Wednesday, April 29, 2015

இளைஞர்களுக்காக,இளைஞரால்.... இத்யாதி இத்யாதி!



ஹலோ!யாரு குட்டனா? பழையபடியும் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல!”
ஏன்,எழுதக்கூடாதா?”
அப்படி இல்ல .நீங்க கட்டாயம் தொடர்ந்து எழுதணும்.எங்களை மாதிரி இளைஞர்களுக்காக வலைப்பூ  நடத்தும் இளைஞர் நீங்க தொடர்ந்து எழுதணும்.அதுதான் எங்க ஆசை
ரொம்ப நன்றிங்க
இது போல் நேற்று முதல் பத்துக் கால்கள்.
எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி?
ஹூம்!
இப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் .
ஆனால் நடக்கவில்லையே!
நானே ஏதாவது இப்படி நினைத்துப் பார்த்தால்தான் உண்டு!
ஒரு ஆறு பேரைத்தவிர யாரும் ஒண்ணும் சொல்லவில்லை.
எட்டிப்பாத்தவங்களே மொத்தம் 117 பேர்தான் இது வரை.
இதுக்காக எல்லாம் எழுதாம இருந்துவிடுவேனா என்ன?
எழுதத்தான் போகிறேன்.
இளைஞர்களுக்காக,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ!
இதை ஏன் சொல்ல வேண்டும்?
எல்லோருக்கும் தெரியும் இது ’இளைஞர்களுக்கான’ வலைப்பூ என்று
எனவே அதை நீக்கி விடலாம்.
நான் இளஞன் என்பதை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
எனவே இளைஞரால் என்பதை நீக்கி விடலாம்.
பதிவின் எழுத்தே சொல்லும் இது இளைஞர் வலைப்பூ என்று.
எனவே இளைஞர் என்பதை நீக்கி விடலாம்.
கடைசியில் வலைப்பூ!
இது வலைப்பூ இல்லாமல் வேறு என்ன?
எனவே அதையும் நீக்கி விடலாம்.
மிஞ்சியிருப்பது.....ஒன்றுமில்லை!
அதுதான் இந்த வலைப்பூ!!
டிஸ்கி:இப்போதுதான் கவனித்தேன்.சென்ற பதிவுடன் ட்ரிபிள் செஞ்சுரி அடிச்சுட்டேன்!
ஆதரவுக்கு(!) நன்றி!


Tuesday, April 28, 2015

ஹையோ ஹையோ!

தந்தை தன் ஐந்து வயதுப் பெண்ணுக்குக் கதை சொல்லி விட்டு,அவளைப் பிரார்த்தனை செய்தபின் தூங்கச் சொன்னார்.

அவள் பிரார்த்தனை முடிவில்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவைக் காப்பாற் றட்டும்; பாட்டியைக் காப்பாற்றட்டும்;தாத்தாவை வரவேற்கட்டும்”என்றாள் .

தந்தை ஏன் அவ்வாறு சொல்கிறாய் எனக்கேட்க,என்னவோ சொல்ல வேண்டும் எனத் தோன்றியது என்றாள்.

மறுநாள் தாத்தா இறந்து போனார்

சில மாதங்களுக்குப்பின் ஓர் இரவு பிரார்த்தனைக்குப் பின்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவைக் காப்பாற்றட்டும்;பாட்டியை வரவேற்கட்டும்”என்றாள்

மறுநள் பாட்டி இறந்துபோனாள்

அப்பா எண்ணினார் இவளிடம் அபூர்வ சக்தி இருக்கிறது

நாட்கள் நகர்ந்தன.

ஓர் இரவில் அவள் பிரார்த்தித்தாள்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவை வரவேற்கட்டும்”

தந்தைக்கு தூக்கி வாரிப் போட்டது.

அப்படியானால் மறுநாள் தான் சாகப்போகிறோமா?

காலை மிகச் சீக்கிரமே அலுவலகம் சென்று விட்டார்

அன்று அச்சத்துடனே செயல் பட்டார்.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை.


நெஞ்சை அடைப்பது போல் இருந்தது

தண்ணீர் குடித்தார்.

காய்ச்சல் வருவது போல் இருந்தது

மாத்திரை போட்டுக் கொண்டார்

எப்படியாவது நள்ளிரவு கடந்து விட்டால் போதும்

அதுவரை அலுவலகத்திலேயே இருந்து விட முடிவு செய்தார்.

அன்றைய பொழுது நரக வேதனைதான்.

நள்ளிரவு கடந்தது.

ஒரு நிம்மதி மூச்சு விட்டுப் பின் வீடு திரும்பினார்.

மனைவி கேட்டாள் ”வேலை மிக அதிகமா/”

அவர் சொன்னார்”என் வாழ்க்கையிலேயெ இது போன்ற மோசமான நாள் இருந்ததில்லை.”

மனைவி சொன்னாள்”எனக்கு மட்டும் என்ன?இங்கே ஒரே பிரச்சினை.தபால் கொடுக்க வந்த தபால்காரர் மாரடைப்பில் நம் வீட்டுப் படியிலேயே இறந்து விட்டார்!”