Monday, February 17, 2014

தேவர் போன்றவர் யார்?!புராணங்களில் படித்திருக்கிறோம்,தேவர்கள் ,அசுரர்கள் என்பவர் பற்றியெல்லாம்.... இருவருக்கும் இடையே எப்போதும் போர் நடந்து கொண்டேதானிருக்கும்.தேவர்கள் தோற்றுக் கொண்டே தானிருப்பர்.அவர்களைக்காப்பாற்ற ஏதாவது ஒரு கடவுள் அவதாரம் எடுத்து வரவேண்டும்.

தேவர்கள் மேலுலக வாசிகள்.அமிர்தம் அருந்தியதால் சாகா வரம் பெற்றவர்கள்.ஆயினும் ஏன் தோற்கிறார்கள்?

அவர்கள் சுக வாசிகள்.மது,மாது என்று காலத்தைக் கழிப்பவர்கள்.தேவகுமாரர்கள் ஏதாவது தவறு செய்து ஏதாவது முனிவரிடம் சாபம் வாங்கியவாறு இருப்பர் .அவர்கள் தலைவனான தேவேந்திரனே அப்படித்தான்!கௌதமர் என்ற முனிவரின் மனைவியாகிய அகலிகை மீது காம வசப்பட்டு கௌதமர் உருவந்தாங்கிச் சென்று அகலிகையைக் கூடி அதன் பயனாய் முனிவரால் உடலெல்லாம்  கண்ணாகச் சபிக்கப்பட்டவன்!(இங்கு கண் என்பது இடக்கரடக்கல்!).

ஆகவே நாம்தெரிந்து கொள்வது அவர்கள் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்பதே.

வள்ளுவர் சொல்கிறார்,இந்தத்தேவர்களைப் போன்றவர் யார் என்று…….

 “தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
  மேவன செய்தொழுக லான்”…..( குறள்-1073)

அதாவது  தாம்  விரும்புகின்றவற்றைச் செய்து மனம்போன போக்கில் நடப்பதால்,கயவர் தேவர்களைப் போன்றவர்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் அய்யன் வள்ளுவர்!

எப்படி அங்கதம் ?!


Saturday, February 15, 2014

பண்ணையாரும் பத்மினியும்!+ஒரு கிசுகிசுஇந்தச் சினிமாவின் விளம்பரம் முதலில் வந்தவுடன் நான் இது ஏதோ விவகாரமான படம் போல என எண்ணினேன்!பின்னர்தான் தெரிந்தது,பத்மினி என்பது ஒரு பெண்ணை அல்ல, பத்மினி காரை குறிப்பது என்று.

பெண்களைச் சாமுத்திரிகா லக்ஷணப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்தார்கள்---பத்மினி, சித்தினி, சங்கினி,அத்தினி என்று,இதில் பத்மினி என்பது,உத்தமசாதிப் பெண்.இங்கு சாதி என்றால் வருணாச் சிரமம் அல்ல.பெண்மையின் இலக்கணங்கள் எல்லாம் ஒரு சேரப் பொருந்திய  மிகஅழகிய பெண்.

ஆனால் அப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்தால் சிரமம்தான்.வடமொழியில் சொல்வார்கள்  ”பார்யா ரூபவதி சத்ரு!”அதாவது அழகான மனைவி ஒரு விரோதி என்பதாகும்.

அழகு என்பது என்ன?அழகிய முகம் .உடல் அமைப்பு இவையெல்லாம் அழகாகி விடுமா? உள்ளத்தழுகும் வேண்டுமல்லவா?ஆனால் பார்க்க அழகில்லாத ஒரு பெண்ணை எந்த               இளைஞன் மந்து கொள்ளச் சம்மதிப்பான்?ஆகவே இரண்டும் சுமாராகவாவது இருக்க வேண்டும்.பத்மினியெல்லாம் வேண்டான்.சித்தினி,சங்கினி போதும்!

வாழ்க்கையில் நாம் போதும் என்று சொல்வது சாப்பிடும்போது மட்டும்தான்.ஏனென்றால் வயிறு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் உண்ண முடியாது.அவ்வையார் சொன்னார்”……….

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய்இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”

உண்மைதான் .வயிறு நிறைந்தவுடன் திருப்தி அடைந்து விடுகிறது.ஆனால் மனதுக்குத் திருப்தி என்பதே  ஏற்படுவதில்லை.வேண்டும் ,வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுதான் பிரச்சினையே!

இரு நாட்களாக என் வயிறு பசி இல்லாமல் போய் சாப்பாட்டை ஏற்க மறுக்கிறது.ஆனால் மருந்துகளைச் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.வயிறு சரியில்லை என்றால் உடல் வலி தலை வலி என்று எல்லாம் கூடவே வந்து விடுகின்றன!

முதலில் சொன்ன படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.

ஒரு கிசுகிசு---தலைநகரப் புகைப்பட நிபுணரும்,தமிழக மான்செஸ்டர் பேய்ப்பதிவரும்,ஓட்டல் பெயர் பதிவரும்,குடும்பப்பதிவரும்,இன்று  எழுதுவதை நிறுத்தி வனவாசம் இருக்கும் சென்னையைச் சேர்ந்த பைத்தியப்பதிவர் வீட்டில் சந்தித்தார்களாம்!