இடம்:தேவலோகம்,இந்திர சபை.
ரம்பா,ஊர்வசி ஆகியோரின் நடனத்தை தேவேந்திரன் தன்
சிம்மாசனத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.
நவக்கிரகங்கள்,தேவர்கள் .அஷ்ட திக் பாலகர்கள் எல்லோரும்
அமர்ந்திருக் கின்றனர்.
அப்போது “நாராயண,நாராயண” என்ற குரல் கேட்கிறது.
நாரதர் வருகிறார்.
இந்திரன்:வாருங்கள் நாரதரே!பூலோக
சஞ்சாரம் எல்லாம் சுபமாக முடிந்ததா?
நாரதர்:ஆகா!தமிழ்நாட்டுக்குச்
சென்றிருந்தேன்.
இந்:அப்படியா?என்ன விசேஷம்?
நா:அக்டோபர் 11ஆம் தேதியன்று தமிழ்
வலைப்பதிவர்கள் ஒன்று கூடி புதுக் கோட்டையில் நான்காவது வலைப்பதிவர் திருவிழா
நடத்த இருக்கிறார்கள். மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இ:புதுக்கோட்டையா?அது அவ்வளவு பெரிய ஊரா
என்ன?
நா:பெரிய ஊர் இல்லாமல் இருக்கலாம்;ஆனால்
பெருமை வாய்ந்த ஊர்!
இந்:ஓகோ,சென்ற ஆண்டு மதுரையில்;இந்த
ஆண்டு புதுக்கோட்டையிலா? நம் தேவலோகத்திலும் வலைப்பதிவுகள் தொடங்கினோமே?எப்படி நடக்கிறது நம் வலைப்பதிவுலகம்?
நா:உனக்குத் தெரியாதா இந்திரா?
இந்:எனக்கு அதற்கெல்லாம் நேரமேது நாரதரே?
நா:ஆமாம்,ஆமாம்,நடனம்பார்க்கவே
நேரம் போதவில்லை!
இந்:நாரதரே!
நா:தப்பு,தப்பு. முதலில் உற்சாகமாக
எழுதினார்கள்.இப்போது யாரும் எழுதுவ தில்லை. பிரம்மா ஒருவர்தான் தலையெழுத்தே என்று
எழுதிக் கொண்டிருக் கிறார்
இ.நம் முருகன் சங்கத் தமிழ் பற்றி
எழுதலாமே
நா:லாம்! புரிய வேண்டுமே!யாராவது
அர்த்தம் கேட்கப் போனால் தலையில் குட்டினாலும் குட்டி விடுவார்!
இ:சரி நான் கணேசனை பயணப்பதிவு எழுத
வேண்டிக் கொள்கிறேன்
நா:நல்ல யோசனை.அவர் மூஞ்சூற்றின் மீது
ஏறி தேவலோகத்த்லிருந்து கைலாயம் போகவே ஒரு வருடம் ஆகும்,.ஒரு வருடத்துக்குக்
கவலையில்லை!
இ:ரம்பா,மேனகை ,ஊர்வசி அனைரும் ஆடல்
பாடல் பற்றி எழுதட்டும்.
நா:மெதுவாக.உன் முன்னால மானாட மயிலாட
மாதிரி ஆடவே நேரம் போதலை.
இ:என்ன நாரதரே?
நா:நல்ல யோசனை என்று சொன்னேன்.
இ:பீமன்,நளன் இருவரும்
சொர்க்கத்தில்தானே இருக்கிறார்கள்?
நா:ஆம் பீமன் சாப்பிட்டுச் சாப்பிட்டு
இன்னும் பருத்து விட்டான்
இ: அவர்கள் சமையற்குறிப்புகள்
எழுதட்டும்,விச்வகர்மா கட்டிடக்கலை பற்றி எழுதுவார்.
நீங்கள் கிசு கிசு எழுதுங்கள்
நாரதரே.அதுதான் உமக்குச் சரி.
நா: நான் விழாவன்று புதுக் கோட்டைசென்று
கண்டு களிக்கப் போகிறேன். தேவேந்திரா நீயும் என்னுடன் வந்து விழாவில் கலந்து
கொள்ளேன்.
இந்:நானே நினைத்தேன்;நீங்கள் சொல்லி விட்டீர்கள்,அவசியம் வருகிறேன்.
என்ன நிகழ்ச்சிகள் தெரியுமா நாரதரே!
நா:இன்னும் திட்டமிட்டு
முடியவில்லை.அதன் பின் தெரிய வரும்.
இந்:அப்படியா.எப்படிப் போகலாம்?
நா: என்னைப்போல் மறைவாக இருந்தால் சுவை
இருக்காது.நீ ஒன்று செய்.குட்டன் என்று ஒரு குசும்புப் பதிவர் இருக்கிறார்;அவர் அநேகமாக விழாவுக்கு வரமாட்டார்.நீ அவரைப்
போல் வேடம் தாங்கி வந்து விடு. வேறொருவர் போல் வேடம் போட உனக்குச் சொல்லியா கொடுக்க
வேண்டும்!
இந்:நாரதரே!
நா:தப்பு,தப்பு.
இந்: சரி நாரதரே!அந்தகுட்டன்
வந்துவிட்டால்?
நா:வந்தால் வரட்டுமே!அவர் என்ன கௌதமரா?பதிவர் வேடமிட்டு வந்த உன் மேனி முழுவதும்
கீபோர்டாகட்டும் என்று சபிக்கவா முடியும்?
இந்:நாரதரே!
நா: தப்பு,தப்பு.
இந்:சரி நாரதரே நாம் செல்வோம்.
நா:ஆகா!,செல்லுமுன் ஒரு எச்சரிக்கை.நீ வழக்கம்போல் சோம பானம் ,சுராபானம் ஏதாவது குடித்து விட்டு வராதே.வெளியேற்றி விடுவார்கள்.படம்
பிடிக்கும் கருவியைக் கட்டுப்பாட்டுடன் உபயோகி.பெண்களைப் படமெடுக் கக்கூடாது.ஒழுக்கமாக
நடந்து கொள்ள வேண்டும். இவதாம் சென்னை விழாச் சட்டங்கள்.அதுவே இப்போதும் அனுசரிக்கப் படும் என்று நம்புகிறேன்!(மெதுவாக) உனக்காகவே போட்ட மாதிரிச் சட்டங்கள்!
தேவேந்திரன் தலையாட்டுகிறான்.
இ:அடுத்த ஆண்டு தேவலோகத்தில் கோலாகலமாக
விழா நடக்க வேண்டும் அதற்கு நீர்தான் பொறுப்பு நாரதரே