்;அவர் அநேகமாக விழாவுக்கு வரமாட்டார்.நீ அவரைப் போல் வேடம் தாங்கி வந்து விடு. வேறொருவர் போல் வேடம் போட உனக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்!

இந்:நாரதரே!

நா:தப்பு,தப்பு.

இந்: சரி நாரதரே!அந்தகுட்டன் வந்துவிட்டால்?

நா:வந்தால் வரட்டுமே!அவர் என்ன கௌதமரா?பதிவர் வேடமிட்டு வந்த உன் மேனி முழுவதும் கீபோர்டாகட்டும் என்று சபிக்கவா முடியும்?

இந்:நாரதரே!

நா: தப்பு,தப்பு.

இந்:சரி நாரதரே நாம் செல்வோம்.

 நா:ஆகா!,செல்லுமுன் ஒரு எச்சரிக்கை.நீ வழக்கம்போல் சோம பானம் ,சுராபானம் ஏதாவது குடித்து விட்டு வராதே.வெளியேற்றி விடுவார்கள்.படம் பிடிக்கும் கருவியைக் கட்டுப்பாட்டுடன் உபயோகி.பெண்களைப் படமெடுக் கக்கூடாது.ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இவதாம் சென்னை விழாச் சட்டங்கள்.அதுவே இப்போதும் அனுசரிக்கப் படும் என்று நம்புகிறேன்!(மெதுவாக) உனக்காகவே போட்ட மாதிரிச் சட்டங்கள்!

தேவேந்திரன் தலையாட்டுகிறான்.

இ:அடுத்த ஆண்டு தேவலோகத்தில் கோலாகலமாக விழா நடக்க வேண்டும் அதற்கு நீர்தான் பொறுப்பு நாரதரே

Wednesday, August 19, 2015

ராமு,சோமு மற்றும் பதிவர் திருவிழா!



என்னப்பா,சோமு எஎப்படியிருக்கே?

அடடே! ராமு அண்ணனா?நல்லா இருக்கேண்ணே.உங்களைப் பாத்து நாளாச்சு?

ஆமாம்பா.வெளியூர் போயிருந்தேன்.வேற என்ன முக்கிய விசயம்.?

எங்க முதலாளி அக்டோபர் மாசம் புதுக்கோட்டை போறாராம்.இன்னைக்கு டிக்கெட் எல்லாம் பதிவு செஞ்சிட்டாரு. 

ஏதாவது ஆபிஸ் விசயமா இருக்கும்.

இல்லண்ணே.அங்கே எதோ மாநாடு நடக்கப் போவுதாம்!

என்னது மாலாடா?

போங்கண்ணே! மாலாடும் இல்ல;பூந்தி லட்டும் இல்ல,பதிவர் மாநாடு;சந்திப்பு;திருவிழா   இப்படி என்னல்லாமோ சொன்னாரு.

அதென்னப்பா?

அதாண்ணே.நான் முன்னாலயே சொல்லியிருக்கேன் இல்ல.எங்க ஐயா ஆபிஸ் நேரம் போக வீட்டில் இருக்கும்போதெல்லாம் அந்தக் கம்பியூட்டர் முன்னால உக்காந்து ஏதோ தட்டிக் கிட்டே இருக்காருன்னு.வலைப்பதிவு எழுதறாராம்

என்னப்பா எழுதுவாங்க?கதையா?

கதை,கவிதை,செய்தி,சினிமா,சின்னப்புள்ளயா இருக்கச்சே கிட்டிப்புள் வெளையாண்டது, வாழ்க்கையில நடந்தது,நடக்காதது,சாப்பிட்டது எங்க என்ன சாப்பாடு நல்லாருக்கும்,எப்புடிச் சமைக்கறது அப்படின்னு,ஜோக்,இப்புடி எது வேணா எழுதுவாங்களாம்.எங்க ஐயா சொல்லிட்டிருந்தாரு, குட்டன்னு ஒருத்தர் மொக்கையா எழுதுவாருன்னு!

அப்படியா?

ஆமாண்ணே! அம்மாவுக்கு இதனால கோபம்.வீட்டுக்கு வந்தா கம்பியூட்டர்ல போய் முகத் தைப் புதைச்சுக்கிறீங்க.ஆபிஸ்லயும் எங்க வேலை பாக்குறீங்கன்னு  சத்தம் போடுவாங்க.

ஆபிஸ்லயுமா?

ஆமாங்கண்ணே பிளஸ்ஸோ மைனஸ்ஸோ என்னவோ சொன்னாங்க. அதுல,மத்தியானச் சாப்பாட்டைப் படம் பிடுச்சுப் போடுறது,சாயங்காலம் சுண்டல் பஜ்ஜி ,டீன்னு படம்,போற வழில என்ன நடந்ததுன்னு எழுதறதுன்னு ஏதாவது செஞ்சுக்கிட்டே இருபாய்ங்க போல! அப்புறம் முகநூலாம் அதுல காலை வணக்கம்,மாலை வணக்கம்,சினிமா பாக்கிறேன், சாப்பிடறேன், தூங்கப் போறேன் இப்படியெல்லாம் எழுதுவாங்களாம்.

சுவாரஸ்யமா இருக்குதேப்பா?

வலைப்பதிவுல என்னவோ எலக்சன் மாதிரி ஓட்டெல்லாம் உண்டாம்.எவ்வளவு வந்திச்சு,யார் கருத்துச் சொன்னாங்கன்னெல்லாம் பாத்திட்டிருப்பாங்களாம்! மொய் வசா திருப்பி மொய் வக்கிற மாதிரிப் பழக்கம் அங்கயும் உண்டாம்.

இதுக்கு முன்னால இது மாதிரி மாநாடு நடந்திருக்குதாமா?

ஆமாண்ணே.2012,2013,ரெண்டு வருசமும் சென்னையிலே,போன வருசம் மதுரையில எல்லாம் பிரம்மாண்டமா நடந்துதாம்!அதுனால இந்த வருசம் புதுக்கோட்டைக் காரங்க எல்லாத்தையும் பீட் பண்ணிடனுன்னு முடிவோட வரிஞ்சு கட்டிக்கிட்டுக் களத்தில எறங்கிட் டாங்களாம்.கவிஞர் முத்துநிலவன்னு ஒருத்தர்தான் பொறுப்பேத்துக்கிட்டிருக்காராம்.

நல்லா நடக்கட்டும்,உன் எசமான் போயிட்டு வந்து வெவரம் சொன்னா எனக்கும் சொல்லு. தெரிஞ்சுக்கிறேன்.வர்ரேன்பா.

போயிட்டு வாங்கண்ணே!

Tuesday, August 18, 2015

புயல் சின்னம் உருவாகி விட்டது! அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்.நவம்பர் மாதங்கள் வடகிழக்குப் பருவ மழைக் காலங்கள். வங்காள விரிகுடாவில்.குறைந்த காற்றழுத்தம்,காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிப் புயலாக மாறி நம்  வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்குத் தலைவலி கொடுப்பது வழக்கம். முதலில் சென்னயைத் தாக்கும் என்பார்கள். பின்னர் நெல்லூரைத் தாண்டி என்பார்கள்; கடைசியில் அது ஒரிசாவைத் தாக்கும்.

இம்முறை இப்போதே புயல் சின்னம் உருவாகி விட்டது.அது எங்கு தாக்கும் என்பதும் துல்லியமாகத் தெரிந்து விட்டது;ரமணன் அவர்களின் அறிவிப்பின்றி!

ஆம் புயல்,புதுக்கோட்டையைத் தாக்கப் போகிறது.சரியாக அக்டோபர் மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. 

ஆனால் இப்புயல் சேதப்படுத்தாத புயல்;மகிழ்ச்சி தரும் புயல்;அனுபவப் புயல்; இலக்கியப் புயல்; பல்சுவைப் புயல்.

புயலின் பிரம்மாண்டம் இப்போதே தெரியத் தொடங்கி விட்டது.நாள் நெருங்க நெருங்க இதன் வலிமை புலப்படும்.இது ஒரு புயலல்ல;பல புயல்களின் சங்கமம்.

இப்புயலுக்கு வலிமை சேர்க்கப்போகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள லாம். இப்புயலின் தாக்கத்தில் அமிழப்போகிறவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

மென்மேலும் இப்புயலுக்கு எவ்வாறு வலிமை சேர்க்க முடியும்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!

ஒலிக்கட்டும் வெற்றி முரசு!


Sunday, August 16, 2015

சிரித்து வாழ வேண்டும்!


ஒரு பெண் அலுவலகத்திலிருந்து இரவு மிகத் தாமதமாக வந்தாள்;நேராக பக்கக் கதவின் மூலம் நுழைந்து படுக்கையறைக்குச் சென்றாள்.அங்கு கட்டிலில் போர்த்திய போர்வைக்கு வெளியே கணவனின் ஒரு ஜோடிக் கால்களுக்குப் பதில் இரு ஜோடிக் கால்கள் தெரிந்தன. அவள் கோபத்துடன் அங்கிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அந்தப் போர்வை மீது ஓங்கி நாலைந்து முறை அடித்து விட்டு சமையலறைக்குப் போய்,தண்ணீர் குடித்து விட்டு வரவேற் பறைக்கு வந்தாள்

அங்கு அவள் கணவன் அமர்ந்து சேய்திதாள் படித்துக் கொண்டிருந்தான்

அவளைப் பார்த்துச் சொன்னா.ன்”அன்பே!உன் பெற்றோர் திடிரென்று வந்து விட்டனர். அவர்களுக்கு நம் படுக்கையறையைக் கொடுத்து விட்டேன்.அவர்களைப் போய் பார்த்து விட்டு வந்து விடு!”

(குமுதத்தில் படித்தது)