Thursday, May 30, 2013

அம்மா என்றழைக்காத உயிரில்லையே.........

 படத்துக்கான கவிதை
--------------------------------

அம்மா!

உன்னை நான் பார்த்ததில்லை.

நீ யாரோ எனக்குத் தெரியாது.

என்ன காரணத்தால் என்னை உதறிச் சென்றாய்

எனக்குத் தெரியாது.

எனக்கு நீ பெயர் சூட்டவில்லை

ஆனால் பட்டம் கொடுத்துச் சென்றாய்

அநாதையென்று!

அம்மாவின் அணைப்பில்

அம்மாவின் கைபிடித்து நடந்து

அம்மாவின் மடியில் உறங்கும்

குழந்தைகளைப் பார்ப்பேன்!

எனக்கு அந்தச் சுகம் மறுக்கப்பட்டது.

என்ன செய்ய?

உன் மடியில் நான் உறங்க

வேறென்ன செய்ய,இதைத்தவிர!

அம்மா,அம்மா,அம்மா…………                                                                                                                                                                              
நான் ஒரு லட்சாதிபதி!

பதிவுலகில் பலர் அருமையாகக் கதை எழுதுகிறார்கள்.

பலர் சிறப்பாகக் கவிதை எழுதுகிறார்கள்.

பலர் அரசியல் விமர்சனங்கள் அற்புதமாக எழுதுகிறார்கள்.

பலர் திரை விமர்சனங்கள் தெவிட்டாமல் எழுதுகிறார்கள்.

பலர் வாழ்க்கை அனுபவங்களைச் சுவைபட எழுதுகிறார்கள்.

ஆனால் இவன்?(நான் என்பது ஆணவத்தைக்குறிக்குமே!)

பொழுது போக எதையோ எழுதுகிறான்!

ஆங்கிலத்தில் சொல்வது போல் ஒரு jack of all trades கூட இல்லை!


ஆனாலும் இன்று இவன் ஒரு லட்சாதிபதி!

ஆம்!வருகை எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி விட்டது!

லட்சியங்கள்தான் ஏதும் இல்லை!

லட்சமாவது இருக்கட்டுமே!

எல்லாம் உங்கள் தயவுதான்!

அதற்காக என் நன்றிகள் .

இவன் தனக்குள் சொல்லிக் கொள்கிறான்”இனியாவது உருப்படியா ஏதாவது எழுதேன்”

”உருப்படி ”யா எழுத வேண்டுமென்றால் சலவைக்கணக்குதான் எழுத வேண்டும்!
(அதில்தானே எத்தனை உருப்படிகள் என்ற கணக்கு வரும்!) 

தொடர்வான்!

:):):)Tuesday, May 28, 2013

சுவரிலிருந்து ஒரு காபி!வெனிஸ் அருகில் ஓரிடம்.

அங்கு ஓர் உணவு விடுதி.

இரு நண்பர்கள்,ஊருக்குப் புதியவர்கள் அங்கு உணவருந்த வருகிறார்கள்.

அவர்கள் அருந்திக்கொண்டிருக்கும்போதே ஒரு தனி நபர் வருகிறார்.

பணியாளிடம் சொல்கிறார்இரண்டு காபி;ஒன்று சுவரில்

என்னவென்று புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

பணியாள் அந்த நபருக்கு ஒரு காபி கொண்டு வந்து வைக்கிறார்.

அந்த நபர் காபியைக் குடித்து விட்டு இரண்டு காபிக்குப் பணம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அவர் சென்றவுடன் பணியாள் சுவரில் ஒரு சீட்டு ஒட்டுகிறார் அதில்ஒரு காபிஎன்று எழுதியிருக்கிறது

அதைத் தொடர்ந்து இருவர் வருகின்றனர்;மூன்று காபிக்குச் சொல்கின்றனர்.முன்போலவே இரண்டு காபியைக் குடித்து விட்டு மூன்றுக்கு பணம் கொடுத்துச் செல்கின்றனர்.மீண்டும் பணியாள் சுவரில்ஒரு காபிஎன்ற சீட்டு ஒட்டுகிறார்.

சிறிது நேரத்துக்குப் பின் ஒருவர் உள்ளே நுழைகிறார்.அவரது தோற்றம் அந்த உணவு விடுதிக்குப் பொருத்தமாஇல்லை.வறுமை நிலையில் உள்ளர் எனப் பார்த்தாலே தெரிகிறது.

அவர் சுவரைப் பார்க்கிறார் .

ஒரு இருக்கையில் அமர்ந்து ”சுவரிலிருந்து ஒரு காபி”என்று சொல்கிறார்.

பணியாள் சுவரிலிருந்து ஒரு காபி என்றை சீட்டை நீக்குகிறார்


பின் எல்லோருக்கும் கொடுக்கும் அதே பணிவுடன்,ஒரு கப் காபி கொண்டு வந்து கொடுக்கிறார்.

அந்த மனிதர் குடித்து விட்டு, பணம் ஏதும் கொடுக்காமல் ,வெளியேறுகிறார்.

 பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்குப் புரிகிறது

அந்த ஊரில் வசதி குறைந்தவர்களுக்காக் மற்றவர் காட்டும் பரிவின் வெளிப்பாடு அந்தக் காபி

காபி குடித்துச் சென்ற அந்த மனிதர் போல் அநேகர் தாழ்ந்து ,குன்றி கேட்கத் தேவையின்றி,  உரிமையோடு அருந்திச் செல்ல வழி செய்யும் அந்தச் சுவர்!

அந்த ஊர் மக்களின் பண்புக்குச் சான்றாக நிற்கிறது அந்தச் சுவர்!

(இது இணையத்தில் வெகுவாகப் பகிரப்பட்ட ஒரு கதை/நிகழ்வு.இதன் மூலம் தெரியாது...நதி மூலம்,ரிஷி மூலம் போலத்தான்.எதுவாக இருந்தால் என்ன?சொல்லப்பட்ட செய்தி போற்றுதற்குரியது அல்லவா?)

Saturday, May 25, 2013

சீனிவாசன்,பதவி,சட்டம்!
சீனிவாசனை எண்ணி நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.

நாம் அனைவரும் வியந்து போற்றக்குடிய சாதனை அவருடையது.

23-02-1967 இல் சண்டிகர் இந்தியாவில் பிறந்தவர் இவர்.

பிறந்த இடம் சண்டிகர் ஆனாலும் இவர் ஒரு தமிழர்.

இவரது தந்தையின் பூர்விகக் கிராமம்,திருநெல்வேலி அருகில் உள்ள  திரு வேங்கடநாதபுரம் என்பதாகும்.

1960 இலேயே இவரது குடும்பம் அமெரிக்காவின் கன்சாஸில் உள்ள லாரென்ஸ் என்ற இடத்துக்குக் குடியேறி விட்டது.

இவரது தந்தையார் கன்சாஸ் பலகலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும்,தாயார் கன்சாஸ் நகரக் கலை நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும்,பின் சட்டப்பள்ளியில் சட்டமும், வாணிபப் பள்ளியில்,மேலாண்மைப் பட்டமும் பெற்றர்

இவர் முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் ஆகும்.

இவரை எண்ணி ஏன் பெருமைப்பட வேண்டும்?

அமெரிக்க ஆட்சி மன்றம் இவரை ஏக மனதாக  தலைநகரில் உள்ள மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்திருக்கிறது.

”ஸ்ரீநி அமெரிக்காவின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் ஒளி விளக்கு”என வெள்ளை மாளிகை அறிக்கையில் ஒபாமா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்

இது முதல் படிதான்...

எதற்கு?

அவர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற  நீதிபதியாக நியமனம் பெறுவதற்கு!

இந்த சீனிவாசனைப் பாராட்டுவோம்!

பல புதிய உயரங்களைத் தொட  வாழ்த்துவோம்!

Friday, May 24, 2013

நாம் குழந்தையாகவே இருந்து விடக் கூடாதா?!விடுமுறைநாள்.

காலைநேரம்.

கடைக்குப்புறப்பட்டேன் ---கறியும் மளிகையும் வாங்க.

என் செல்ல மகளும் உடன் வர விரும்பினாள்

மனைவி அவளுக்கு ஆதரவு.

அழைத்துச் சென்றேன்.

செல்லும் வழியெல்லாம் கேள்விகள்.

கறிக்கடையில் கேட்டாள்”அப்பா! போன வாரம் என் விரலில் பிளேடு லேசாக அறுத்து ரத்தம் வந்தது;வலித்து அழுதேன்.ஆடுகளை வெட்டினால் அவற்றுக்கு வலிக்காதா?”

என்ன பதில் சொல்ல?

இந்த மாதிரி யோசித்தால் நான் மரக்கறி உண்பவனாக மாற வேண்டியதுதான்.

அங்கிருந்து சில சாமன்கள் வாங்க சூப்பர் மார்க்கெட்.

மசாலா சாமான்கள் வாங்கியாச்சு.

“அப்பா,ஓரியோ!”

ஒரு பாக்கட் எடுக்கிறேன்

“ரெண்டு பாக்கட்டுப்பா”

வாங்கிக் கொள்கிறேன்.வீடு திரும்பும் வழியில் சாலையோரத்தில் ஒரு பெண் நுங்கு விற்றுக் கொண்டிருக்கிறாள்.

அவளிடம் நுங்கு வாங்குகிறேன்.

அருகில் இருக்கும் அவள் குழந்தை அழுது கொண்டிருக்கிறது.

பசியோ?

என் மகள் கேட்கிறாள்”அப்பா,அவனுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் கொடுக்கலாமா?”

“என்னம்மா?உனக்கு வேணும்னு வாங்கினாயே?”கேட்கிறேன்

”அதான் ரெண்டு பாக்கெட் இருக்கேப்பா”

என் மண்டையில் அடித்தது போன்ற பதில்.

எனக்குத் தோன்றவில்லையே அது!

விரும்பி வாங்கிய ஒன்று கூட தேவைக்கு அதிகம் இருப்பதால் கொடுக்க எண்ணும் மனசு!

குழந்தைக்கு இருக்கிறது.

பெரியவனான எனக்கு இல்லை

பெரியவர்களாக ஆக ஆக,வயது முதிர்ச்சியோடு அறிவும் முதிர்கிறது—உண்மைதான்

ஆனால் பண்பு ,இரக்கம் எல்லாம் குறைந்து விடுகிறது.

நான் ,எனது,எனக்கு என்ற எண்ணம் வளர்ந்து விடுகிறது.

என்ன செய்ய?

நாம் குழந்தையாகவே இருந்து விடக் கூடாதா?

……………………………………………
சமீபத்தில் படித்த ஒரு கருத்தை என் எழுத்தில் தந்திருக்கிறேன்