Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Wednesday, October 9, 2013

செய்திகள்;வாசிப்பது.....

இன்று படித்த ஒரு செய்தி என்னைக் கோபப்பட வைத்தது.அறியாத சிறுவர்கள் விளைவு களைப் பற்றித் தெரியாமல்  சில செயல்களில் விளையாட்டாக ஈடுபடலாம்.ஆனால் வேலை பார்க்கும் இளைஞர்கள்,விளைவைப் பற்றியே சிந்திக்காமல் ஒரு செயலை ’விளையாட்டு’க் காகச் செய்யலாமா?

அம்பத்தூரில் ஒரு கார் சேவை மையத்தில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள்,தங்களுடன் பணிபுரியும் கார்த்திக் என்னும் இளைஞனைப் பிடித்து அவன் கால்சராயைக் கழட்டி அவன் பின்புறத்தில் காற்று அடிக்கும் கருவியின் குழாயைச் செருகிக் காற்றடித்தனராம்.அவன் வயிற்றில் காற்று நிரம்பி மயக்கமடையவே அவனை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.அங்கிருந்து போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளைஞன்,உடல் நேரானதும் போலீஸில் புகார் கொடுக்க,அந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது என்ன விளையாட்டு?விபரீத விளையாட்டு?


நேற்றுப்படித்த ஒரு செய்தி


திருமாலின் தசாவதாரங்கள். எவை?

மத்ஸ்ய,கூர்ம,வராக,வாமன,நரசிம்ஹ,பரசுராம,ராம,கிருஷ்ண,பலராம.கல்கி இவையென்று சொல்லப்படுகிறது.வடக்கில் புத்தர் ஒரு அவதாரம் எனச் சொல்கிறார்கள்.

அதாவது,மீன்,ஆமை,பன்றி,வாமனன்,நரசிம்ஹம்,பரசுராமர்,ராமர்,கிருஷ்ணர்,பலராமர்.கல்கி.

நேற்று இராமேஸ்வரம் கோவிலில் பன்றி புகுந்து விட்டதாம் !

நகராட்சி ஊழியர்கள் அப்பன்றியைப் பிடிப்பதற்காகத் துரத்தும்போது அது அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு,கோவிலுக்குள் நுழைந்து இரண்டாவது பிரகாரம் வரை சென்று விட்டதாம்! அதை விரட்டிய பின் குடம்குடமாகத் தண்ணீர் ஊற்றிக் கோவில் பிரகாரத்தைச் சுத்தம் செய்தனராம்;விசேட பூசைகளும் செய்யப்பட்டனவாம்

இச்செய்தித் தலைப்பைப் படித்ததும் எனக்குத் தோன்றிய  நகைச்சுவையான எண்ணம்,பன்றி திருமாலின் அவதாரம் தானே ,எனவே இதில் பிரச்சினை என்ன இருக்கிறது என்பதே!

செய்தியை முழுவதும் படிக்கும்போது, என் கருத்தையே மதுரை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத்தின்  தலைவர் சொல்லியிருப்பது தெரிய வந்தது!

சரிதான்!இனிமேல் ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது எனச் சொல்லாதீர்கள்.(இதற்கு வேறு பொருளும் சொல்வர்)

ஆமை திருமாலின் அவதாரம்!

Saturday, June 1, 2013

சென்னைப் பதிவர்கள் ’திடீர்’ சந்திப்பு!





இன்று மாலை சென்னையில் மழை மேகங்கள் திரளவில்லை.

ஆனால் சில பதிவர்களின் திடீர் சந்திப்பு ஒன்று நடந்ததாக நம்பத்தகுந்த 
வட்டாரங் களிருந்து தகவல் கிடைத் துள்ளது.

இன்று மாலை 4.30 மணி அளவில் தானைத் தளபதி புலவர் ஐயா தலைமையில் பதிவர்கள் கூடிப் பேசியதாக அறிகிறோம்!

பத்துப் பதினோரு பதிவர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது, முழுப் பட்டியலும் கிடைக்காத நிலையில் சிலரது பெயர்கள் கசிந்துள்ளது.

தற்போது ஓய்வு பெற்று விட்ட சென்னை பித்தன்,நகைச்சுவை வேந்தர் பால கணேஷ், நெத்தியடி சிவகுமார்(இவர் இல்லாத சந்திப்பும் உண்டா என்ன?!),க்ரைம் நாவல் புகழ் மதுமதி, இளைய புயல் சீனு……….மற்ற பெயர்கள் இன்னும் கிடைக்கவில்லை!

என்ன பேசினார்கள் என்பதும் விரைவில் தெரிய வரும்.

எனக்கு ஒரு வருத்தம்.

முன்பே தெரிந்திருந்தால் நானும் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டிருப்பேன்.

வாய்ப்பு நழுவி விட்டது.

பொறுத்திருப்போம்!

Monday, February 18, 2013

பறவைக் கழிவை முகத்தில் பூசும் நடிகைகள்!!



வாங்க மேடம்!என்ன முக அழகு படுத்தல்தானே?

“ஆமாம்!ஆஸ்கார் விழாவுக்குப் போறேன் .முகம் பள பளன்னு மின்னணும்.புதுசா ஏதாவது முறைகள் இருக்கா?”

“இருக்கு மேடம்!இப்பத்தான் ரொம்பப் புதுசா ஒரு தயாரிப்பு வந்திருக்கு.அதை வைச்சு முக அழகு படுத்தினா முகம் பளிச்சுன்னு இருக்கும்:சுருக்கம் எல்லாம் போய் பத்து வயது குறைஞ்சுடும்!”


“வாவ்! அதையே செய்திடுங்க!இதிலே இருக்கும் பொருள் என்ன?”

மேடம்!இது பறவைகளின் எச்சத்தில் செய்தது!ரொம்ப விலை உயர்ந்தது.உங்களை மாதிரிப் பிரபலமானவங்கதான் செய்துக்க முடியும்”

(எந்தக் கழிவுல செய்தா என்ன?முகம் அழகானாச் சரிதான்!)

”அதோட  என்னோட முடியையும் அழகு படுத்தணும் ”

“சரி மேடம்!அதுக்கும் புதுசா ஒரு தைலம் வந்திருக்கு.காளை மாடு இருக்கில்ல(எங்க இருக்கு, அதுதான் பூட்ச்சே!) அதோட விரைக் கொட்டையை நசுக்கிச் செய்தது.முடி அப்படியே அலை அலையா இருக்கும்!”

மேலே சொன்னதெல்லாம் கற்பனையல்ல,நிஜம்!

இந்த ஆண்டு ஆஸ்கார் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் தங்களை அதற்கு அழகு படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சிகளின் ஒரு சிறு பார்வை இது!

இன்னும் எத்தனையோ!

250000 டாலர் செலவில் கருப்பு வைர நகப்பூச்சு!

முன்பு ஒரு நடிகை தன் உடலில் அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சச் செய்தாராம்(டெமி மூர்)-ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க!!

இந்த ஆண்டு முகச் சுருக்கங்களை நீக்கிப் பொலிவு தர,கொஞ்சம் ரத்தம் எடுத்து அதிலிருந்து சில மூலகங்களை நீக்கி அதனுடன்,சரும நிரப்பிகளைச் சேர்த்துத் தோலில் உட்செலுத்தும் புதிய முறை வந்திருக்கிறதாம்!

பறவை எச்சம்,காளை மாட்டின் கொட்டை,அட்டைக்கடி இன்னும் என்ன?

பூனை மூத்திரம்,(புனுகு என்பதே ஒரு வகைப் பூனையின் கழிவுதான்),சிங்கப்பல் பஸ்பம்(நிஜ சிங்கப்பல்,சில மனிதர்களுக்கு இருக்குமே அந்த சிங்கப்பல்லல்ல) இப்படி ஏதாவது வருமோ!

அடக்கடவுளே!


Monday, January 28, 2013

விஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்!



என்ன துணிச்சல் உங்களுக்கு கமல் சார்?......தொழில் நுட்பத்தில் சிறந்த ,அழுத்தமான கதைக்கருவைக் கொண்ட தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு படத்தை,யார் உணர்வும் உண்மையாகப் புண்படா வண்ணம் எடுப்பதற்கு!

நடந்து தேய்ந்த பழைய பாதையில் சென்று மசாலா படங்களை எடுக்காமல் ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களை எடுத்தமைக்காக நீங்கள் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்தான்!

அதுவும் உங்கள் பணத்தை முதலீடு செய்து? நம்பமுடியாத செயல். வருந்தி உழைத்துத் தேடிய இந்தப் பணத்தை நிலத்திலோ,தங்கப் பத்திரங்களிலோ அல்லது அதனினும் மேலாக ஒரு அரசியல் கட்சி துவங்குவதிலோ செலவு செய்திருக்கலாம் எனத் தெரியாதா? எங்கு சம்பாதித்தேனோ அங்குதான் செலவு செய்வேன் என்று  இருப்பது முட்டாள்தனம் இல்லையா?!

ஆக்க பூர்வமாக,தனிச் சிறப்பாகச் சிந்திக்க என்ன துணிச்சல்!கடந்த 51 ஆண்டுகளாக எங்களையெல்லாம் மகிழ்வித்து,அழ,சிரிக்க வைத்து எங்கள் வாழ்க்கையின் அங்கமாகப் போயிருக்கிறீர்கள்;இதற்காகவே நீங்கள் தண்டிக்கப் பட வேண்டும்!

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

‘ஹே ராம்’ என்றொரு படம்! மஹாத்மாவுக்கு தமிழ் சினிமாவின்  யாவுங்கடந்த பாராட்டாக அமைந்தது.ஆனால் படம் வெளியாகும் முன்பே ஒரு காந்தி வெறுப்பாளர் என முத்திரை குத்தப் பட்டீர்கள்!

மரணதண்டனையைக் குறித்து விருமாண்டி என ஒரு இணையற்ற படம் எடுத்தீர்கள் ஆனால் படத்தின் பெயர்ச் சிக்கலில் நீதிமன்றத்துக்கு அலைந்தீர்கள்!

தசாவதாரம் என்றொரு படம்.விளம்பரங்களைப் பார்த்தே படத்தைப்பற்றித் தவறாகப் புரிந்து கொண்டவர்களால்,இந்துமத விரோதி என அழைக்கப்பட்டீர்கள்!

இனியாவது இப்படிப் படம் எடுப்பதை நிறுத்தக்கூடாதா?!

உங்களுக்கும் உங்களைப்போன்ற பட உலகில் உள்ள சிறந்த படைப்பாளிகளுக்கும் ”உங்கள் உடல் நலம்,மனநலம்,வாழ்வு இவற்றில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் சிறந்த படைப்புகள் தருவதை நிறுத்துங்கள்” என்று ஒரு பாடம் புகட்டுவதற்காகவாவது ..........

விஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்!

 (behind woods.com  என்ற தளத்தில் இந்திராணி நாராயண் என்பவர் எழுதிய   ங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்)