Monday, December 31, 2012

அதிதி தேவோ பவ!



நேற்றைய கிரிக்கெட் பந்தயம்.
நடுவர்களில் ஒருவர் திரு.ரவி-இந்தியர்.
அவர் எடுத்த இரண்டு தவறான முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியவை.
பாகிஸ்தானுக்குச் சாதகமானவை.
முதலாவது,சதம் அடித்த ஜாம்ஷெட் 50 ஐ நெருங்கிக் கொண்டிருந்த போது,அஸ்வின் வீசிய பந்து, மட்டையின் உள் விளிம்பில் பட்டுச் செல்ல முதல் ஸ்லிப்பில் ஷேவாக் அதைப் பிடித்தார்.
ஆனால் நடுவர் அதை அவுட் இல்லையெனச் சொல்லி விட்டார் .
அடுத்து அஸ்வினின் நேராக வந்த பந்தில் யூனுஸ்கான் பெருக்க முயன்று காலில் வாங்கி, சரியான எல்.பி.டபிள்யு ஆக,அதையும் மறுத்து விட்டார்.
விளைவு பாகிஸ்தான் வென்றது.சரியான முடிவு எடுத்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கலாம்.
சரிதான்...
அதிதி தேவோ பவ!(விருந்தினரே கடவுள்)

(இதுவே இந்தியாவுக்குச் சாதகமாகத் தவறான முடிவு எடுத்திருந்தால் வாயை மூடிக் கிட்டு இருப்ப யில்ல?!அம்பையர்,நாள் முழுவதும் நிற்க வேண்டும்.பந்து வீசும் போது,எண்ண வேண்டும், வீசுபவரின் கால்,கோட்டைக் கடக்காது இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும், மட்டையில் படும்போது கவனிக்க வேண்டும் ,கால் மட்டை இரண்டிலும் படும்போது முதலில் எங்கு பட்டது எனப் பார்க்க வேண்டும், சரியான கேட்சா எனக் கவனிக்க வேண்டும்,இப்படி எத்தனையோ;அவரும் மனிதர்தானே.ஒரு கணநேர நிகழ்வைக் கொண்டு முடிவு எடுக்கும்போது தவறு நிகழலாம்.)
..........................................................................
ஒரு அயல்நாட்டுத் தம்பதி தெரியாத்தனமாக சென்னை நகரப் பேருந்தில் ஏறினர், பயங்கரக் கூட்டம் .கூட்டத்தில் நசுக்குண்டு சிறிது நேரம் சென்று இருக்கை கிடைத் தது.ஒரு கல்லூரி மானவர்கள் சிலர்    ஏறி அயல் நாட்டவரை பார்த்த்தும்,தங்கள் ஆங்கிலத்தில் உரக்கப் பேசிக்கொண்டும்,கலாட்டா செய்து கொண்டும் வந்தனர்.ஒரு மாணவர் அவர்கள் இருக்கையை ஒட்டிய ஜன்னலில் வெளிப்புறம் தொங்கி யவாறே கலாட்டா செய்து வந்தார்.
போக்குவரத்துக் காவலர் ஒருவர் வந்து நிலமையைச் சரி செய்தார்.
மிக நல்ல அபிப்பிராயம்  எற்பட்டிருக்கும்!
அதிதி தேவோ பவ!

(செய்திகள் உபயம்:டைம்ஸ்  ஆஃப் இந்தியா)
.............................................................
இந்த வலைப்பூவை இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் மலரச் செய்தேன்.
இரண்டு முறை வலைச்சர அறிமுகம் கிடைத்தது.
ஒரு பதிவர் என்னை இந்த ஆண்டின் நம்பிக்கையளிக்கும் பதிவர்களில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தமிழ்மண ரேங்க் 28 .
இதற்கெல்லாம் காரணம் இந்த வலைப்பதிவின் விருந்தினர்களான நீங்கள்தான்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.
அதிதி தேவோ பவ!
....................................................

Sunday, December 30, 2012

சண்டேன்னா ஒண்ணு!



இன்று இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் மட்டையடிப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

இந்திய அணி மிக மோசமான நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் ஓரளவுக்கு மரியாதைக்குரிய மொத்த ஓட்டத்தை  அடைவதற்கு உதவினார்கள்.

மழை வந்திருந்தால் தோற்றிருக்க வேண்டாம்!

இந்தியா பாகிஸ்தான் பற்றிய ஒரு ஜோக்!........

சவுதி அரேபியாவில் மது அருந்துவது குற்றம்.

ஒரு ஜெர்மானியர் ,ஒரு பாகிஸ்தானியர்,ஒரு இந்தியர்  மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்கள் வேண்டு வது  ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச்  சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.
பாகிஸ்தானி  தன் முதுகில் இரு தலையணை கட்டச் சொன்னான்;

பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.

மூன்றாவது இந்தியன்.,

ஷேக் சொன்னார்”எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்’

இந்தியன் கேட்டான்”எனக்கு 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”

ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்..”அடுத்தது”…

”இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில் கட்டுங்கள்!”

இது எப்புடி இருக்கு?!

Saturday, December 29, 2012

ஒரு முதியவரின் புலம்பல்!



இப்போதெல்லாம் மாடிப்படிகள் செங்குத்தாகி விட்டன

கடையில் வாங்கும் பொருள்கள் கனமாகி விட்டன

நேற்று நடக்கையில்தான் கவனித்தேன்,

எங்கள் தெரு நீண்டு விட்டது.

இளைஞர்களுக்கு மரியாதை என்பதே இல்லாமல் போய் விட்டது.

நம்முடன் பேசும்போது  வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள்,

எத்தனை சொன்னாலும் அவ்வாறே செய்கிறார்கள்

நான் வாய் அசைவைக்கொண்டு அறியவா முடியும்?!

அவர்கள் வயதில் நான் இருந்ததை விட

அவர்கள் இளமையாயிருக்கிறார்கள்.

ஆனால் என் வயதையொத்த பிறர் எல்லாம்

என்னை விட முதுமையடைந்திருக்கிறார்கள்.

நேற்று பழைய நண்பன ஒருவனைப் பார்த்தேன்

தொண்டுக்கிழமாகி விட்டான், என்னைத்

தெரிந்து கொள்ள முடியவில்லை அவனால்!

அவனைப் பற்றி நினைத்துக்கொண்டே

கண்ணாடி முன் நின்று தலை சீவிக்கொண்டேன்

கண்ணாடியில் தெரிவது யார்?

ஹூம்!

இக்காலத்தில் கண்ணாடிகளும் தரம் குறைந்து விட்டன!

Friday, December 28, 2012

பண்டிகைகளும் பலகாரங்களும்!



இந்த இந்துப்பண்டிகைகள் இருக்கின்றனவே,அவை நன்றாக வித விதமான உணவுகளைச் சாப்பிடுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டவையோ எனத் தோன்றுகிறது!

பாருங்களேன்…..இன்று திருவாதிரை..

சேந்தனார் பேரைச் சொல்லிக் களி,அதற்குத் துணையாக ஏழு கறிக்கூட்டு.களியில் கிடக்கும் முந்திரிப் பருப்புகள்,களியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சாப்பிட்டால்...ஆகா !

அடுத்து பொங்கல் திருநாள்.நெய் சொட்டச் சொட்டச் சர்க்கரைப் பொங்கல்(ஆமாம்,அது வெல்லப் பொங்கல்தானே,பின் ஏன் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்கிறோம்?!),மெது வடை.பொழுது போகவில்லை என்றால் கடித்துத் துப்பக் கரும்பு! பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று பல வீடுகளில் போளி செய்வார்கள்.அந்தப் பருப்புப் போளியில் நல்ல நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டுமாம்…(ஹத்து போளி டப்பா நெய்!)

ராமநவமி!பானகம்,நீர்மோர்,வடைப் பருப்பு எனவித்தியாசமான ஐட்டங்கள்!

ஜன்மாஷ்டமி!குழந்தை கண்ணனின் பேரைச் சொல்லி நொறுக்குவதற்கு முறுக்கு, சீடை, அப்பம் வகையறாக்கள்.வெண்ணை வேறு.எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் வெண்ணையில் சர்க்கரை சேர்த்து உருட்டி விழுங்குவார்கள்....சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

விநாயகர் சதுர்த்தி...விநாயகருக்கு மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் பிடிக்கும்,எனவே அவர் கையிலேயே மோதகத்தைக் கொடுத்து விட்டோம்!மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலைக் குறிக்கும்!இந்தக் கொழுக்கட்டையிலேயே வெல்லக் கொழுக்கட்டை,உப்புக் கொழுக்கட்டை தவிர சிலர் எள்ளுக் கொழுக்கட்டை வேறு செய்வார்கள்.இத்தோடு பல விதமான பழங்கள் ”கபித்த, ஜம்புபலம்” என்று சொல்வார்கள்.அதாவது விளாம்பழம், நாவல்பழம்.அளவில்லாமல் கொழுக் கட்டை   தின்றால்,இந்தப் பழங்கள் ஜீரணத்துக்கு உதவுமாம்!

விதவிதமான இனிப்புகள் சாப்பிடுவதற்காக இருக்கவே இருக்கிறது தீபாவளி.வெறும் இனிப்பு போதுமா?காரம்,மிக்சர்,காராசேவு,ஓமப்பொடி என்று பலவும்.

கார்த்திகையன்று பொரி..அவல் பொரி,நெல்பொரி என இரண்டு வகைகள்.வெல்லப்பாகில் மூழ்கியவை.பலர் அப்பம்,வடை,அடையும் கூடச் செய்வார்கள்.

இவை தவிர பல சாதாரண விசேட தினங்களில் கண்டிப்பாகப் பாயசம் உண்டு…..சேமியா பாயசம்,அவல் பாயசம்,பால் பாயசம்,காரட் பாயசம்,பாதாம் பாயசம்,கேரளாவின் அடைப் பிரதமன்,சக்கைப் பிரதமன் என்று பெரிய லிஸ்ட்!மெது வடை,மசால் வடைகளும் உண்டு.மசால் வடைக்குப் வேறு பெயர்கள் பருப்பு வடை,ஆம வடை(ஆமை முதுகு போல் இருப்பதாலா?!)

ஆனால் அந்த நாளில் அதிக உடல் உழைப்பு இருந்தது,சாப்பிட்டது செரிமானம் ஆயிற்று. 

இந்நாளில் …

மறுநாள் சீரண மாத்திரைகளே துணை!

Thursday, December 27, 2012

குஷ்புவின் சத்தமில்லாத சமூக சேவை!



ரயில் நிலையம்.

நடை மேடையில் ஒரு கோடி.

அங்கேயே வாழ்ந்து அங்கேயே பணிபுரியும் சிறுவர்கள் கூட்டம்….

ஒரு பெண்ணைச் சுற்றி…

அந்தப்பெண்....

அவர்கள் நலனுக்காகப் போராடுபவள்.

சிறுவர்கள் ஏன் வீட்டை விட்டு ஓடிப் போகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு ஆய்வு மேற் கொண்டிருக்கும் பெண்.

சில மாதங்களுக்கு முன் இதே ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமே அவளை அந்தச் சிறுவர்களுக்காகப் பணி செய்யத் தூண்டியது.

அந்தநாள்….

ரயில் நிலையத்தில் கிடைக்கும் சீசாக்கள்,காகிதம்,குப்பைகளை விற்றுச் சம்பாதிக்கும் ஒரு சிறுவன்,ஒடும் ரயிலில் அகப்பட்டுச் சின்னா பின்னமான நாள் .

அதை அவள் பார்க்க நேர்ந்தது.

நீண்ட நேரம் அவ்வுடல் தண்டவாளத்தின் அருகிலேயே கிடந்தது.

மனிதர்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள்-எதுவுமே நடக்காத மாதிரி.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெகு நேரமாயிற்று

அந்த நிகழ்ச்சி அவளை வெகுவாக உலுக்கியது.

எந்தவித பாதுகாப்பும் இல்லாத,யாராலும் கண்டு கொள்ளப்படாத அந்தச் சிறுவர்களின் வாழ்வுக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தாள்.

தேசிய சிறுவர் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய சிறுவர் நலனுக்காகச் சில வழிகாட்டுதல்கள் விதித்துள்ளது.

அவை அமுல் படுத்தப் பட வேண்டும் என நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்திருக்கிறாள் அப்பெண்.

பல அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து அச்சிறுவர்களுக்காகப் போராடி வருகிறாள், இந்த,வசதியான குடும்பத்தில் பிறந்த,பட்ட மேற்படிப்பும் முனைவர் பட்டமும் பெற்ற இந்த இளம் பெண்.

இவள் பெயர்...குஷ்பு ஜெயின்...

இடம்...புது தில்லி ரயில் நிலையம்.

அவளுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.


ஆதாரம்:டைம்ஸ் ஆஃப் இந்தி