Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, September 17, 2014

நின்னைச் சரணடைந்தேன்



என் நாளை பொலியச் செய்ய
       
     ஒரு அழகிய புன்னகை போதும்

என் வலிகளை மறக்கச் செய்ய
       
     ஒரு மென்மையான தொடுகை போதும்

என் பயங்களை ஓடச் செய்ய
      
     ஒரு உடல் சேரும் அணைப்பு போதும்
     (வளியிடை போகப்படாஅ முயக்கு)

என் கவலைகள் தீர்வதற்கு
      
     ஒரு ஆறுதல் வார்த்தை போதும்

எவர் தருவார் இவையெல்லாம்
        
     என் அன்பே உன்னை அன்றி!

டிஸ்கி:என்னடா ரொம்பநாளாக்காணாமப் போனவன் திரும்பி வந்திருக்கானே என திகைக்கிறீர்களா?

மதுரையில பதிவர் சந்திப்பு வருதாமில்ல!நாமளும் ஒரு பதிவர்தான்னு நெனவு படுத்தத்தேன்! 

தொடர்ந்து கொஞ்ச நாளைக்கு எழுதிக் ’கொண்டே ’போடலாம்னு இருக்கேன்!
    
       


Thursday, September 19, 2013

நாம் சிரித்தால் தீபாவளி!



தெருவெங்கும் வேட்டுச் சத்தம்;மத்தாப்பு வெளிச்சம்

நெருங்கி விட்ட தீபாவளிக்குக் கடைசி நேர வாங்குதல்கள்

சிறுவர்களின் ஆரவாரம்;பெரியவர்கள் பேச்சுக்குரல்

பக்கத்து வீடுகளில் பலகார நெய் மணங்கள்

ஏக்கத்தோடு பார்த்திருக்கும் என் பையன் சின்னராசு

அக்காவாய் அவனை அணைத்திருக்கும் அன்னக்கொடி

உடுப்பதற்குத் துணியில்லை,வெடிப்பதற்கு வெடியில்லை

அடுத்தவேளை சோறில்லை,அடுப்படியில் பூனை!

பலகாரமெல்லாம் மணத்தை முகர்ந்து மகிழ மட்டும்!

ஆனை வெடி பூனை வெடி அனைத்திலும் அவர் உழைப்பு

ஆனா பெரிய வெடியா ஃபேக்டரியிலே வெடிக்க

 வெடிகளைச் செய்தவர் வெடியிலே போய்ட்டாரே!

விடிஞ்சாத் தீபாவளி .எங்களுக்கு விடிவு எப்போ?

என்னைக்கு நாஞ்ச் சிரிக்க-  எங்களுக்கு

என்னைக்குத் தீபாவளி?


----ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை






Thursday, August 29, 2013

தேடிப் பிடிக்கும் என் ஆன்மா!




எனக்குத் திசைகாட்டி தேவையில்லை
      நீ இருக்கும் இடம் தெரிய.
உனது இதயத்தின் துடிப்பொலியே
    என்னை வழி நடத்தும்

இருட்டில் ஒளிந்திருக்கும் உன்னைத்தேட
     எனக்கு வெளிச்சம் தேவையில்லை
உன் முத்துப்பல் ஒளியே போதும்
     உன்னை நான் தேடிப்பிடிக்க!

காற்றின் உதவி தேவையில்லை
     உன்னை கண்டு பிடிக்க
உன் தேன் குரல் ஒலி கிசுகிசுப்பாய்
      என் காதோடு வழிகாட்டும்

நட்சத்திரங்கள் தேவையில்லை
   என்னைக் கூட்டிச் செல்ல
இருளிலும் ஒளிரும் உன் கண்கள்
     என்னை இழுத்துச் செல்லும்!

ஆனால் என் அன்பே!

வழிதவறி என்றேனும் போக நேர்ந்தால்
      நிச்சயம் நான் உயிர் நீப்பேன்.
அப்போது என் ஆன்மா உன்னை
      அடைந்தே தீரும்!


டிஸ்கி:பதிவர் திருவிழா பற்றி நிறைய எழுதியாகி விட்டது.எனவே லைட்டா ஒரு காதல் கவிதை!


Friday, August 23, 2013

நான் என்றும் உன்னுடையவன் என்னுயிரே!




உனக்கு நான் வாக்களிக்கிறேன் அன்பே

உடல் நலமில்லாத நேரத்தில் உன் மருத்துவனாக

மழையில் செல்கையில் உனக்குக் குடையாக

களைப்படையும்போது அமரும் இருக்கையாக

நீ தலை சாய்த்துஉறங்க ஒரு தலையணையாக

உன் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக

மற்றவர் உனக்குச் செவி சாய்க்க உன் குரலாக

உன் வலிகளில் ஒரு மருந்தாக

உன் இருளில் ஒரு ஒளிரும் தீபமாக

கேள்விகள் எழும்போது பதிலாக

தடைகளைத் தகர்க்க ஊக்கமாக

அச்சப்படும்போது ஆறுதல் கரமாக

தினம் காலை உன்னை எழுப்பும் முத்தமாக

உறங்குமுன் கிசு கிசுக்கும்”நீயே என் உயிர்” ஆக

என்றும் இருப்பேன் நான்!

அன்பே!நான் முழுமையாய் உன்னுடையவன்!


........................................................................