Showing posts with label இந்திரன். Show all posts
Showing posts with label இந்திரன். Show all posts

Monday, August 26, 2013

பதிவர் திருவிழா 2013--தேவலோகத்திலும்!



இடம்:தேவலோகம்,இந்திர சபை.

ரம்பா,ஊர்வசி ஆகியோரின் நடனத்தை தேவேந்திரன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.

நவக்கிரகங்கள்,தேவர்கள் .அஷ்ட திக் பாலகர்கள் எல்லோரும் அமர்ந்திருக்கின்னர்.

அப்போது “நாராயண,நாராயண” என்ற குரல் கேட்கிறது.

நாரதர் வருகிறார்.

இந்திரன்:வாருங்கள் நாரதரே!பூலோக சஞ்சாரம் எல்லாம் சுபமாக முடிந்ததா?

நாரதர்:ஆகா!சென்னை நகருக்குச் சென்றிருந்தேன்.இந்திர லோகம் போல் கோலாகலமாக இருக்கிறது!

இந்:அப்படியா?என்ன விசேஷம்?

நா:செப்.முதல் தேதியன்று தமிழ் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி இரண்டாவது வலைப்பதிவர் திருவிழா நடத்த இருக்கிறார்கள்.மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்:ஓகோ?சென்ற ஆண்டு இன்றைய தேதியில்தானே முதல் மாநாடு நத்தினார்கள்? அதைப்பற்றி நீங்கள் சொன்ன பின்தானே,நம் தேவலோகத்திலும் வலைப்பதிவுகள் தொடங்கினோம்?எப்படி நடக்கிறது நம் வலைப்பதிவுலகம்?

நா:உனக்குத் தெரியாதா இந்திரா?

இந்:எனக்கு அதற்கெல்லாம் நேரமேது நாரதரே?

நா:ஆமாம்,ஆமாம்,நடனம்பார்க்கவே நேரம் போதவில்லை!

இந்:நாரதரே!

நா:தப்பு,தப்பு. நாராயணன் தினம் மரபுக்கவிதை எழுதுகிறார்,சிவனோ துரும்பு கிடைத்தாலும் அதைப் பதிவாக்கி விடுகிறார்,விநாயகர் குடும்பப்பதிவராகி விட்டார்!எல்லாம் நன்றாகவே நடந்தாலும் பூலோகம் போலில்லை இந்திரா!

இந்:அப்படியா?நடக்க இருக்கும் விழா பற்றிச் சொல்லுங்கள்.

நா:விழாவன்று காலை நிகழ்ச்சிக்குப் பதிவுலக பீஷ்ம பிதாமகர் ஆயிரம் பிறை கண்ட மூதறிஞர்புலவர் இராமானுசம் அய்யா அவர்கள் தலைமை தாங்குகிறார்,அடையார் அஜீத் எஅழைக்கப்படும் மூத்த திவர் சென்னபித்தன் முன்னிலை.எழுத்தாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்புரை.முக்கியமாக பதிவர்கள் அனைவரின் சுய அறிமுகம் 

பின் மதியம் தேவலோக உணவையும் விஞ்சும் உணவு—சைவம் அசைவம் இரண்டும்!

மதிய நிகழ்ச்சிகளில் பதிவர்கள் சிலர் பாட்டு நடனம்,நாடகம் என்று கலக்கப்போகிறார்கள். 

சேட்டைக்காரன்,சதீஸ் சங்கவி,மோகன் குமார்,யாமிதாஷா ஆகிய பதிவர்களின் நூல் வெளியீடு.

விழாக் குழுவினர் செயலாற்றும் வேகத்தைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது, ”மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார்” என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது

இந்:கேட்பதற்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது!

நா: நான் விழாவன்று அரங்குக்குச் சென்று கண்டு களிக்கப் போகிறேன்.தேவேந்திரா நீயும் என்னுடன் வந்து விழாவில் கலந்து கொள்ளேன்.

இந்:நானே நினைத்தேன்;நீங்கள் சொல்லி விட்டீர்கள்,அவசியம் வருகிறேன்.

நா:என்னைப்போல் மறைவாக இருந்தால் சுவை இருக்காது.நீ ஒன்று செய்.குட்டன் என்று ஒரு குசும்புப் பதிவர் இருக்கிறார்;அவர் அநேகமாக விழாவுக்கு வரமாட்டார்.நீ அவரைப்போல் வேடம் தாங்கி வந்து விடு.வேறொருவர் போல் வேடம் போட உனக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்!

இந்:நாரதரே!

நா:தப்பு,தப்பு.

இந்: சரி நாரதரே!அந்தகுட்டன் வந்துவிட்டால்?

நா:வந்தால் வரட்டுமே!அவர் என்ன கௌதமரா?பதிவர் வேடமிட்டு வந்த உன் மேனி முழுவதும் கீபோர்டாகட்டும் என்று சபிக்கவா முடியும்?

இந்:நாரதரே!

நா: தப்பு,தப்பு.

இந்:சரி நாரதரே நாம் செல்வோம்.பார்த்து விட்டு வந்தபின் அதே போல் ஒரு விழா தேவ லோகத்திலும் நடத்த வேண்டும்.

 நா:ஆகா! திவ்யமாக நடத்தலாம் ,செல்லுமுன் ஒரு எச்சரிக்கை.நீ வழக்கம்போல் சோம பானம் ,சுராபானம் ஏதாவது குடித்து விட்டு வராதே.வெளியேற்றி விடுவார்கள்.படம் பிடிக்கும் கருவியைக் கட்டுப்பாட்டுடன் உபயோகி.பெண்களைப் படமெடுக்கக்கூடாது.ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

தேவேந்திரன் தலையாட்டுகிறான்.

டிஸ்கி:விழாவன்று பதிவர்கள் இவ்விரு தேவலோக வாசிகளையும் கண்டு கொள்ள முடிகிறதா பாருங்கள்!:))