ஒரு கண்ணாடியில் என் பிம்பம் கண்டேன்
இத்தனை நாளாய் பார்த்துப் பழகிய உருவம்!
இதோ இன்னொரு கண்ணாடி
என்ன இது ,யார் இது
உடல் பருத்து,தலை சிறுத்து...
மற்றோர் கண்ணாடி
ஓ!நெட்டையாய்,குச்சி போல்!
கண்ணாடிகள் என் உருவத்தை
உன்மையாய் மாற்றுமா!
ஒரு கண்ணாடியில் அழகாய்த் தோன்ற
அதற்கெனப் பெருமிதம் கொள்வதா?
மற்றொன்று என்னை அழகின்றிக்காட்ட
அதற்காக அழுது புலம்புவதா?
வழமையாய்ப் பார்க்கும் ஆடியிலும்
கீறல் விழுந்தால் பிம்பம் சிதையுமே!
பிம்பங்கள் நானல்ல!
சிலர் புகழ்வதால்,பெருமைப்படவா
சிலர் இகழ்வதால் குன்றிப் போகவா!
இவை எதுவுமே நானில்லை!
என்னை நான் அறிய
என்னை நான் பார்க்க
மனமென்னும் கண்ணாடி
அழுக்கற்று,பழுதற்று இருக்க வேண்டும்!
அழுக்காறு, அவா, வெகுளி,இன்னாச் சொல்
இவையின்றி நிர்மலமாய் இருத்தல் வேண்டும்
அனைத்து உயிர்களிடத்தும்
அன்பு வேண்டும்,நிறைந்த அறம் வேண்டும்
என் உருவம் நான் நானாகத் தெரியும்!