Friday, July 26, 2013

முத்தச் செலவுக் கணக்கு!



வெளிநாட்டில் பணியில் இருந்த ஒரு கணவன் தன் மனைவிக்கு எழுதினான்

”அன்பே! பொருளாதாரச்  சீர்கேட்டின் காரணமாக இங்கு நிலைமை சரியில்லை.இந்த மாதச் சம்பளம் வரவில்லை.எனவே பணம் அனுப்ப இயலவில்லை.ஆனால் உனக்கு 100 முத்தங்கள் அனுப்பியிருக்கிறேன். நிலைமையைப் புரிந்து அனுசரித்து நடந்து கொள் என் உயிரே”

மனைவி பதில் எழுதினாள்”அன்புக் கணவரே!100 முத்தங்களுக்கும் நூறு நன்றிகள்.நீங்கள் அனுப்பிய முத்தங்களை கீழ்க்கண்டவாறு செலவழித்தேன்….

1)பால்காரன் பால் பாக்கிக்காக இரண்டு முத்தங்களுக்கு ஒப்புக் கொண்டான்!

2)மின் தொடர்பைத் துண்டிக்காமல் இருக்க ஏழு முத்தங்கள் செலவழிக்க வேண்டியதாயிற்று.

3)வீட்டுச் சொந்தக்காரர் தினம் வந்து வாடைகைக்குப் பதிலாக இரண்டு முத்தம் பெற்றுச் செல்கிறார்

4)மளிகைக்கடைக்காரரோ முத்தம் போதாது என்கிறார்!என்ன செய்ய?

5)இதர செலவுகள் 40 முத்தங்கள்.

கவலை வேண்டாம்.

மீதி இருக்கும் 35 முத்தங்களை வைத்து இந்த மாதத்தை ஓட்டி விட முடியும்!

அடுத்த மாதம் எப்படி?

அன்பு மனைவி

(முக நூலில் படித்தது)



Thursday, July 25, 2013

எங்கேடி நம்ம குழந்தை?...



ஒருவன் ஒரு புதுக்கார் வாங்கினான்.

அக் காரின் சிறப்பு என்ன என்றால்,அது ஒரு ரோபோ கார்.

 அவன் என்ன கட்டளையிட்டாலும் அதைத் தானே செய்து முடிக்கும்.

அது வந்த பின் அவன் எங்கெல்லாம் சென்று வரவேண்டுமோ அங்கெல்லாம் அதை அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்க ஆரம்பித்தான்;

அதுவும் அவன் கட்டளைகளைச் சரியாக நிறைவேற்றி வந்தது.

ஒரு நாள் அவன் மனைவி சொன்னாள்”எனக்கு இன்று மிகக் களைப்பாக இருக்கிறது.எனவே உங்கள் காரை அனுப்பிக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சொல்லுங்கள்”

அவனும் காரிடம் “என் குழந்தைகளை அழைத்து வா”எனச் சொல்லி அனுப்பினான்.

கார் வெகு நேரம் திரும்பி வரவில்லை.

அவனுக்குக் கவலை அதிகமாகிப் போலீஸில் புகார் செய்யப் புறப்படும் நேரத்தில் கார் வந்து சேர்ந்தது.

 “உங்கள் குழந்தைகள்”என்று சொல்லி நின்றது.

காரிலிருந்து எதிர்வீட்டுச் சிறுமியும்,பக்கத்து வீட்டுப் பையனும்,அவன் ஆபீஸ் டைப்பிஸ்ட் மகளும்,அவன் மனைவியின் நண்பியின் பையனும் இறங்கினர்.

மனைவி கோபத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்”இவர்களெல்லாம் உங்கள் குழந்தைகளா?”

அவன் கேட்டான்”அது இருக்கட்டும் .ஆனால் காரில் நம் குழந்தைகள் இல்லையே அதற்கு என்ன சொல்கிறாய்?”

ஹய்யோ ஹய்யோ!...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)))))))

Wednesday, July 24, 2013

எனது முதல் கணினி அனுபவம்..(தொடர் பதிவு)



என்னைச் சந்திக்காமலேயே என் மீது அப்படி என்ன கோபமோ பள்ளி மாணவனுக்கு (அதாங்க ஸ்கூல் பையன்!),ஒரு சிக்கலான தொடர் பதிவில கோத்து விட்டு விட்டார்!”என் முதல் கணினி அனுபவம்என்ற தலைப்பில் எழுத வேண்டுமாம்.இதைத் தன் வளைக் கரங்களால் தொடங்கி வைத்தவர் ஆரணி அக்கா!என்னவோ போங்கப்பா;நானும் இதுல மாட்டிக்கிட்டேன்!

எனக்குத் தினமும் கணினி முன் அமர்வதே முதல் அனுபவம் போலத்தான் தோன்றுகிறது; எதோ ஒரு விரலால் தட்டிப் பதிவை ஒப்பேத்தி விடுகிறேனே தவிர,நுணுக்கங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை!சிலரது பதிவுகளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது! எத்தனை அலங்காரங்கள்?!

சரி விடயத்துக்கு வருவோம்.என் முதல் கணினி அனுபவம் ,எப்போது ?(ஐயா புண்ணிய வான்களே!முதல் கணினி அனுபவத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.ஒவ்வொரு அனுபவமாகத்  தொடராதீர்கள்!) பள்ளியில் படிக்கும்போதா?கல்லூரி சென்றபிறகா?அது முக்கியமில்லை அனுபவம் எப்படி என்பதே முக்கியம்.

என் வீட்டுக்கு அருகில் ஒரு கணினிப் பயிற்சி நிறுவனம் தொடங்கினார்கள். அதில் இலவச அறிமுகம் என்று பயிற்சி வகுப்பு ஒன்று நடத்தினார்கள். இலவசமாச்சே,விடலாமா?முதல் ஆளாகப் போய் விட்டேன்.முதல் வகுப்பில் இருபது பேர் இருக்கும்.பத்துக் கணினிகள். ஒவ்வொன்றின் முன்னும் இருவர்.என் பார்ட்னர்…….(வேண்டாம் அந்தக்கதையெல்லாம் எதற்கு. சுருக்கமாகச் சொன்னால் வகுப்பு சுவாரஸ்யமாகப் போக உதவியது!)

குப்பையைப் போட்டால் குப்பை வரும்,பைனரி என்று என்ன வெல்லாமோ சொன்னார்கள். கடைசியில் உருப்படியாக எல்லோரும் ஒரு  மின்னஞ்சல் கணக்குத் தொடங்க உதவினார்கள். நான் யாஹூ வில் ஒரு கணக்குத் தொடங்கினேன்.இடையில் பிஸ்கட் ,டீ வேறு!

அது ஒன்றுதான் நான் அன்று கற்றுக் கொண்டது!

ஆனாலும் சுவாரஸ்யமான அனுபவம்தான்!

நான் மட்டும் சும்மாவிடலாமா ஐந்து பேரை மாட்ட வேண்டாம்?!

இதில் ஒரு சங்கடம் என்னவென்றால்  இச் சுழலில் ஏற்கனவே சிக்காதவர்களாகத் தேட வேண்டும்;என் பதிவைப் படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதானே  அவர்களுக்குத் தெரியும்!

அந்த ஐவர்!

1)வே.நடனசபாபதி

2)s.suresh

3)டினேஷ் சுந்தர்

4)கவியாழி கண்ணதாசன்

5)காமக் கிழத்தன் 

எழுதுவாங்கன்னு நம்புகிறேன்!






Tuesday, July 23, 2013

காதல் முக்கியம்!



 

காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது.
 
இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது.

ஆங்கிலத்தில் அழகாக 'Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது. நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். 'நான்' என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.

சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகி விடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மை விட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்.

கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம்.

புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டுவந்து வைத்தார். 'அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன.
உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.

பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்...

'
சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப்போகிறீர்கள். அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன்  ஒன்றாகப்போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது.

எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மை யான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்... வேதனையில் அல்லாடுகிறீர்கள்!

 
காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல்கொள்ளலாம்.

காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்னை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல்கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?''


(சத்குரு ஜக்கி வாசுதேவ்--தமிழ் தாயகத்திலிருந்து)