Showing posts with label ரேங்க். Show all posts
Showing posts with label ரேங்க். Show all posts

Thursday, April 18, 2013

தமிழ் மணம் ரேங்கில் முதல் இருபதுக்குள் வருவதெப்படி?!




தமிழ் மணம் வாராந்திர,மூன்று மாத ரேங்க் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

”ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாகக் கொண்டு வெளியிடப் படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்”-இது தமிழ்மணம் சொல்வது.

எனவே இதை அடிப்படையாகக் கொண்டு எப்படி  முதல் சில ரேங்கில் வருவது எனப் பார்க்கலாம்!

1)எண்ணிக்கை:-இது மிக முக்கியம்!தினம் ஒரு பதிவாவது கட்டாயம் எழுத வேண்டும். ஒன்றுக்குக்கு மேல் எழுத முடிந்தால் இன்னும் சிறப்பு.பதிவு பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.சிறிய பதிவாயினும் கணக்கில் ஒன்றாகி விடுகிறது அல்லவா?வாரம் ஒன்று, மாதம் மூன்று என்றெல்லாம் எழுதுபவர்கள் ரேங்கை மறந்து விடுங்கள்.நான் ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதுகிறேன்,வேறெதைப் பற்றியும் கவலை இல்லை எனச் சொல்லும் இலட்சியவாதிகள்,உடனே இந்தப் பதிவைப் படிப்பதை நிறுத்தி விட்டு வேறு இலட்சிய பூர்வமான செயல்களைத் தொடங்கப் போகலாம்! 

வாராந்திர ரேங்கில் 20க்குள் வர வேண்டும் என்றால் ,கட்டாயம் தினம் ஒரு பதிவோ அதற்கு மேலுமோ எழுதி விடுங்கள்!

தினமும் எழுத நேரம் இல்லையா?நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகள் எழுதிச் சேமித்து வையுங்கள்.ஒவ்வொன்றாக வெளியிடலாம்!


2)உள்ளடக்கம்:-எதுவும் எழுதலாம்!வானமே எல்லை.கதை,கவிதை(!).நகைச்சுவைத் துணுக்கு,  அரசியல்,சினிமா செய்திகள் என்று! எனக்குக் கவிதை எழுதத் தெரியாதே என்று சொல்லாதீர்கள். தெரிந்தா நான் எழுதுகிறேன்?!வாக்கியத்தை மடக்கிப் போட்டால் கவிதைதான்!ஆகா,ஓகோதான்!

ஆன்மீகம் அறிவியல் என்றெல்லாம் ஆரம்பித்தீர்கள் என்றால் ரேங்கை மறந்து விடலாம். (அதற்கும் வழி இருக்கிறது;பின்னால் சொல்கிறேன்!).யோசித்து எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லையே எனக் காரணம் சொல்லாதீர்கள்!உங்களை யாரையா யோசிக்கச் சொன்னது?பத்திரிகையைப் புரட்டினால் செய்திகள் ஆயிரம்.இன்றைய சூடான நிகழ்வு என்ன என்று பாருங்கள்.நடிகை அஞ்சலி,பவர் ஸ்டார்,ஐபிஎல் என்று எத்தனையோ!அரசியலும் சினிமாவும் என்றும் உங்களுக்குக் கை கொடுக்கும்.

செய்திகளை வெளியிடும்போது அப்படியே பத்திரிகையிலிருந்துcp செய்யாதீர்கள்.உங்கள் பாணியில் கொஞ்சம் மசாலா தூவி எழுதுங்கள்.

ஆயிரம் ஹிட்டுக்குக் குறையாது!

3)தலைப்பு:- இது மிக மிக முக்கியம்.சுண்டி இழுக்கும்படி இருக்க வேண்டும் தலைப்பு.ஆனால் சொல்லப்பட்ட செய்திக்குத் தொடர்புடையதாக இருத்தல் அவசியம் .சம்பந்தமேயில்லாத தலைப்பு எரிச்சலைத்தான் வரவழைக்கும்.

ஆன்மீகம் அறிவியல் பற்றி எழுதினாலும் தலைப்பு கொஞ்சம் கவனமாக வைத்தால் ஹிட்ஸ் நிச்சயம்!
(உ-ம்) சிவபெருமான் பற்றி எழுதுகிறீர்களா?தலைப்பு “உலகநாயகனின் பெருமை” என்று இருக்கலாம்!

4)பின்னூட்டம்,வாக்கு:-வருகை தருபவர்கள் அனைவரும் கருத்துச் சொல்வார்கள் என்றோ வாக்களிப்பார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது;அவ்வாறு நடக்கவும் நடக்காது.ஆனால் அவைகளும் காரணியாக இருப்பதால் அதற்கும் ஏதாவது வழி செய்ய வேண்டும்,ஒரே வழி தினம் குறைந்தது 50 பதிவுகளுக்காவது சென்று பின்னூட்டம் இடுங்கள் ,ஓட்டுப் போடுங்கள். நீங்கள் ஓட்டுப் போட்டு விட்டீர்கள் என்பதையும் உணர்த்துங்கள்-(த.ம.11)

அவ்வப்போது உங்கள் புதிய பதிவின் சுட்டியும் கொடுங்கள். 

இதைச் சிறிது சிறிதாக அதிகப்படுத்துங்கள்.உங்களுக்கு வரும் ஓட்டுக்களும் பின்னூட் டங்களும்  அதிகமாகும்.பின் என்ன!-மகுடம்தான்!

வருகை அதிகப்படுத்த இன்னொரு வழி,ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர் களுக்கு   (உ-ம்-புலவர் ஐயா,செ.பி. ஐயா,ரமணி ஐயா) ஒத்து வராத வழி,உடன் பணி செய்பவர்களைக் கண்டிப்பாக தினம் 10 தடைவையாவது உங்கள் பதிவுக்கு வந்து போகும்படி கேட்டுக் கொள்ளல்!

இவை சில முக்கியமான வழிகள் .இன்னும் சின்னச்சின்ன வழிகள் சில இருக்கின்றன.அவை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

இப்போது இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து ரேங்கில் முன்னேறுங்கள்!

இதெல்லாம் செய்தும் பயனில்லையா?

அதற்காக எழுதுவதை விட்டு விடாதீர்கள்!

வேறு பெயரில் புதிய பதிவு ஒன்று தொடங்குங்கள்!!