Friday, April 11, 2014

பழம் வேண்டும்;மரம் வேண்டாம்!-2

இந்த உருவகக்கதை, எத்தனையோ குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சி.
பெற்றவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து, பட்டினியிருந்து, போராடி பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள். வளர்ந்து, கை நிறைய சம்பாதித்துக்கொண்டு, திருமணமானபின், பெற்றவர்கள் பிள்ளைகளின் கண்களுக்கு மிகவும் வேண்டாத அருவருப்பான, உருவங்கள். அவர்கள் அளிக்கின்ற தொல்லையில் மனம் அடிபட்ட நிலையில், பெற்றோர்கள் எங்கோ ஒரு மூலையில்!

வளர்த்துவிட்ட மரங்களுக்கு மரியாதை இல்லை; ஆனால் பழங்கள் ஜொலிக்கின்றன!
நாம் நம்முடைய பெற்றோர்களை, தாத்தா, பாட்டியினரை இன்னும் மதிக்கின்றோமா?
ஆயிரம் இடர்ப்பாடுகளுக்கிடையில் நம்மை வளர்த்து உருவாக்கிய அவர்களை நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறோமா?
“பழங்கள் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால், காய்களின் மீது தண்ணீர் ஊற்றாதீர்கள். வேர்களின் மீது நீரூற்றுங்கள்” என்று கூறுவார்கள்.
பழங்களுக்காகக் காட்டுகின்ற அக்கறையில், ஒரு பகுதியை வேர்களுக்குக் காட்டினால் என்ன?
ஏனோ தெரியவில்லை, இது உலகத்தின் சாபக்கேடாக அமைந்துவிட்டது. நல்லது செய்யும் மாமனிதர்களை இவ்வுலகம் வாழ வைப்பதில்லை;

* ஒரு கட்சியை உருவாக்க ஆரம்பகாலத்தில், வியர்வையும், குருதியும் சிந்திய தொண்டர்கள் இன்று ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாமல் திண்டாடுவதை நீங்கள் பார்த்ததில்லையா?
* ஒரு தொழிற்சாலை தொடங்கிய காலத்தில் 24 மணிநேரமும், அதே சிந்தனையோடு உழைத்த ஆரம்ப காலத் தொழிலாளர்களுள், எத்தனை பேர் இன்று விதியை நொந்தபடி, “என்றைக்கு வேலையை விட்டு வெளியேறுவோமோ?” என்ற அச்சத்தில் உழைக்கிறார்கள் என்று நாம் அறிய மாட்டோமா?
* ஆரம்பப் பள்ளியிலிருந்து பல்வேறு நிலைகளில் படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை எத்தனை இளைஞர்கள் அலட்சியப் பார்வை பார்த்தபடி நடக்கிறார்கள்” என்று நமக்குத் தெரியாதா?
வேர்களையும், மரங்களையும் அலட்சியப்படுத்தும் இந்த அவலநிலையை, அன்றாடம் காணும்போதெல்லாம் நெஞ்சம் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறது!
” நம் பெற்றோர்களை நாம் அலட்சியப்படுத்தினால் – வரலாறு திரும்பும் – நமக்கும் அதே நிலைமைதான்” என்று ஏன் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
இந்த மனப்பான்மையில் எத்தனைக் கலாச்சார சீரழிவுகள்.
ஆங்கிலத்தின் ஆதிக்கம் வந்தபிறகு, அன்னைத் தமிழை எவ்வளவு கொச்சைப் படுத்துகிறோம்?
புதிய நாகரிகங்கள் வலம் வர ஆரம்பித்தவுடன் நம்முடைய கலாச்சாரமும் பண்பாடுகளும் எவ்வளவு வேகமாக மறைய ஆரம்பித்துவிட்டன!
இன்றைய வேகமான, மாறிவரும் உலகத்தில் “மாற்றங்கள்” நிச்சயமாகத் தேவைதான்!
ஆனால் அதற்காக பழமையை ஒதுக்கவேண்டும், அவமதிக்க வேண்டுமென்ற அவசியமில்லையே!
 
முதுமைக்கும் அழகிருக்கிறது!
பழமையிலும் நிறைய சிறப்புகளிருக்கின்றன!
முன்னோர்கள் கூறிய செய்திகளில் ஏராளமான நற்செய்திகள் மண்டிக் கிடக்கின்றன!
உருவாக்கியவர்களுடைய தியாகங்கள் சொல்லிலடங்காதவை!
நாம் நிற்கின்ற கோபுர உச்சிக்குக் கீழே, எத்துணையோ பேரின் உழைப்புகளும், ஏக்கங்களும்பெருமூச்சுகளும், கனவுகளும் மறைந்திருக்கின்றன.
அவர்களை நன்றியோடு எண்ணிப் பார்ப்போமே? பழங்களைப் பறிக்குமுன், மரத்தை வணங்கிவிட்டு..........
 

வேருக்குத் தண்ணீர் ஊற்றலாமே!

(தமிழ் தாயகம்)

8 comments:

 1. //வேருக்குத் தண்ணீர் ஊற்றலாமே!//
  நல்ல சிந்தனையை பகிர்ந்தமைக்கு நன்றி! இதை இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.

  ReplyDelete
 2. வேரோடு எடுத்து (புடுங்கி) தூர எறிந்த பின்....... எறியப்படும் போது தான் பலருக்கும் தெரிகிறது...

  ReplyDelete
 3. உங்கள் கருத்து முற்றிலும் உண்மை !
  த ம 3

  ReplyDelete
 4. வேருக்குத் தண்ணீர் ஊற்றலாமே!
  வெந்நீர் ஊற்றாமலிருந்தால் சரிதான்..!

  ReplyDelete
 5. வேருக்குத் தண்ணீர் ஊற்றலாமே.....

  சிறப்பான சிந்தனை.

  ReplyDelete
 6. மிகச்சிறப்பான கருத்து! வேருக்கு நீர் ஊற்றுவோம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete