Saturday, September 29, 2012

சிரித்து வாழ வேண்டும்!-சிறிது சைவம்,சிறிது அசைவம்!!



முதலில் சைவம்!

அப்புவும் குப்புவும் பேரறிஞர்கள்!

ஒருநாள் செஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.

ஆடிப் போர் அடித்ததால் ஆட்டத்தை நிறுத்த எண்ணினர்.

குப்பு சொன்னான்”உன்னிடம் ஒரு யானைதான் இருக்கிறது;என்னிடம் ஒரு கோட்டை இருக்கிறதே” என்று!

அப்போது விஷி(ஆனந்த்) அங்கு வந்தார்.

“அப்பு,குப்பு ஒரு ஆட்டம் ஆடலாமா?” என்றார்.

“வேண்டாம் நீங்கள் எங்களைத் தோற்கடித்து விடுவீர்கள்”-அப்பு.குப்பு

”இரண்டு பேரும் சேர்ந்து என்னை எதிர்த்து ஆடுங்கள்”

“அப்போதும் தோற்கடித்து விடுவீர்கள்”

“சரி!நான் இடது கையால் ஆடுகிறேன்,அப்போது”

அப்புவும் குப்புவும் சம்மதித்து ஆடினர்.

தோற்றுப்போயினர்.

ஆனந்த் போன பின் அப்பு சொன்னான்”நாம் ஏமாந்து விட்டோம்;அவர் இடது கைப் பழக்கம் உள்ளவராக இருப்பார்!”

நன்றி:டைம்ஸ் ஆஃப் இந்தியா

:) :) :) :) :)

இப்போது கொஞ்சம் அசைவம்!

ஒரு  மெல்லிய ரப்பர் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஒருவர் சென்றார்.

ஊழியர் ஒருவர் அவருக்குச் சுற்றிக் காட்டினார்.

முதலில்,குழந்தைகள் பால் குடிக்கும் புட்டியில் பொருத்தப்படும்  சூப்பான் தயாரிக்கும் பகுதி.

அங்கு இருந்த எந்திரங்கள்,”உஸ்-ப்ள்ப்,உஸ்- ப்ளப் என்ற ஒலியுடன் இயங்கிக் கொண்டிருந்தன.

ஊழியர் சொன்னார்”உஸ் வரும்போது ரப்பர் குழம்பு அச்சில் ஊற்றப்படுகிறது; ஒரு ஊசி சூப்பான் முனையில் துளை இடும்போது ‘ப்ளப்’ ஒலி எழுகிறது”

அடுத்து ஆணுறை தயாரிக்கும் பகுதிக்குச் சென்றனர்

எந்திரங்கள்”உஸ்,உஸ்,உஸ்,உஸ்-ப்ளப்;உஸ்,உஸ்,உஸ்,உஸ்-ப்ளப் என ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.

ஊழியர் சொன்னார்”உஸ் ஒலி எழும்போது ஆணுறை அச்சில் ரப்பர் ஊற்றப்படுகிறது, ஒவ்வொரு நாலாவது உறையிலும் ஊசி துளையிடும்போது ‘ப்ளப் ”ஒலி எழுகிறது.

வந்தவர் கேட்டர் இது தவறில்லையா என.

ஊழியர் சொன்னார்”எங்கள் பால் புட்டி சூப்பான் வியாபாரமும்  நன்கு நடக்க வேண்டுமே!!”

நன்றி-யாரோ!

:)) :)) :)) :)) :))

Friday, September 28, 2012

கதை கேளு,கதை கேளு!



 ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். 

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.

‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. 

வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு -(குறள்)


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். 


சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
 

அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது..”.பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் ”என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

”அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன்” என்றான்.


மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது.

தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

”அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்”-(குறள்)

டிஸ்கி:கதைகள் எங்கோபடித்தவை!








Thursday, September 27, 2012

மல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்!-வாவ்!


                                                   மல்லிகா ஷெராவத்--சேலையில்!

   அரை குறை ஆடையில் என்றும் காட்சி தரும் பெண்ணே
   அழகாகச் சேலை உடுத்தி வந்த காரணம் என்ன?
   அறிவாயா நீ பெண்கள் அழகு கூடும் வழி ஒன்று
   அடக்கமாகச் சேலை அணிய  எப்பெண்ணும் அழகுதான்!



Wednesday, September 26, 2012

நான் பெரிய பதிவர் எனும் அகந்தை!



மனிதர்களுக்குக்  மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்,மனிதர்களை அழிவுக்கு இட்டுச்செல்லும் மிக முக்கியமானவை ‘நான் ’,’எனது’.

வடமொழியில் நான் என்பதை அகங்காரம் என்றும் எனது என்பதை மமகாரம் என்றும் குறிப்பர்.

ஒரு குட்டிக் கதை.ஒரு நாட்டில் சிறந்த ஞானி ஒருவர் இருந்தார் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரிடம் ஆசி பெற்றுப் பலன் அடைந்தனர்.

அவரைப்பற்றி அறிந்த அந்நாட்டு மன்னன் ஒரு நாள் அவரைக் காணத் தன் பரிவாரங்கள் புடை சூழ ஆர்ப்பாட்டமாக வந்தான்.அவன் ஞானியின் குடிலுக்குச்  சிறிது தொலைவில் வந்தபோது, அவனைப் பார்த்த அவர், குடிலுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.மன்னன் மிகவும் கோபம டைந்தான்.   

குடிலின் வாசலில் நின்று சத்தம் போட்டுச் சொன்னான்”நான் இந்த நாட்டு மன்னன் வந்திருக்கிறேன்;வெளியே வந்து  ஆசி வழங்குங்கள்.”

பதில் இல்லை.

மீண்டும் சொன்னான்”நான் திரிபுவனச் சக்ரவர்த்தி கேசரிவர்மன் வந்திருக்கிறேன்.வெளியே வந்து அருள் செய்யுங்கள்”

உள்ளிருந்து குரல் வந்தது”நான் செத்த பின் வா”

மன்னன் திகைத்தான்.என்ன இவ்வாறு சொல்கிறார்?அவர் செத்த பின் எவ்வாறு ஆசி வழங்குவார்?

அமைச்சரைப் பார்த்தான்.

அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்.நன்மை தீமையை மன்னனுக்கு எடுத்துச் சொல்பவர்களாக இருந்தனர்

அமைச்சர் சொன்னார்.”நீங்க நான் ,நான் என்று உங்களை பற்றிப் பெருமை யாகச் சொன்னீர்களல்லவா?அந்த நான் எனும் அகந்தை அகன்ற பின் வா என்று சொல்கிறார்”

மன்னன் தெளிவடைந்தான்.

நான் எனது என்ற எண்ணம் நிறைந்திருந்தால் மனம் குழம்பித்தான் இருக்கும்.

நீங்கள் உங்கள் காரில் ஏறி அமர்கிறீர்கள்.சாரதியிடம் சொல்கிறீர்கள்,
”சாரதி,காரை தெரு முனையில் நிறுத்து”என்று.

அப்படித்தானே சொல்வீர்கள்?

என் காரைத் தெருமுனையில் நிறுத்து என்று சொல்வீர்களா?

மாட்டீர்கள்தானே?

ஏனெனில் அதற்கு அவசியமில்லை.

ஆனால் குருட்சேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு இந்த மமகார உணர்வு ஏற்படுகிறது

சாரதியான கண்ணனைப் பார்த்து,”இரண்டு சேனைகளுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு போய் நிறுத்து” என்று சொல்கிறான்.

”சேனையோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத’”

இது அவனது அகங்காரத்தை,மமகாரத்தைக் காட்டவில்லையா?

கீதை வகுப்பில் ஸ்வாமிஜியிடம் நான் இதே கேள்வியைக் கேட்டேன்.சரியான பதில் கிடைக்கைவில்லை.

அர்ஜுனனுக்குக் குழப்பம் ஏற்பட்டதே இந்த அகந்தையால்தான் என நான் எண்ணுகிறேன்.

நான்,எனது ரதம்,என் உறவினர்,நான் கொல்லப்போகிறேன்—நான்,நான்,நான்.

முடிவு குழப்பம்.

எனவே இயன்றவரை இந்த நான்,எனது என்னும் செருக்கை விட்டொழிக்க வேண்டும்

வள்ளுவர் சொல்கிறார்-

”பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு”---347-

யான்,எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டு விடாதவரை,துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

Tuesday, September 25, 2012

தங்கமணியும்,நிலமும்!



”செல்லம்!”

“விடுங்க!ராத்திரி வந்தாக் கொஞ்சல் !மத்த நேரம் எல்லாம் என் ஞாபகமே வராது”

“என்னடி செல்லம் அப்படிச் சொல்லிட்ட?”

”ஆமாம் உண்மையைத் தான் சொல்றேன்.வாரத்துல ஆறு நாள் ஆபீஸ்.மீதி ஒரு  நாள் நண்பர்களைப் பார்க்க அது இதுன்னு போயிடுவீங்க.ஆபீஸிலிருந்து வந்தா ராத்திரி படுக்கற வரைக்கு இந்தக் கணினியைக் கட்டிகிட்டு அழறீங்க! கேட்டா வலைப்பூ,மண்ணாங்கட்டின்னு சொல்றீங்க.என்ன சொன்னாலும்
காதுலயே ஏறாது. படுக்கைக்கு வந்ததும் கொஞ்சலோ?

”நான் எவ்வளவு பிரபலம் தெரியுமா?தினம் என் வலைப்பூவுக்கு 1000 ஹிட் வருதாக்கும்!”

”அதுனாலே ஒரு பைசா பிரயோசனமில்லை.பெண்சாதின்னு ஒருத்தி இருக்காங் கறதே ராத்திரிதான் ஞாபகம் வருது உங்களுக்கு.”

“கோபிச்சுக்காதே கண்ணமா!டைம் வேஸ்ட் பண்ணாம வாடா!”

”பக்கத்திலேயே வராதீங்க!ஒண்ணும் கிடையாது.”,

தங்கமணி கோபித்துக் கொண்டு தள்ளிப்படுக்கிறாள்.தன்னைக் கணவன் கவனிப்பதில்லை என்றால் தங்கமணிக்குக் கோபம் தானே வரும்!

இது ஊடல் ;புலவி!
.............................................................
”உனக்கு என்னப்பா? பத்து ஏக்கர் நஞ்சை இருக்கிறது.நல்ல வருமானம் வரும்.”

“எங்க!கொஞ்சம் கொஞ்சமா விளைச்சல் குறைந்து கொண்டேதான் இருக்கிறது.
வருமானமும்.”

”ஏன் அப்படி?யோசிச்சுப் பார்த்தாயா?நீ உன் நிலத்தைப் போய்ப் பார்ப்பதே இல்லை.நீ கவனத்துடன் அதற்கு வேண்டியதெல்லாம் செய்தால் அதுவும் பலன் தரும்.நீ அதைக் கவனிக்கவில்லையென்றால்,அதுவும் கவனிக்காது!”
................................
ஆம். மனைவியும் நிலமும் ஒன்றுதான்.

நான் சொல்லவில்லை;
 
வள்ளுவர் சொல்கிறார்.

”செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”

நிலத்திற்கு உரியவன்நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்----(டார்.மு.வ, உரை)

ஆம் அது சண்டையல்ல,ஊடல்தான்.அந்த ஊடல் தீர வேண்டுமானால் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.அப்போது ஊடல் தீரும்.இன்பம் பிறக்கும்.—

தங்கமணியானாலும் சரி தங்க நிலமானாலும் சரி!

டிஸ்கி:காமத்துப் பாலிலேயே படம் காட்டிக்கொண்டிருக்கிறாயே ,குறளில் வேறு ஏதாவது எழுதக் கூடாதா,என என் மனச்சாட்சி கேட்டதின் விளைவு இந்தப் பதிவு!