Wednesday, April 3, 2013

மச்சம் பார்க்கலாம் வாங்க!மச்சம் என்றவுடன் நினைவுக்கு வரும் ஒரே பெயர் வசந்த்.

இயக்குனர் வசந்த் அல்ல.

இவர் ஒரு படைப்பாளியின் படைப்பு.

வக்கீல் கணேஷின் உதவியாளர்.

இவரைத்தெரியாதவர்கள் பதிவுலகில் இருக்க மாட்டார்கள்.

வசந்தின் பொழுது போக்கில் ஒன்று, அதுவும் முக்கியமானது மச்சம் பார்ப்பது.

அதுவும் பெண்களுக்கு மட்டும்!

இதைச் சொல்லும் போது என் நண்பர் ஒருவரின் நினைவு வருகிறது.கணேஷுக்கு மச்சம் போல் அவருக்குக் கைரேகை.

அலுவலகத்தில் அழகான பெண்களின் கையைப் பிடித்துத் தடவி ரசிப்பதற்கு அவர் கையாண்ட தந்திரம் ரேகை சாஸ்திரம்!

மச்சத்தில் அப்படி என்ன விசேஷம்!

உனக்கு உடம்பெல்லாம் மச்சம்யா

ஒருவர் அதிர்ஷ்டசாலி என்பதைச் சொல்ல இவ்வாறு சொல்லும் வழக்கம் இருக்கிறது.

மச்சசாஸ்திரம் என்றே ஒன்று இருக்கிறது.

உடலில் எங்கெங்கு மச்சம் இருந்தால் என்னென்ன பலன் என்பது விரிவாக சொல்லப் படிருக்கிறது

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பலன்கள் வேறுபடும்.

அது பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள பல தளங்கள் உள்ளன.

எனவே நான் அதைப்பற்றிச் சொல்லப்போவதில்லை.

ஆனால் மச்சம் இருக்கும் இடத்தைப் பொறுத்து பெண்களின் அழகைக் கூட்டுகிறது!

உதட்டுக்கு மேல்  இருக்கும் மச்சம் ஒரு தனி அழகு!

கழுத்துக்குச் சிறிது கீழே இருக்கும் மச்சமும் அழகுதான்.

இந்த மச்சம் தமிழ்ப் படங்களில் வெகுவாகப் பயன் பட்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்து சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த இரு திரைப் படங்கள்.

மிஸ்ஸியம்மாவில் சிறுவயதில் காணாமற்போன சாவித்திரிக்குக் காலில் மச்சம்;அவளைக் கண்டு பிடிக்க உதவுகிறது.

அதேபோல்,மாமன் மகள் படத்தில் ஜெமினி கணேசனுக்குத்  தோளில்  மச்சம் அவரைக் கண்டு பிடிக்க உதவுகிறது.

“காணவில்லை” விளம்பரங்களில் கூட மச்சத்தை ஒரு முக்கிய அடையாளமாகச் சொல்கி றார்கள்.

இன்று காலை வானொலியில் ஒரு விளம்பரம் கேட்டேன்.

காணாமல் போன ஒரு பெண்ணுக்கு நாக்கில் மச்சமாம்!

 அந்தப் பெண் நாக்கை நீட்டிக் கொண்டே போனால் ஒழியக் கண்டு பிடிப்பது இயலாத செயல்!

மச்சம் என்பது மீனையும் குறிக்கும்.

திருமாலின் அவதாரங்களில் மச்ச அவதாரமும் ஒன்று.

அகராதியில் காணப்படும் மற்றொரு பொருள்-மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப்பொன்.

இன்று மச்சம் பற்றி விரிவாகத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

உங்களுக்கு உடம்பெல்லாம் மச்சம்தான்!


22 comments:

 1. Replies
  1. அப்படியா?ஹி..ஹி..
   நன்றி சௌந்தர்

   Delete
 2. மச்சப் பதிவு படிச்சதாலா மிச்சப் பதிவுகள் படிக்க மறந்துட்டேன். குட்டன்.

  ReplyDelete
  Replies
  1. மச்சம் பாத்தாச்சுல்ல!...படிச்சாச்சுல்ல!அது போதும்!
   நன்றி டி.என்.எம்

   Delete
 3. மச்சத்தைப் பற்றி இவ்வளவு விரிவான ஆராய்ச்சியா? மச்ச சாžஸ்திரம்னு ஒண்ணு இருக்கா என்ன..? வியப்பு! நீங்க சொல்ற வஸந்த் ஒரு நாவல்ல சொல்லுவார்... ‘‘உனக்கு உடம்புல எங்கெங்கல்லாம் மச்சம் இருக்குன்னு காட்டு... ஐ மீன், சொல்லு! நான் அங்கங்கல்லாம்... ஸாரி, அதுக்கெல்லாம் பலன் சொல்றேன்’’ என்று. ‘‘பழனிவேல் அந்த மூணு பேரோட இவனையும் சேத்து அரெஸ்ட் பண்ணிட்டுப் போங்க’’ என்பார் கணேஷ்! ஹி... ஹி...

  ReplyDelete
 4. எல்லா தலைப்புகளிலும் பதிவு எழுதும் உங்களுக்கு கூட உடம்பெல்லாம் மச்சம் என நினைக்கிறேன்!

  ReplyDelete
 5. ஹா... ஹா... நல்ல ஆராய்ச்சி...!?!

  பழைய படங்களை ஞாபகம் வைத்துள்ளீர்களே...!

  ReplyDelete
  Replies
  1. இரண்டுமே இப்போதுதான் தொலைக்காட்சியில் பார்த்தேன்!
   நன்றி தனபாலன்

   Delete
 6. Replies
  1. நன்றி கண்ணதாசன்

   Delete
 7. வல்லவனுக்கு புல் மட்டுமல்ல
  மச்சம் கூடத்தான் என இந்தப் பதிவைப் படித்ததும்
  புரிந்து கொண்டேன்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. மச்ச ஆராய்ச்சி! :)

  தொடரட்டும் உங்கள் குசும்புகள்!

  ReplyDelete
  Replies
  1. //தொடரட்டும் உங்கள் குசும்புகள்!//
   எல்லாருமா என்னை குசும்பு குட்டன் ஆக்கிட்டீங்க!
   நன்றி வெங்கட் நாகராஜ்

   Delete
 9. //அந்தப் பெண் நாக்கை நீட்டிக் கொண்டே போனால் ஒழியக் கண்டு பிடிப்பது இயலாத செயல்!// ஹா ஹா ஹா

  கணேஷ் வசந்த் என்றது ஓடோடி வந்துவிட்டேன்...

  ReplyDelete