Saturday, June 22, 2013

எத்தனை அழகு இருபது வயதினிலே!அப்படி ஒரு அழகு அவள்!

எப்படி நான் விலகுவேன் அவளை விட்டு?

கல்லூரி சென்றாலும்

கடற்கரை சென்றாலும்

கண்டிப்பாய் பின் செல்வேன்.

கடைக்கண் பார்வைக்காய் காத்திருந்தேன்!

கரும்பாய் ஒரு மொழி சொல்வாளா?

திரும்பிப் பார்த்தாள் ஒரு நாள்

"ஏன் என்னை எப்போதும் தொடர்கிறாய்?”

திகைத்தேன்;தடுமாறினேன்

தயங்கி வந்தன சொற்கள்

“காதலிக்கிறேன் உன்னை”

சிக்கனமாய்ச் சிரித்தாள்!

கேட்டாள்”நான் அழகென்பதாலா?

என்னை விட அழகு என் தோழி

உன் மனம் அவளிடம் மயங்கும்

உன் பின்னால்தான் வருகிறாள்பார்!”

திரும்பிப்பார்த்தேன்;யாருமில்லை

திரும்பினேன் மீண்டும்.

ஏளனமாய்ச் சொன்னாள்

”என் மீது காதல் கொண்டிருந்தால்

என்னிலும் அழகி காண

விரும்பியிருக்க மாட்டாய்.

விலகிச் செல் உடனே இங்கிருந்து!”

அவள் சொன்னது சரிதானோ?(அழகிகள்தானே காதலிகளாக முடியும்?அழகாயில்லாதவள்?,,,தங்கைதான்!)
 Friday, June 21, 2013

பாதி ராத்திரிப் பசி!நள்ளிரவு 12 மணியைத் தாண்டி விட்டது.

ஊரடங்கி ஓய்ந்து விட்டது.

பெரிய தெருக்களிலும் சில வண்டிகளைத் தவிர நடப்பவர் அதிகமில்லை.
பசிக்கிறது.

அந்த அகாலத்தில் சென்னை மாநகரில் பசியாற்றிக்கொள்ள எங்கு போகலாம்?

இதோ சில இடங்கள்.


மிட்நைட்எக்ஸ்பிரஸ்-டிடிகே சாலை      
-------------------------------------------------                                   
இரவு ஒரு மணிக்குச் சென்றாலும்,பணியாள் கேட்கிறார்”வடைகறியா, முட்டைதோசையா, கல்தோசையா , எடுத்துச் செல்ல என்ன வேண்டும்?’

ஆம் எடுத்துச் செல்ல மட்டுமே.

அது சரியாய் வராது.

அவர்களது இரவு ஸ்பெசல் கோழி வறுவல் பிரசித்தம்!

ஹை லுக்-சர்தார் படேல் சாலை,அடையாறு.
-------------------------------------------------------------

மத்திய கைலாசுக்கும்,ஐஐடிக்கும் இடையில் உள்ள ஓர் இடம்.

கண்ணில் உடனே படாது.

ஐஐடி மாணவர்கள் சொல்கிறார்கள் இரவு 2 மணி வரை உணவு கிடைக்கும் என்று.

24 மணி நேர உணவகம் என்று சொல்கிறார்கள்.

ரொட்டி ஆம்லெட்டும் மாம்பழச்சாறும் ஆகா!

ஓட்டல் கிரெசண்ட்-நுங்கம்பாக்கம்
-------------------------------------------------
கிராமச்சாலையில் இருக்கிறது

ஒரு மணி வரை உணவு கிடைக்கும்,

நெய்ச்சோறும்,மீன் கறியும் பிரசித்தம்

அது போலவே பரோட்டா-சிக்கன் கூட்டணியும்!

ஆப்பமும் பிரசித்தம் ;ஆனால் 12 மணிக்கு மேல் கிடைப்பது சந்தேகம்!

புஹாரிஸ்-அண்ணாசால
-----------------------------------
அந்த நாள் முதல் இந்த நாள் வரை இரவில் கூட்டம் சேரும் இடம்!

1951 முதல் சேவையில் இருக்கிறது.

1965 இல் அவர்கள் அறிமுகம் செய்ததுதான் சிக்கன் 65

அருகில் இருப்பது சங்கம் ஹோட்டல்.

இரண்டுமே இரவில் நிரம்பி வழியும்!

மத்ஸ்யா,எழும்பூர்
--------------------------
நீங்கள் மரக்கறி உணவு சாப்பிடுபவரா?

உங்களுக்கான ஒரே இடம் மத்ஸ்யா.

இரவு 2 மணிக்கும்  இடம் கிடைக்காதபடிக் கூட்டம்,

எந்த நேரத்திலும் குடுமபத்துடன் செல்லக்கூடிய சிறந்த உணவகம்.


( இந்துவில் வந்த ஒரு கட்டுரை முகநூல் மூலமாகப் பகிரப்பட்டு அதன் முக்கியக் கரு என் மூலம்  உங்களுக்கு வருகிறது.
இரவு  என்றோ சீக்கிரம் ‘வீடு திரும்பாத’ எவரோ எழுதியதோ?!)


Tuesday, June 18, 2013

காங்கிரீட் காட்டில் வாழ் மாக்கள்!மனோகர் சுற்றும் முற்றும் பார்த்தார்.

வீட்டை விட்டு வந்து நெடுநேரம் ஆகிவிட்டதைப் போல் தோன்றியது.

வீட்டுக்குத் திரும்பவேண்டும்.

ஆனால் வழி தெரியவில்லையே?

சிறிது யோசித்தார்.

நான்கு புறமும் சாலைகள் நீண்டு கிடந்தன.

அதில் ஒரு சாலையின் வழியே வந்ததாக அவருக்குத் தோன்றியது.

அந்தச்சாலையில் நடக்க ஆரம்பித்தார்.

ஆனால் அவருக்குத் தெரியாது,செல்ல வேண்டிய திசைக்கு நேர் எதிர்த் திசையில் சென்று கொண்டிருப்பது.

நடந்தார்;நடந்து கொண்டே இருந்தார்……….

நேரம் கடந்தது.

சாலையோரம் இருந்த ஒரு கல்லில் அமர்ந்தார்.

தாகம் எடுத்தது.

அருகில் எங்கும் தண்ணீர் கிடைப்பதாகத் தெரியவில்லை.

வீடு எங்கே இருக்கிறது?

யோசனை,யோசனை.

ஆனால் கேள்விக்கு விடை தெரியவில்லை

மேலும் சிறிது நடைக்குப் பின் ஒரு பூங்காவை அடைந்தார்.

உள்ளே சென்று புல்தரையில் அமர்ந்தார்.

நல்ல வேளையாக அங்கு ஒரு குழாய் இருந்தது.

தண்ணீர் குடித்து விட்டுப் புல் தரையில் படுத்தார்.

இருள் சூழத்தொடங்கியது.

பூங்கா காலியாகியது.

பூங்காக் காவலன் அருகில் வந்து “பெரியவரே!பூங்காவைப் பூட்டப்போகிறேன்.எழுந்து வீட்டுக்குக்குப் போங்க” என்றான்.

அவர் எழுந்தார்.மீண்டும் நடை

ஒரு இலக்கைத்தேடி,இலக்கில்லாத நடை!குளிரத் தொடங்கியது.

சாலையோரத்தில் பலர் படுத்திருந்தனர்.

தானும் அவர்களுடன் படுத்தார்.

தூக்கமில்லாத இரவு!

மறு நாள் மீண்டும் தேடல்.

இவரது தேடலை,இவர் முகத்தில் தெரியும் களைப்பை,கவலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் இயந்திர கதி மனிதர்கள் யாரும் இல்லை.

நன்கு உடை உடுத்தியிருக்கும் இவரை கடந்து செல்லும் காவல் துறையினரும் கண்டு கொள்ளவில்லை.

பசி;தாகம்.

யாரிடமும் கேட்க மனமில்லை.

எதிர்ப்படுவர் முகங்களையெல்லாம் உற்றுப் பார்த்த படி செல்ல,பலர் அவர் பைத்தியமோ என
எண்ணி விலகிச் சென்றனர்.

அவர் முகத்தைப் பார்த்து அவர் களைப்பை உணர்ந்த ஓரிருவர் தண்ணீர் கொடுத்தனர்.

ஒரு நாள் இரண்டு நாள்,மூன்று நாள்…..

உணவின்றிப் படுக்க இடமின்றி அந்தக்காங்கிரீட் காட்டிலே அலைந்தார்.

கடைசி நாள்”ராமு,சோமு என்று மகன்களின் பெயரைச் சொல்லிய படியே பவீடுகளின் வாசலில் நின்றார்.

இந்ப் பைத்தியக்காரன் யார் என்பதே    ம(மா)க்களின் எண்ணமாயிற்று.

நடக்க முடியாமல் சுருண்டு விழுந்தார்.

அந்தக் காங்க்ரீட் காட்டிலே உறவுகள் இருந்தும் அநாதையாய்,மரணமடைந்தார்.

மக்கள் இப்போது அவரைக் கனித்தனர்.தங்கள் வீட்டருகில் அநாதைப் பிணம் 
என்றஎண்னத்தில் போலீஸுக்குப் போன் செய்தனர்.

பிணம் அப்புறப்படுத்தப்பட்டது.

……………………………………………
மனோஹர்லால் சர்மா,77,மே 30 அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.ஜுன் 4 அன்று பசி,தாகம்,சோர்வில் வாடி மரணமடைந்த அவர் உடல் கண்டெடுக்கப்பட்து.

அவருக்கு முதுமை மறதி நோய்.

அவர் காணாமல் போனவுடன் அவர் புகைப்படத்துடன் காவல் துறையில் புகார் செய்யப் பட்டது.

ஆனால் அவர் செத்தபின்தான் கண்டு பிடிக்கப்பட்டார்.

உணர்வுகள் மரத்துபோன ஒரு நகரத்தின் அலட்சியம் இதற்குக் காரணம் என அவரது மருமகள் கூறினார்

(டைம்ஸ் ஆஃப் இந்தியா-18-06-2013)