Saturday, August 31, 2013

சென்னை பதிவர் திருவிழா-2013--நேரடி ஒளிபரப்பு-நாங்க ரெடி.நீங்க ரெடியா?!

ஆபீசர் வந்துட்டாஹ 
ரமணி ஐயா வந்துட்டாஹ 
நக்கீரன் வந்துட்டாஹ 
வீடு சுரேஷ் வந்துட்டாஹ 
மற்றும் நம்ம மதுரை, திருப்பூர் உறவினர் எல்லாம் வந்துட்டாஹ! 
மதியம் சூப்பரான பிரியாணி சாப்பிட்டாஹ!
உங்களால வர முடியலயேன்னு கவலைப்படாதீஹ! 
நாளை காலையில 9 மணிக்கு நம்ம தளத்துக்கு வந்திருங்க
நேரடி ஒளிபரப்பப் பாருங்க! 
ஓகே?!

Friday, August 30, 2013

மன நல மருத்துவருடன் குட்டன்!-பதிவர் திருவிழா-2013மன நல மருத்துவர் முன் அமர்ந்திருக்கிறார் குட்டன்.

”சொல்லுங்க” என்கிறார் ம ந ம.

”எனக்கு நாலைந்து  நாளா ஒரு பிரச்சினை”

”பிரச்சினை இருக்கறதுனாலதானே வந்துரிக்கீங்க!என்ன பிரச்சினை?”

”1 ஆம்தேதி தமிழ் வலைப்பதிவர் திருவிழா நடக்க இருக்கிறது”

“ஆமாம்!நண்பர் ருத்திரன் கூடச் சொல்லிகொண்டிருந்தார்.திருவிழாதான் உங்க பிரச்சினையா?!”

”இல்ல டாக்டர்.தினம் ஒரே கனவு வந்து என்னை இம்சிக்குது. ”

”கனவா?திருவிழா சம்பந்தமான கனவா?

“ஆமாம் டாக்டர்”

“என்ன கனவு சொல்லுங்க”

”கனவில திருவிழா போவதற்காக நான் ரொம்ப ஆவலுடன் இருக்கிறேன்.நான் போய் என்னை அறிமுகம் செய்து கொண்டதும் பல பதிவர்கள் என்னைச் சூழ்ந்துக்குவாங்க.
வெகுவாகப் பாராட்டுவாங்க என்றெல்லாம் பல எதிர்பார்ப்புகள்.நல்லா டிரஸ் பண்ணிக் கிட்டுப் போகிறேன்.”

“நல்லாத்தானே போயிட்டிருக்கு”டாக்டர் ஜோக்கடிக்கிறார்

“இனிமேதான் பிரச்சினையே!நான் போய் அரங்குக்குள் நுழைகிறேன்.வாசலில் இருவர் அமர்ந்து வருகைப்பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.நானும் எனக்கு முன் வந்த மூவருக்குப் பின் காத்துக் மொண்டிருக்கிறேன்.அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து பதிவு  செய்யும் அவர்கள் இருவரும் சீனு,ரூபக் ராம் என்று அறிகிறேன்.எனக்கு மிக மகிழ்ச்சி.அதற்குக் காரணம் பின்னர் சொல்கிறேன்.என் முறை வருகிறது”

”பெருமையாகச் சொல்கிறேன்வலைப்பூவின் பெயர் “குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்”என் பெயர் குட்டன்.அவர்கள் இருவரும் பரபரப்பாகி என்னை வரவேற்பார்கள் என்ற அல்ப ஆசை!ஆனால் அவர்கள் சர்வ சாதாரணமாக விவரங்களை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டையைக் கொடுக்கின்றனர்.”

”எனக்குப் பெருத்த ஏமாற்றம்.ஏன் தெரியுமா டாக்டர்?இவர்கள் இருவருமே என் ரசிகர்கள் என்று சொன்னவர்கள்.”

“நேரில் சொன்னார்களா?

”இல்லை டாக்டர் பின்னூட்டத்தில் சொன்னார்கள்.என்னை எதிர்பார்ப்பதாகவும் சொன்னவர்கள்”

“என்ன சார் நீங்க?ஒரு வருசத்துக்கு மேலா வலைப்பூ நடத்துறீங்க.இது கூடத் தெரியலையே. பின்னூட்டத்தில சொல்றதெல்லாமே உண்மைன்னு நம்புறீங்க.உங்களுக்குத்தான் குச்சி மிட்டாயும்  குருவி ரொட்டியும் குடுக்கணும்.அதெல்லாம் ஒரு பின்னூட்ட நாகரிகம். அவ்வளவுதான். இதெல்லாம் ரொடீன்.சில பேர் ரைட்டு,ஓகேன்னுவாங்க சிலர்’ ம்’ ன்னு ஒரு முக்கு முக்குவாங்க.அது போலத்தான்!”

குட்டன் மிரளா மிரள விழிக்கிறார்.

டாக்டர் தொடர்கிறார்”உங்க ஆழ் மனசுல இப்படிப் பட்ட எண்ணம்  ஊன்றிப்போச்சு.நீங்க திருவிழாவுக்குப் போய் அங்கே உங்களை யாரும் கண்டுக்கலைன்னா,அது மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும்;பிரச்சினை பெரிசாகி விடும்.”

”அப்ப என்ன செய்யலாம் டாக்டர்”

”ஒரே ஒரு வழிதான்”

”என்ன ?”

“திருவிழாவுக்குப் போகாதீங்க?!

டாக்டர் அறிவுரைப்படிக் குட்டன் திருவிழாவுக்குப் போவதில்லை என முடிவெடுக்கிறார்!

Thursday, August 29, 2013

தேடிப் பிடிக்கும் என் ஆன்மா!
எனக்குத் திசைகாட்டி தேவையில்லை
      நீ இருக்கும் இடம் தெரிய.
உனது இதயத்தின் துடிப்பொலியே
    என்னை வழி நடத்தும்

இருட்டில் ஒளிந்திருக்கும் உன்னைத்தேட
     எனக்கு வெளிச்சம் தேவையில்லை
உன் முத்துப்பல் ஒளியே போதும்
     உன்னை நான் தேடிப்பிடிக்க!

காற்றின் உதவி தேவையில்லை
     உன்னை கண்டு பிடிக்க
உன் தேன் குரல் ஒலி கிசுகிசுப்பாய்
      என் காதோடு வழிகாட்டும்

நட்சத்திரங்கள் தேவையில்லை
   என்னைக் கூட்டிச் செல்ல
இருளிலும் ஒளிரும் உன் கண்கள்
     என்னை இழுத்துச் செல்லும்!

ஆனால் என் அன்பே!

வழிதவறி என்றேனும் போக நேர்ந்தால்
      நிச்சயம் நான் உயிர் நீப்பேன்.
அப்போது என் ஆன்மா உன்னை
      அடைந்தே தீரும்!


டிஸ்கி:பதிவர் திருவிழா பற்றி நிறைய எழுதியாகி விட்டது.எனவே லைட்டா ஒரு காதல் கவிதை!


Tuesday, August 27, 2013

பதிவர் திருவிழா-2013--கல்யாணம் பண்ணிப் பார்!

கல்யாணம் பண்ணிப்பார்;வீட்டைக் கட்டிப்பார்என்று சொல்வார்கள்.

இரண்டிலும் உள்ள சிரமத்தை எடுத்துக்காட்டுவதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை.

இரண்டுக்குமே அதிகபொருள் செலவு;அதிக நேரம் தேவை-சரியாகத் திட்டமிடுதல், தவறின்றிச் செயலாற்றுதல்-,அதிக உழைப்பு தேவை.


ஆனால் இன்றைய சூழலில்,பொருட்செலவைத் தவிர மற்ற சிரமங்கள் இல்லாமல் போய் விட்டன.

கல்யாணத்துக்கும் காண்ட்ராக்டர் இருக்கிறார்;வீடு கட்டவும் காண்ட்ராக்டர் இருக்கிறார்.

என் உறவினர் ஒருவர் ஒரு ஹோட்டலில் மகளின் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார்.
அப்போது அந்த ஓட்டலின் மேலாளர் கூறினாராம்மணமகன்,மணமகள்,காசோலைப் புத்தகம் மூன்றுடன் வாருங்கள் போதும்என்று

ஆம் திருமணம் நடத்துவது என்பது அவ்வளவு எளிதாகி விட்டது.

ஆனால் ஒரு பதிவர் திருவிழா நடத்துவது என்பது திருமணம் ,வீடு இரண்டையும் விட மிகப் பெரும் செயலாக இருக்கிறது என்பது  ஒரு நண்பர் வழியாக எனக்குக் கிடைக்கும் செய்திகள் மூலம் தெரிகிறது.

இரண்டு மாதமாகத் திட்டமிடல்.

ஒவ்வொரு வாரமும் ஆலோசனைக் கூட்டம்.

பணியைப் பிரித்துகொண்டு செயலாற்றும் தனித்தனிக் குழுக்கள்.

குழுக்களின் ஒருங்கிணைப்பு.

இன்னும் நான்கு நாட்களே  பாக்கி இருக்கும் நிலையில் கடைசிக்கட்ட ஆலோசனைகள்.

சிறப்பான உணவு ஏற்பாடு.

காவல் துறையின் அனுமதி பெறல்

விழாவுக்கு முதல்நாள் முதல் வெளியூர்ப் பதிவர்களை வரவேற்றல்.

தங்குமிடம் ஏற்பாடு செய்தல்

விழாவன்று மேடை,ஒளி ஒலி ,புகைப்படம் ,வீடியோ ஏற்பாடுகள்.

தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள்.

நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு.

கடைசி நாள் வரை நிகழ்ச்சி நிரலை மேம்படுத்தத் திட்டமிடல்

எல்லாவற்றுக்கும் மேலாக விழாவன்று நேர மேலாண்மை.

எவ்வளவு ஈடுபாட்டுடன்,சரியாகத் திட்டமிட்டு,பணிகளைப் பிரித்துக் கொண்டு
முழு   மூச்சுடன் செயல்படுகிறார்கள் இந்த இளைஞர்கள்!

இந்த உழைப்புக்குப் பரிசாக கிடைக்கப்போவது விழாவின் மகத்தான வெற்றி!


அடுத்த வாரம் இந்நேரம் விழா சிறப்பாக நடந்தேறி . விழா அமைப்பாளர்களுக்கு திருஷ்டி கழித்து முடிந்திருக்கும்.

இளைப்பாற நேரம் சிறிதும் இன்றி அலுவலகப் பணி.அழைக்க ஓடிக்கொண்டிருப்பார்கள்!

ஆனால் புதிய நண்பர்களின் அறிமுகம்,விரிவடைந்து விட்ட நண்பர் வட்டம்  அனைத்துக்கும் மேலாக சாதித்து விட்டோம் என்ற மன நிறைவு அவர்கள் களைப்பைப் போக்கி விடும்

வாழ்த்துக்கள் !

டிஸ்கி:”கல்யாண சமையல் சாதம்  காய்கறிகளும் பிரமாதம்” என்று கடோத்கஜன் பாடுவது போல் பாட வைக்கும் விருந்து காத்திருக்கிறதாமே!

என்ன மெனு சொல்லுங்கப்பா,நாரதரும் தேவேந்திரனும் தெரிஞ்சுக்கட்டும்!