Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, November 3, 2015

மொச்சைக் கொட்டைச் சுண்டல்!



முஸ்கி!:இதைப் படிக்குமுன் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி அருகில் வைத்துக் கொள்ளவும்!

நவராத்திரியின்போது நண்பர் வீட்டுக் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள்

போயிருந்தேன்

அன்று அவர்கள் வீட்டில் மொச்சைக் கொட்டை சுண்டல்

ஒரு தொன்னையில் கொடுத்தார்கள்.

அப்படி ருசியான சுண்டல் நான் சாப்பிட்டதே இல்லை.

சாப்பிட்டு முடித்தேன்

நாக்கு இன்னும் வேண்டும் என ஏங்கியது

சப்புக்கொட்டியது

அவர்கள் புரிந்து கொண்டு இன்னும்கொஞ்சம் தரவா என்றார்கள்

தலையசைத்தேன்

வந்தது; சாப்பிட்டேன்

இன்னும் கொஞ்சம் கேட்க ஆசை.ஆனால் தயக்கமாக இருந்தது.

புறப்படும் போது ஒரு பொட்டலம் கட்டிக் கொடுத்தார்கள்

வீடு செல்லும் வழியில் அதையும் காலி செய்தேன்

விட்டை அடையும்போது வயிற்றில் ஒரே கடமுடா!

என் மனைவி எங்கே போயிட்டிங்க?உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறி என் கண்களைத் துணியால் கட்டி அழைத்துச் சென்று நாற்காலியில் உட்கார வைத்தாள்

நான் சொல்லும் வரை திறக்கக் கூடாது என்று சொல்லும்போதே அடுத்த அறையில் போன் அடித்தது;அவள் போய்விட்டாள்

நிம்மதியாகக் கொஞ்சம் வாயுவை வெளியேற்றினேன்

பிறகும் கடமுடா மீண்டும் வாயு.

என்ன நாற்றம்!

மனைவி வந்தான்; கண்கட்டை அவிழ்த்தான்

பார்த்தேன்;

எதிரே என் உறவினர் பலர் மூக்கைப் பொத்தியபடி ”பிறந்துநாள் வாழ்த்துகள்” என்றனர்.

டிஸ்கி:ஆங்கிலத்தில் படித்தது;கொஞ்சம் மாற்றித் தமிழாக்கியிருக்கிறேன்

Tuesday, September 22, 2015

ஹர ஹர மகாதேவ்!



தொ’ல்’லைக் காட்சியில் இராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தேன்.


வானரப்படையினர் போருக்குச் செல்கையில் “ஹர ஹர மகாதேவ்” என்று சொல்லியவாறு செல்கின்றனர்.


அதைக்கேட்டவுடன் எதையோ நினைத்து எனக்குக் ”குபுக் ”என்று சிரிப்பு வந்து விட்டது. 
(குபுக் என்று எப்படிச் சிரிப்பு வரும்?)


நல்ல வேளை அருகில் யாரும் இல்லை.இருந்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வேன்?!


”ஹர ஹர மகாதேவ் கி”


சிரிப்பில்தான் எத்தனை வகை? இதைக் கலைவாணர் தனது ஒரு பாட்டில் அழகாகச் சொல்லி யிருப்பார்;சிரித்துக்காட்டியிருப்பார்.

நமது நகைச்சுவையை ரசித்துப் பிறர் சிரிக்கலாம்; ஆனால் நம்மைப் பார்த்து யாரும் சிரிக்கும் நிலை ஏற்படக்கூடாது! அதைதான் கவிஞர் புலமைப் பித்தன் சொன்னார்”சிரித்து வாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” என்று


நம்மோடு சேர்ந்து சிரிக்கப் பலர் இருப்பர்;ஆனால் நம்மோடு சேர்ந்து அழ எத்தனை பேர் இருப்பார்கள்?


இப்போது சிரிக்கப் போகிறீர்களா ?

அல்லது இதையெல்லாம் படிக்க நேர்ந்ததே என்று அழபோகிறீர்களா?

Thursday, September 17, 2015

தமிழ்மணம் ரேங்கும்,பெயர் மாற்றமும்!



சில நாட்களாக ஒரே யோசனை.

உக்காந்து யோசிச்சாச்சு;நின்னு யோசிச்சாச்சு

ரூம் போட்டுக்கூட யோசிச்சாச்சு

உருப்படியா ஒரு ஐடியாவும் வரலை

நேத்து தூக்கத்தில ஒரு கனவு !

அதில ஒரு சாமியார் வந்து”மகனே!எளிய வழி இதுதான்”னு ஒரு வழியைச் சொன்னாரு

யோசிச்சாச் சரியாத்தான் இருக்குது!

விசயம் இதுதாங்க,

என்னோட பதிவுக்கு நிறைய பேர் வருகை தரணும்

கருத்துச் சொல்லணும்

ஓட்டுப்போடணும்

தமிழ் மணம் ரேங்கில மேல போகணும்

இதை எப்படிச் சாதிக்கலாம்னுதான் யோசனை.

தினம் ஒரு பதிவு எழுதலாம்!

நிறைய பதிவுல போய் பின்னூட்டம் இடலாம்!

நிறைய பேருக்கு ஓட்டுப் போட்டுட்டு,த.ம.+1 ன்னு சொல்லிட்டு வரலாம்

இதெல்லாம் போதாது

அதுக்குத்தான் சாமியார் வழி சொன்னார்!

ரொம்ப எளிசான வழி!

ஆமாங்க

என் பேரை மாத்திக்கப் போறேன்


பல பேர் சோசியங்க கிட்ட போய் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அதிர்ஷ்டப் பெயரா மாத்திக்கிறாங்க இல்ல?  

அது மாதிரி.......

இன்று முதல் என் பெயர் “குட்டன்ஜி

ஆனா இது சரியா இருக்கான்னு நீங்கல்லாம் சொன்னாத்தான் நான் மாத்திக்குவேன்!

வரலாறு காணாத அளவில் வந்து கருத்துச் சொல்வீங்களா?!

Thursday, August 20, 2015

புதுக்கோட்டைக்குப் போகும் நாரதர்!



இடம்:தேவலோகம்,இந்திர சபை.

ரம்பா,ஊர்வசி ஆகியோரின் நடனத்தை தேவேந்திரன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.

நவக்கிரகங்கள்,தேவர்கள் .அஷ்ட திக் பாலகர்கள் எல்லோரும் அமர்ந்திருக் கின்றனர்.

அப்போது நாராயண,நாராயணஎன்ற குரல் கேட்கிறது.

நாரதர் வருகிறார்.

இந்திரன்:வாருங்கள் நாரதரே!பூலோக சஞ்சாரம் எல்லாம் சுபமாக முடிந்ததா?

நாரதர்:ஆகா!தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தேன்.

இந்:அப்படியா?என்ன விசேஷம்?

நா:அக்டோபர் 11ஆம் தேதியன்று தமிழ் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி புதுக் கோட்டையில் நான்காவது வலைப்பதிவர் திருவிழா நடத்த இருக்கிறார்கள். மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இ:புதுக்கோட்டையா?அது அவ்வளவு பெரிய ஊரா என்ன?

நா:பெரிய ஊர் இல்லாமல் இருக்கலாம்;ஆனால் பெருமை வாய்ந்த ஊர்!

இந்:ஓகோ,சென்ற ஆண்டு மதுரையில்;இந்த ஆண்டு புதுக்கோட்டையிலா? நம் தேவலோகத்திலும் வலைப்பதிவுகள் தொடங்கினோமே?எப்படி நடக்கிறது நம் வலைப்பதிவுலகம்?

நா:உனக்குத் தெரியாதா இந்திரா?

இந்:எனக்கு அதற்கெல்லாம் நேரமேது நாரதரே?

நா:ஆமாம்,ஆமாம்,நடனம்பார்க்கவே நேரம் போதவில்லை!

இந்:நாரதரே!

நா:தப்பு,தப்பு. முதலில் உற்சாகமாக எழுதினார்கள்.இப்போது யாரும் எழுதுவ தில்லை. பிரம்மா ஒருவர்தான் தலையெழுத்தே என்று எழுதிக் கொண்டிருக் கிறார்

இ.நம் முருகன் சங்கத் தமிழ் பற்றி எழுதலாமே

நா:லாம்! புரிய வேண்டுமே!யாராவது அர்த்தம் கேட்கப் போனால் தலையில் குட்டினாலும் குட்டி விடுவார்!

இ:சரி நான் கணேசனை பயணப்பதிவு எழுத வேண்டிக் கொள்கிறேன்

நா:நல்ல யோசனை.அவர் மூஞ்சூற்றின் மீது ஏறி தேவலோகத்த்லிருந்து கைலாயம் போகவே ஒரு வருடம் ஆகும்,.ஒரு வருடத்துக்குக் கவலையில்லை!

இ:ரம்பா,மேனகை ,ஊர்வசி அனைரும் ஆடல் பாடல் பற்றி எழுதட்டும்.

நா:மெதுவாக.உன் முன்னால மானாட மயிலாட மாதிரி ஆடவே நேரம் போதலை.

இ:என்ன நாரதரே?

நா:நல்ல யோசனை என்று சொன்னேன்.

இ:பீமன்,நளன் இருவரும் சொர்க்கத்தில்தானே இருக்கிறார்கள்?

நா:ஆம் பீமன் சாப்பிட்டுச் சாப்பிட்டு இன்னும் பருத்து விட்டான்

இ: அவர்கள் சமையற்குறிப்புகள் எழுதட்டும்,விச்வகர்மா கட்டிடக்கலை பற்றி எழுதுவார்.

நீங்கள் கிசு கிசு எழுதுங்கள் நாரதரே.அதுதான் உமக்குச் சரி.



நா: நான் விழாவன்று புதுக் கோட்டைசென்று கண்டு களிக்கப் போகிறேன். தேவேந்திரா நீயும் என்னுடன் வந்து விழாவில் கலந்து கொள்ளேன்.

இந்:நானே நினைத்தேன்;நீங்கள் சொல்லி விட்டீர்கள்,அவசியம் வருகிறேன்.

என்ன நிகழ்ச்சிகள் தெரியுமா நாரதரே!

நா:இன்னும் திட்டமிட்டு முடியவில்லை.அதன் பின் தெரிய வரும்.

இந்:அப்படியா.எப்படிப் போகலாம்?




நா: என்னைப்போல் மறைவாக இருந்தால் சுவை இருக்காது.நீ ஒன்று செய்.குட்டன் என்று ஒரு குசும்புப் பதிவர் இருக்கிறார்;அவர் அநேகமாக விழாவுக்கு வரமாட்டார்.நீ அவரைப் போல் வேடம் தாங்கி வந்து விடு. வேறொருவர் போல் வேடம் போட உனக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்!

இந்:நாரதரே!

நா:தப்பு,தப்பு.

இந்: சரி நாரதரே!அந்தகுட்டன் வந்துவிட்டால்?

நா:வந்தால் வரட்டுமே!அவர் என்ன கௌதமரா?பதிவர் வேடமிட்டு வந்த உன் மேனி முழுவதும் கீபோர்டாகட்டும் என்று சபிக்கவா முடியும்?

இந்:நாரதரே!

நா: தப்பு,தப்பு.

இந்:சரி நாரதரே நாம் செல்வோம்.

 நா:ஆகா!,செல்லுமுன் ஒரு எச்சரிக்கை.நீ வழக்கம்போல் சோம பானம் ,சுராபானம் ஏதாவது குடித்து விட்டு வராதே.வெளியேற்றி விடுவார்கள்.படம் பிடிக்கும் கருவியைக் கட்டுப்பாட்டுடன் உபயோகி.பெண்களைப் படமெடுக் கக்கூடாது.ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இவதாம் சென்னை விழாச் சட்டங்கள்.அதுவே இப்போதும் அனுசரிக்கப் படும் என்று நம்புகிறேன்!(மெதுவாக) உனக்காகவே போட்ட மாதிரிச் சட்டங்கள்!

தேவேந்திரன் தலையாட்டுகிறான்.

இ:அடுத்த ஆண்டு தேவலோகத்தில் கோலாகலமாக விழா நடக்க வேண்டும் அதற்கு நீர்தான் பொறுப்பு நாரதரே