Thursday, August 15, 2013

கலை நிலை குலைந்தாலே உருப்படுமா?

இந்தப் பகிர்வின் கருத்துகளோடு மற்ற இளைஞர்கள் வேறுபடலாம்.

ஆனால்  என் ரசனையே வேறு.


இக்காலத் திரைப்படங்களில்  இடம் பெறும் பெரும்பாலான பாடல்களையும்,நடனங்களையும் பார்க்கும்போது வேதனையாயிருக்கிறது.

பல பாடல்களில் தமிழைத் தேட வேண்டியிருக்கிறது

மிகச் சிறந்த பாட்டாக,பிரபலமாக இருக்குமொரு பாடல் தமிழ்க் கொலை வெறியான ஒரு பாடல்

எந்தத் திரைப்படத்திலும் கட்டாயம் ஒரு குத்துப்பாட்டு,அதற்கு வலிப்பு வந்தது போல் ஒரு நடனம்!

இசை,நடனம்  என்பவை மனதுக்கு இதம் தருவதாக இருந்தகாலம் போய்,மனதைப் பேயாட்டம் போடச் செய்வதாய் மாறி விட்டது.

வாத்தியங்களின் கூச்சல் இன்றி,அழகு தமிழில் இனிமையான பாடல்கள் படங்களில் இடம் பெற்ற காலம் அந்தக்காலம்

தொலைக்காட்சியில் பார்க்கும் அக்காலத் திரைப்படங்களில்,நடனம் என்றால் குமாரி கமலா, லலிதா பத்மினி போன்றோரின் சாஸ்த்ரிய நடங்கள் இடம் பெற்றன.அவற்றை இன்றும் பார்க்கும் போது மனம் சாந்தி பெறுகிறது

ஆனால் இன்றோ?..............

இந்த அவலத்தை.1964 இல் வெளி வந்த என்னதான் முடிவு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று படம் பிடித்துக் காட்டுகிறது(இன்று யூ ட்யூபில் படம் பார்த்தேன்; கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அவர்களின் மிகச் சிறந்த படம்)

”கலைதனில் விழுந்த களையெடுப்பாய்
கையினில் சக்தி வேலெடுத்தே-தமிழ்க்
கலையினில் புகுந்த களையெடுப்பாய்

அலைதனில் ஓங்காரம் அமைத்தவனே
பொதிகை அகத்தியர்க்குத் தமிழை அளித்தவனே(கலையினில்)

ஆனந்தத் தாண்டவன் நமதாண்டவன்
திருத்தாண்டவன்,தில்லை ஆண்டவன்

ஏனிந்த இசைப் பிச்சை தமிழ் நாட்டிலே-முருகா
எத்தனை கலப்படம் தமிழ்ப்பாட்டிலே?

அயல் நாட்டுக்கலை மோகம் தணியாமலோ
அன்றி அருமை ரசிகனை நம்பத் துணியாமலோ
ஆடலிலே புகுந்த கேட்டைப் பாரு
பரதம் ஆடியகால்கள் படும் பாட்டைப் பாரு

கூ கூ கூ வென்று ஒரு பாடலா
காதைக் குடையும் சத்தம் ராக் அன் ரோல் ஆடலா?
நடையில்லை;சடையில்லை
இடையில்லை;உடையில்லை
அன்ன நடையில்லை
பின்னல் சடையில்லை
மின்னல் இடையில்லை
மேலே உடையில்லை!

கலை மிகு தமிழ் நாட்டில் கலப்படமா
கலையைக் காசுக்கு விற்போர்க்குப் புலப்படுமா
கலை நிலை குலைந்தாலே உருப்படுமா
மற்றக் கலைஞர்கள் நம்மைக் கண்டு சிரிக்கணுமா”

சீர்காழி அவர்களின் வெண்கலக் குரலில் உணர்ச்சிகரமான பாடல்

50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலை என்றால் இன்று...........

தமிழ்க் கடவுள் முருகனும் தந்தை நடராஜனும்தான் காப்பாற்ற வேண்டும்!

7 comments:

 1. என்னதான் முடிவு என்றால் இரசிகர்களாகிய நாம் தான் இப்படிப்பட்ட பாடலாகளை புறந்தள்ளவேண்டும். ஆனால் உங்களைப்போன்ற இளைஞர்கள் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லையே. என் செய்ய! நீங்கள் சொன்னதுபோல் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

  ReplyDelete
 2. எதையும் எண்ணிக்கையே முடிவு செய்யும்
  இந்தக் காலச் சூழலில் இவைகள் எல்லாம்
  தவிர்க்க முடியாதவைகளே
  மனம் கவர்ந்த பதிவு
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாத்தியங்களின் கூச்சல் இன்றி,அழகு தமிழில் இனிமையான பாடல்கள் படங்களில் இடம் பெற்ற காலம் அந்தக்காலம்//

  கரெக்டா சொன்னீங்க. MSV இசை, கண்ணதாசன் வரிகள்,சுசீலா,TMS,PBS குரல்.... எத்தனை அழகான காம்பினேஷன். மறக்கமுடியுமா?

  ReplyDelete
 4. உங்கள் கருத்து சரிதான் குட்டன்! ஆனா இது வியாபார உலகம் ! இப்படித்தான் இருக்கும்!!!

  ReplyDelete
 5. தங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்! இன்றைய பாடல்கள் கலைக் கொலை செய்கின்றன! என்பது முற்றிலும் உண்மை!

  ReplyDelete
 6. //வாத்தியங்களின் கூச்சல் இன்றி,அழகு தமிழில் இனிமையான பாடல்கள் படங்களில் இடம் பெற்ற காலம் அந்தக்காலம்//

  சரியாச் சொன்னீங்க.....

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....

  ReplyDelete