Monday, September 30, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப்படம்-2 -(7)                                                                      அனிச்சமும்

                                                          அன்னத்தின் தூவியும்                                                       மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்

                         அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
                         அடிக்கு நெருஞ்சிப் பழம்--     குறள் 1120   (நலம் புனைந்துரைத்தல்)

அனிச்ச மலரும்,அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சி முள் போன்றவை.

மிக மென்மையான அனிச்ச மலரும் அன்னத்தின் சிறகுமே மாதர் அடிக்கு நெருஞ்சி முள் போல் துன்பம் தருவன என்றால் ,அப்பாதங்களின் மென்மையை என்னென்று சொல்வது?!

   “பஞ்சு கொண்டொற்றினும் பைய,பைய என்று
    அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”--சிலப்பதிகாரம்

(மீள் பதிவு,சில திருத்தங்களுடன்!)


Saturday, September 28, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்-6

                
                         தேய்ந்து வளர்ந்து மீண்டும் தேய்ந்து...................நிலாவின் நிலை!
                                                          களங்கங்களுடன் !

                                                              அழகிய பெண்
                                                    மாசு மருவற்ற முகப் பொலிவு!
                                             

         ” அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
            மறுவுண்டோ மாதர் முகத்து”---திருக்குறள்-1117

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம்  உள்ளது போல் இந்த மாதர் முகத்தில்களங்கம் உண்டோ ?இல்லையே!

உண்மைதானே!
"நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்"(நா.பா-குறிஞ்சி மலர்)

"கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்”(நாமக்கல் கவிஞர்)
Friday, September 27, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்!

                                                                     கூற்றுவன்


                                             பெண்ணின் அழகிய கண்கள்                                         பெண்மான்


         ”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
         நோக்கம்இம்  மூன்றும் உடைத்து” -திருக்குறள் -1085

எமனோ?கண்ணோ?பெண்மானோ?இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

ஆம்!
        பாயும் மான் போல் பார்வை!
       அப்பார்வையே நம்மைக் கொல்லும்!
       அக்கண்கள் எனும் கடலில் வீழ்ந்த பின் கரை ஏறவா முடியும்?!

       

Thursday, September 19, 2013

நாம் சிரித்தால் தீபாவளி!தெருவெங்கும் வேட்டுச் சத்தம்;மத்தாப்பு வெளிச்சம்

நெருங்கி விட்ட தீபாவளிக்குக் கடைசி நேர வாங்குதல்கள்

சிறுவர்களின் ஆரவாரம்;பெரியவர்கள் பேச்சுக்குரல்

பக்கத்து வீடுகளில் பலகார நெய் மணங்கள்

ஏக்கத்தோடு பார்த்திருக்கும் என் பையன் சின்னராசு

அக்காவாய் அவனை அணைத்திருக்கும் அன்னக்கொடி

உடுப்பதற்குத் துணியில்லை,வெடிப்பதற்கு வெடியில்லை

அடுத்தவேளை சோறில்லை,அடுப்படியில் பூனை!

பலகாரமெல்லாம் மணத்தை முகர்ந்து மகிழ மட்டும்!

ஆனை வெடி பூனை வெடி அனைத்திலும் அவர் உழைப்பு

ஆனா பெரிய வெடியா ஃபேக்டரியிலே வெடிக்க

 வெடிகளைச் செய்தவர் வெடியிலே போய்ட்டாரே!

விடிஞ்சாத் தீபாவளி .எங்களுக்கு விடிவு எப்போ?

என்னைக்கு நாஞ்ச் சிரிக்க-  எங்களுக்கு

என்னைக்குத் தீபாவளி?


----ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை


Saturday, September 14, 2013

தாமரை வெல்லும்!தாமரை என்றால் என்ன?
நமக்குத் தெரிந்த வரை ஒரு மலர்.
தாமரை மலரே இலக்குமியின் இருக்கையாம்.

கண்களைத் தாமரைக்கு ஒப்பிடுதல் வழக்கம்.

வடமொழியில் ராஜீவ லோசன என்பர்.

ஆனால் தாமரை எனபது ஒரு எண்ணிக்கையையும் குறிக்குமாம்.


இதோ ஒரு கம்ப ராமாயணப் பாடல்.....

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
 தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி.

பத்துமுக இராவணன் மகனான இந்திரசித்து,தாமரை வடிவில்  தலை உடைய , தாமரைக் கணக்கிலானலான  அம்புகளை இலக்குவன் மேல் செலுத்தி ஆர்ப்பரித்தான்

தாமரை போன்ற கண்களை உடைய இராமனின் தம்பியாகிய இலக்குவன்
,தானும் தாமரை வடிவில் தலை உள்ள அம்புகளை தாமரைக் கணக்கில் விட்டு இந்திர சித்தின் அம்புகளைத் தடுத்து வீழ்த்தினான்
 
தாமரைக் கணக்கின்” என்றால் என்ன அர்த்தம்?

வடமொழியில் த்மம்என்று ஓர் எண் உள்ளதாம். அது, நூறு லட்சம் கோடி, . அதாவது கோடிகோடி.

அந்தப் த்த்தை, கம்பர் தாமரைஎன்று மொழிபெயர்க்கிறார் என்று சொல்கிறார்கள்

இந்திரசித்து  தாமரை மலர் வடிவத்தில் நூறு லட்சம் கோடி அம்புகளைச் செலுத்த (தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கில்), பதிலுக்கு லட்சுமணனும் அதேபோன்ற  நூறு லட்சம் கோடி அம்புகளைச் செலுத்தி அவற்றை முறியடிக்கிறான்.

எப்படித் தாமரை விளையாட்டு? !Friday, September 13, 2013

நான் காதலித்த பெண்கள்!ஆரம்பப்பள்ளியில் அலைக் கூந்தல் அகிலா

உயர்நிலைப் பள்ளியில் உதட்டழகி உமா

கல்லூரிக்காலத்தில் கன்னம் சிவந்த கனகா

வேலை தேடும்போது,வேல்விழி வேணி

பணியில் சேர்ந்த பின் பல்லழகி பவித்ரா

விடுமுறை நாட்களில் விரலழகி விமலா

இத்தனையும் தாண்டி மணம் புரிந்ததோ

அத்தனையும் சேர்ந்த அழகியாம் தங்கமணி!

(பெயர் சொல்ல மாட்டேன்!)

முதல் ஆறும் முடிவில்லா கைக்கிளை!

கடைசியில் வந்ததுதான் அன்பின் ஐந்திணை!!

 டிஸ்கி:(இதெல்லாம் உண்மையில்லீங்கொ!ச்ச்சும்மா)(அய்யோ!கடைசி  மட்டும்  முழுசா உண்மைங்கோ!)Thursday, September 12, 2013

காதல் அனுபவம்!காதலில் விழுவதென்பது,அண்ணாசாலை எல்.ஐ.சி.கட்டிடத்திருந்து குதிப்பதைப் போன்றது!
மூளை சொல்கிறது,இது ஆபத்தானது என்று.
இதயம் சொல்கிறது,உன்னால் பறக்க முடியும் என்று!
...........................................
காதல் என்பது எல்லோரும் பேசும் மொழி;ஆனால் அதை இதயத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!
.....................................................................
தயக்கத்தில் தொடங்கி,வருத்தத்தில் முடிந்தாலும் இடைப்பட்ட காலம் எவ்வளவு இனிமை யானது?!
.......................................
காதல் ஒரு வலி என்று சொல்வர் பலர்
ஆனால் தனிமை ஒரு வலி
புறக்கணிப்பு ஒரு வலி
இழப்பு ஒரு வலி
ஆனால் இவ்வலிகளுக்கெல்லாம் மருந்து காதலன்றோ?!
.........................................................
வயது என்பது காதலிலிருந்து காப்பதில்லை;ஆனால் காதல் என்பது சிறிதாவது வயதாவ திலிருந்து காக்கத்தான் செய்கிறது!
.............................................................
காதல் என்பது எப்போதும் சிறிது பைத்தியக்காரத்தனம் கலந்தே இருக்கிறது.ஆனால் அந்தப் பைத்தியக்காரத்தனத்திலும் ஒரு தெளிவு  கலந்திருக்கிறது !

.....................................................

கண்களால் காண முடியாத எதையோ இதயம் கண்டு விடுகிறது; உண்மைக் காதல் பிறக்கிறது!

.......................................................

ஆழ்ந்து காதலிக்கப்படுவது, சக்தியைக் கொடுக்கிறது;ஆழ்ந்து காதலிப்பது,துணிச்சலைக் கொடுக்கிறது.

........................................................
ஆதலினால் காதல் செய்வீர் ஜகத்தீரே!