Friday, September 28, 2012

கதை கேளு,கதை கேளு!



 ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். 

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.

‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. 

வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு -(குறள்)


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். 


சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
 

அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது..”.பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் ”என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

”அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன்” என்றான்.


மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது.

தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

”அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்”-(குறள்)

டிஸ்கி:கதைகள் எங்கோபடித்தவை!








15 comments:

  1. அனுபவப் பாடம் சொல்லும் கதைகளும் அர்த்தமுள்ள குறள்களும் அழகு
    நல்ல பதிவு

    ReplyDelete
  2. எங்கோ படித்த கதைகளாக இருந்தாலும் அதை அழகாக குறளுடன் பொருத்தி ரசிக்கத் தக்க விதத்தில் சொல்லி அசத்திட்டீங்களே... வெரிகுட்.

    ReplyDelete
  3. கதையும் குறளும் பொருளும் அருமை.

    தொடர்க.

    ReplyDelete
  4. குறளுக்கேற்ற கதைகள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. நல்லா இருக்கின்றது நான் கேள்விப்படாத கதைகள்.!!;-)

    ReplyDelete
  6. நல்ல கருத்துள்ள கதை...

    ReplyDelete
  7. உங்கள் சொந்தக் கதைகள் என்று நினைத்தேன்.

    அழகிய வடிவத்தில் தந்திருக்கிறீர்கள்.

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. இரண்டுமே அருமையான நீதிக்கதைகள் நண்பா!

    ReplyDelete
  9. எங்கள் நிலாவுக்குச் சொல்லிக்கொடுக்க கொப்பி பண்ணி வச்சிட்டேன் குட்டா.நன்றி !

    ReplyDelete
  10. அருமையான நீதிக்கதைகல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete