Thursday, February 7, 2013

ஒரு பெண்ணின்அழகு- கேசாதி பாத வர்ணனை!

சங்க இலக்கியத்தில் ஒரு பெண்ணின் அழகு தலை முதல் கால் வரை அருமையாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.

கீழ் வரும் பாடற்பகுதி பொருநராற்றுப்படையின் பகுதியாகும்.//அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின் 
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத்  
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் 
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்  
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி  //

இங்கு பாடினியின் அழகு இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது

பாடினி என்றால் பாடகி ;பாணர் குலப் பெண்,பாடல், கூத்தில் தேர்ந்தவள்

அவள் கூந்தல் அறல் போல் இருக்கிறது.ஆற்றின் நீரோட் டத்தால்,வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைக் காண லாம்; அவையே அறல் எனப்படும்;அது போன்ற கூந்தல்

அவளது நெற்றி பிறைநிலா போல் இருக்கிறது.இலக்கியத்தில் எண்ணாட்டிங்கள் என்று சொல்வது  மரபு.

புருவம் வில் போல் வளைந்து இருக்கிறது.

அழகிய இளமையான குளிர்ந்த கண் .

மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாய்

குற்றமற்ற நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல் 

முடி வெட்டும் கத்திரியின் காது போன்றும், பொலியும் மகர நெடுங்குழை அசைவதுமான காது

நாணமிகுதியால் பிறரை நோக்காது சாய்ந்திருக்கும் கழுத்து

அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோள்

நெருக்கமான மயிருடைய முன்கை

நெடிய மலையின் உச்சி போன்ற,காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்கள்  

கிளியின் வாய் போன்ற ஒளி வீசும் நகங்கள்.

பிறரை வருத்தும்,பசலை படர்ந்த,ஈர்க்கும் நடுவே செல்ல முடியாத நெருங்கிய, எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்கள் 

நீரில் தோன்றும் சுழி போன்ற சிறந்த இலக்கணமமைந்த தொப்புள்.

பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடை

பல வண்டுகள் இருப்பதைப் போன்ற பல மணி கோத்த வடங்களைய உடைய   மேகலை  அணிந்த அல்குல்.


பெரிய பிடி யானையின் பெருமையை யுடைய கைபோல ஒழுக வந்து மெல்லிதாகத் தம்மில் நெருங்கி ஒன்றித் திரண்ட துடை .

கணைக்காலுக்கு இலக்கணமாய்ப் பொருந்தின மயிர் ஒழுங்கு பட்ட ஏனை இலக்கணங்கள் திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த ஓடியிளைத்த நாயினது நாக்கு போன்ற சிறிய அடி.

அரக்கை உருக்கின தன்மை ஒத்த நிலத்தில் நடக்கையில் கல் எனும் பகை குத்தி உண்டான இருவாட்சி பூத்தது போல் நீர் ததும்பும் கொப்பளம்.

மயில் போன்ற பாடினி!
 
 


18 comments:

 1. தமிழாசிரியர் பாடம் சொல்வதுபோல், நீங்கள் பதவுரை தந்திருக்காவிட்டால் இந்த கவிதையின் அழகை இரசித்திருக்கமுடியாது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. In those days we use to depend on KONAR URAI. I would say kuttan urai is excellent . Probably you might consider explaining numerous such gems in your own inimitable manner. Shall I say I am also reminded of Suhasini singing a simple song in TAMIL which is understood by one and all in SINDUBAIRAVI. VASUDEVAN

  ReplyDelete
 3. அழகிய வர்ணனை சிறப்புங்க.

  ReplyDelete
 4. நல்லதொரு பகிர்வு! இதை உங்க ஸ்டைல்ல வர்ணிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்! ஆனா சிலவற்றை அப்படி செய்ய முடியாதுதான்! நன்றி!

  ReplyDelete
 5. குட்டன் ஐயா.... நான் ஏற்கனேவே படித்தப் பாடல் தான் என்றாலும்
  மீண்டும் படித்த போதும் அதைவிட இன்பமாக இருந்தது.

  அதிலும் அந்தக் கடைசி வரி.... பாடிணியின் பாதத்தை
  ஓடி இளைத்த நாயின் நாக்கிற்கு உவமையாக்கியதை நினைத்து
  ஆச்சர்யப்பட்டப் பாடல் இது.
  மீண்டும் உங்கள் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.

  (நான் தலைப்பைப் பார்த்து
  ஏதோ “ஜொள்ளு“ விசயமாக... அதிலும்
  புதுமுறையாக இருக்கும் என்று நினைத்தே வரவில்லை.)

  பகிர்விற்கு நன்றி.  ReplyDelete
  Replies
  1. நன்றி அருணா செல்வம்

   Delete
 6. ஆஹா... தமிழ்ப் பாடலின் இனிமையும் சரி... உவமைகளும் சரி... அதற்கு அழகாய் நீங்கள் தந்திருக்கும் எளிய விளக்கமும் சரி.... ஒன்றையொன்று விஞ்ச போட்டியிடுகின்றன. அருமை! தொடர்ந்து இதுபோன்று நிறைய எழுதுங்கள் நண்பா!

  ReplyDelete
 7. உங்கள் பொழிப்புரை அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கும்மாச்சி

   Delete
 8. Kuttan!..ஓ!..மிக மிக அருமை!...அருமை!...
  பதவுரை தராவிடில் யாரால அப்பா புரிய முடியும்.
  மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.

  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. அருமையான வர்ணனை.

  ReplyDelete