Monday, March 24, 2014

அடக்க முடியாத ஒன்று!



விரைவாகச் சென்று கொண்டிருந்த பேருந்து அந்தப் பரபரப்பான சாலையோரம் ஒதுங்கி நின்றது.

அதிலிருந்து ஒரு பெண்ணும் சிறுவனும் வேகமாக இறங்கினர்.

சாலையோரம் இருந்த மின் இணைப்புப் பெட்டியின் பின் பையனை அழைத்துச் சென்ற பெண் அவன் கால்சட்டையின் பற்பிணையைத் திறந்து விட்டாள்,

சிறுவன் விரைவாகத் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பினான்.

அவன் முகத்தில் ஒரு நிம்மதி.

அவனை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் பேருந்தில் ஏறினாள்.

ஓட்டுநரின் பின் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

ஓட்டுனர் முகத்தில் வாய் விரிந்த சிரிப்பு. மனிதாபிமானச் சிரிப்பு!

பேருந்து புறப்பட்டது!

இது சென்னை மாநகரில் நிகழ்ந்த சம்பவம்!

இப்போது இந்தக் காட்சியைக் கத்தரிப்போம்,

ஒரு மகிழ்வுந்து விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது,

ஒரு பெரியவர் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

அருகில் ஒரு இளைஞன்.

தவித்துக் கொண்டிருக்கிறான்.

”அப்பா!இன்னும் எவ்வளவு தூரம்” என வினவுகிறான்.

கொஞ்ச தூரமே என அவர் சொல்கிறார்.

வண்டியில் இருக்கும் பெண்கள் கைபேசியில் ஏதோ பாட்டுப் போடுகின்றனர்;பையனைக் கிண்டல் செய்வது போல் உள்ளது.

அவனுக்குக் கோபம் வருகிறது.

வண்டி நிற்கிறது.

பையன் அவசரமாக இறங்கி  அங்கு இருக்கும் கழிப்பறைக்குச் செல்கிறான்.

கழிப்பறை பூட்டப்பட்டு இருக்கிறது!!

இது தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்.

வாழ்க்கையைத்தானே பிரதிபலிக்கின்றன விளம்பரங்கள்!

பேருந்துச் சிறுவனைப் போல் இவனும் சாலை ஓரம் ஒதுங்கியிருந்தால் பிரச்சனையே இல்லையே!

ஆத்திரத்தை அடக்கலாம்!!
........................................!!!

Wednesday, March 5, 2014

அறிவாளி ந.1

ஒரு பெண்மணி மருத்துவ மனைக்குப் போன் செய்தாள்.

மருத்துவர் அவள் பதட்டமான குரலைக் கேட்டு நிதானமாக சொல்லுங்கள் என்றார்

அவள் சொன்னாள் அவள் சின்னப் பெண் எறும்புகளைப் பிடித்துச் சாப்பிட்டதாக.

மருத்துவர் சொன்னார் அதனால் அபாயம் ஏதுமில்லை,கவலைப்பட வேண்டாம் என்று.

அவள் அமைதியடைந்து பின் சொன்னாள்”நானும் எறும்புகளைக் கொல்வதற்கு எறும்புக் கொல்லி மருந்தைக் கொடுத்து என் பெண்ணைச் சாப்பிடச் செய்து விட்டேன்”என்று!

அறிவாளி ந.1

Monday, February 17, 2014

தேவர் போன்றவர் யார்?!



புராணங்களில் படித்திருக்கிறோம்,தேவர்கள் ,அசுரர்கள் என்பவர் பற்றியெல்லாம்.... இருவருக்கும் இடையே எப்போதும் போர் நடந்து கொண்டேதானிருக்கும்.தேவர்கள் தோற்றுக் கொண்டே தானிருப்பர்.அவர்களைக்காப்பாற்ற ஏதாவது ஒரு கடவுள் அவதாரம் எடுத்து வரவேண்டும்.

தேவர்கள் மேலுலக வாசிகள்.அமிர்தம் அருந்தியதால் சாகா வரம் பெற்றவர்கள்.ஆயினும் ஏன் தோற்கிறார்கள்?

அவர்கள் சுக வாசிகள்.மது,மாது என்று காலத்தைக் கழிப்பவர்கள்.தேவகுமாரர்கள் ஏதாவது தவறு செய்து ஏதாவது முனிவரிடம் சாபம் வாங்கியவாறு இருப்பர் .அவர்கள் தலைவனான தேவேந்திரனே அப்படித்தான்!கௌதமர் என்ற முனிவரின் மனைவியாகிய அகலிகை மீது காம வசப்பட்டு கௌதமர் உருவந்தாங்கிச் சென்று அகலிகையைக் கூடி அதன் பயனாய் முனிவரால் உடலெல்லாம்  கண்ணாகச் சபிக்கப்பட்டவன்!(இங்கு கண் என்பது இடக்கரடக்கல்!).

ஆகவே நாம்தெரிந்து கொள்வது அவர்கள் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்பதே.

வள்ளுவர் சொல்கிறார்,இந்தத்தேவர்களைப் போன்றவர் யார் என்று…….

 “தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
  மேவன செய்தொழுக லான்”…..( குறள்-1073)

அதாவது  தாம்  விரும்புகின்றவற்றைச் செய்து மனம்போன போக்கில் நடப்பதால்,கயவர் தேவர்களைப் போன்றவர்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் அய்யன் வள்ளுவர்!

எப்படி அங்கதம் ?!


Saturday, February 15, 2014

பண்ணையாரும் பத்மினியும்!+ஒரு கிசுகிசு



இந்தச் சினிமாவின் விளம்பரம் முதலில் வந்தவுடன் நான் இது ஏதோ விவகாரமான படம் போல என எண்ணினேன்!பின்னர்தான் தெரிந்தது,பத்மினி என்பது ஒரு பெண்ணை அல்ல, பத்மினி காரை குறிப்பது என்று.

பெண்களைச் சாமுத்திரிகா லக்ஷணப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்தார்கள்---பத்மினி, சித்தினி, சங்கினி,அத்தினி என்று,இதில் பத்மினி என்பது,உத்தமசாதிப் பெண்.இங்கு சாதி என்றால் வருணாச் சிரமம் அல்ல.பெண்மையின் இலக்கணங்கள் எல்லாம் ஒரு சேரப் பொருந்திய  மிகஅழகிய பெண்.

ஆனால் அப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்தால் சிரமம்தான்.வடமொழியில் சொல்வார்கள்  ”பார்யா ரூபவதி சத்ரு!”அதாவது அழகான மனைவி ஒரு விரோதி என்பதாகும்.

அழகு என்பது என்ன?அழகிய முகம் .உடல் அமைப்பு இவையெல்லாம் அழகாகி விடுமா? உள்ளத்தழுகும் வேண்டுமல்லவா?ஆனால் பார்க்க அழகில்லாத ஒரு பெண்ணை எந்த               இளைஞன் மந்து கொள்ளச் சம்மதிப்பான்?ஆகவே இரண்டும் சுமாராகவாவது இருக்க வேண்டும்.பத்மினியெல்லாம் வேண்டான்.சித்தினி,சங்கினி போதும்!

வாழ்க்கையில் நாம் போதும் என்று சொல்வது சாப்பிடும்போது மட்டும்தான்.ஏனென்றால் வயிறு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் உண்ண முடியாது.அவ்வையார் சொன்னார்”……….

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய்இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”

உண்மைதான் .வயிறு நிறைந்தவுடன் திருப்தி அடைந்து விடுகிறது.ஆனால் மனதுக்குத் திருப்தி என்பதே  ஏற்படுவதில்லை.வேண்டும் ,வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுதான் பிரச்சினையே!

இரு நாட்களாக என் வயிறு பசி இல்லாமல் போய் சாப்பாட்டை ஏற்க மறுக்கிறது.ஆனால் மருந்துகளைச் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.வயிறு சரியில்லை என்றால் உடல் வலி தலை வலி என்று எல்லாம் கூடவே வந்து விடுகின்றன!

முதலில் சொன்ன படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.

ஒரு கிசுகிசு---தலைநகரப் புகைப்பட நிபுணரும்,தமிழக மான்செஸ்டர் பேய்ப்பதிவரும்,ஓட்டல் பெயர் பதிவரும்,குடும்பப்பதிவரும்,இன்று  எழுதுவதை நிறுத்தி வனவாசம் இருக்கும் சென்னையைச் சேர்ந்த பைத்தியப்பதிவர் வீட்டில் சந்தித்தார்களாம்!

Friday, January 17, 2014

புத்தகக் கண்காட்சி-ஒரு வித்தியாசமான பார்வை..படங்களுடன்!

விடுமுறை நாட்கள் முடிந்தபின் இன்று புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மாலை 3.30 மணி அளவில் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தானியில் 4 மணி அளவில் கண்காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ,மைதானத்தை அடைந்தேன்.சென்ற ஆண்டு கண்காட்சி நடக்கும் இடத்தை அடையும்போதே களைப்படைந்தது போல் இல்லாமல் இந்த ஆண்டு இலவச வாகன  வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்  எளிதாக  கண்காட்சி அரங்கை அடைந்தேன்.


    இலவச ஊர்தி
    திரும்புகையில்


பத்து ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு அரங்குக்குள் நுழைந்தேன்

நுழை வாசல்    
      உள்ளே நுழையும்போதே அதிகபட்சம் 2.30 மணி நேரமே செலவழிக்கத்                        திட்டமிட் டிருந்த படியால்,ஸ்டால்களைத் தேர்ந்தெடுத்து என் சுற்றலைத் துவங்கினேன்.மொத்தம் பத்து அரங்குகளுக்குச் சென்றிருப்பேன்!இன்று விடுமுறை நாளாக இல்லாததால் பதிவர்கள் யாரையும் பார்க்கவில்லை.அப்படி யாராவது வந்திருந்து அவர்களை நான் பார்த்தாலும் அவர்களுக்கு என்னைத் தெரியாது...ஒரு சோட்டா பதிவர்தானே!.டிஸ்கவரியிலும் யாரும் இல்லை.திரு வேடியப்பன் பிஸியாக இருந்தார்.

                                            

                                                     டிஸ்கவரியில் வேடியப்பன்
நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை,வாங்கிய புத்தகங்களின் சாம்பிள் ஒன்று கீழே!

                                          


 அவ்வாறு சென்று கொண்டிருந்தபோதுதான் கீதா பிரஸ் ஸ்டாலில் ஒரு பதிவரைப் பார்த்தேன்.அவரை எனக்குத் தெரியும்.நான் பார்த்தபோது சன் டி.வி. பெண் நிருபர் அவர் முகத்துக்கு நேராக மைக்கைப் பிடித்திருக்க அவர் காமிராவைப் பார்த்தபடி ஆன்மீகம் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.அந்தப் பதிவர் திரு.சென்னைபித்தன் அவர்கள்!அதைப் படம் எடுக்க மறந்து விட்டேன்!

இம்முறை ஓய்வெடுக்கவும் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.நிம்மதியாக அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்

                                                   
   
     வெளியே வந்தபின் அரங்கில் ஏதோ நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்
                                       

               பஸ்ஸில் ஏறி கேட்டை அடைந்து தானியில் ஏறி வீட்டை வந்தடைந்தேன்!
                                
      இன்னொரு நாள் மீண்டும் போக ஆசை!.......இன்ஷா அல்லா!
                                  

 லேட் டிஸ்கி:    ”நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை” என்றுதான் நான் எழுதியிருக்கிறேன்.ஆனால் பின்னூட்டங்களைக் காணும்போது நான் முப்பது புத்தகம் வாங்கியதாகத் தவறாகப் புரிந்து கொளப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.மன்னிக்க!
                                                                                                                                                                        








                                                                                                                                                                              

.

Monday, January 6, 2014

மனைவிக்கு உதவிய கணவன்!

சமையலறையில் மனைவிக்கு வேலை மிக அதிகமிருப்பதைக் கவனித்த கணவன் அவளுக்கு உதவ எண்ணினான்.

நான் ஏதாவது உதவட்டுமா எனக் கேட்டான்.

மனைவிக்கு மகிழ்ச்சி

கணவனிடம் சொன்னாள்”அந்தக் கூடையில் இருக்கும் உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள்.பாதிக் கிழங்கின் தோலைச் சீவி இந்தப்பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு வேக வையுங்கள்.”

கணவனும் செய்தான்.

மனைவியிடம் பாராட்டுப் பெற எண்ணி அவளைப் பார்க்கச் சொன்னான்.

அவள் பார்த்து விட்டுப் பாராட்டவில்லை;மாறாக அவனை கேவலமாகப் பேசினாள்.

அவனுக்குப் புரியவில்லை.

நீங்களே சொல்லுங்கள்

அவன் என்ன தப்பு செய்தான்?............................

..........................

..........................

......................