Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Friday, September 25, 2015

புண்ணாக்கு,புண்ணியகோடி,புதுக்கோட்டை!



வழக்கமாக அல்லது அநேகமாக அனைவரும் பதிவு எழுதிவிட்டு அதன் பின் பொருத்தமான தலைப்பு வைப்பார்கள்.

சில நேரங்களில் தலைப்பு வைத்துவிட்டு அதற்குத் தக பதிவு எழுதுவதும் உண்டு.

நேசித்து தலைப்பு வைத்தபின் எழுதுக
யோசித்து அதற்குத் தக!

அப்படி எழுதுகிறேன் இன்று!

இப்படி ஒரு தலைப்பு வைக்க ஒரு  உந்துதல் உண்டு!

புண்ணாக்கு 80 எள்,தேங்காய்,கடலை ஆகியவற்றை ஆட்டி எண்ணை டுத்தபின் மிஞ்சும் சக்கை.

பிண்ணாக்கு என்பது புண்ணாக்கு ஆகி விட்டது.

மாட்டுக்குத் தீவனமாகவும் வைக்கப்படுவது இது.

சில மனிதர்களைப் புண்ணாக்கு என்று வர்ணிப்பதுண்டு!

காளமேகப் புலவரின் பாடல் ஒன்றில் சிலேடையாக வருகிறது புண்ணாக்கு...

“ஆடிக்குடத்தடையும் ஆடும்போதே இரையும்
 மூடித் திறக்கின் முகங்காட்டும்-ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடு பாம்பெள்ளெனவே ஓது”

இது உங்கள் அனைவருக்கும் தெரிந்தபாடல்தான்.பொருளும் தெரிந்தவர்கள்தான் நீங்கள்.
எனவே இதைப்பற்றி வேறெதுவும் எழுதப்போவதில்லை!

புண்னியகோடி 80 யார்? அன்பேவா படத்தில் டி ஆர் ராமசந்திரன் புண்ணாக்கு வியாபாரி
யாக வருவார் .

அவர் பெயர் புண்ணாக்கு புண்ணியகோடி!


புதுக்கோட்டைதான் இன்றையா சூடான செய்தி!அங்கு நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பு பற்றி எழுதாதவர் பதிவரே அல்ல என்பது போல் அனைவரும்  வரிந்து கட்டிக் கொண்டுஅது பற்றி ஏதாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.நானும் என் பங்குக்கு ஏதோ எழுதி விட்டேன் முன்பே.இன்னும் 15 நாட்கள்தான்.சிறுவர்களாக இருந்தபோது தீபாவளியை எதிர்பார்த்து, நாட்களை எண்னியவாறே காத்திருப்போம்!அது போன்ற ஒரு மன நிலையில் இருக்கிறார்கள் பதிவர்கள்.

பாக்கியவான்கள் போய் வாண வேடிக்கையோடு கொண்டாடுங்கள்!


Monday, March 31, 2014

இனம்..




இனம் என்ற சொல்லுக்குத் தமிழ் ஆங்கில அகராதியிலே காணப்படும் இணையான ஆங்கிலச் சொல்….race,ethnicity,breed.
இங்கு பிறப்பின் அடிப்படையில் இனம் தீர்மானிக்கப்படுகிறது
ஆனால் திருவள்ளுவர் இந்த இனம் என்ற சொல்லை எப்பொருளில் பயன்படுத்துகிறார்?
சிற்றினஞ்சேராமை என்று ஓர் அதிகாரம்
அதில் முதல் குறள்….

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.” (451)

இதற்கான தெளிவுரைகள் கீழே…

தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்…..(சாலமன் பாப்பையா)
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்…..(கலைஞர்)
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.... (மு.வ.)

ஆக இங்கு இனம் என் று சொல்லப்படுவது பிறப்பின் அடிப்படையில் அல்ல. குணத்தின்,செயலின், அடிப்படையில் என்பது தெளிவாகிறது.

தீய குணம் உடையோர்,தீய செயல் புரிவோர், கீழ்மக்களாவர்.அதுவே சிற்றினம்

இதே அதிகாரத்தில் இன்னொரு குறள்...

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. (452)

இதற்கான பொருள்....
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.....(சாலமன் பாப்பையா)
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.....(கலைஞர்)
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.... (மு.வ.)

இந்த இனம் என்னும் சொல்லைக் கூடா நட்பு என்னும் அதிகாரத்திலும் காண்கிறோம்.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்...(822)

இதற்கான தெளிவுரை..

வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்....(சாலமன் பாப்பையா)

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.....(கலைஞர்)

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்...... (மு.வ.)

இங்கு இனம் என்பது அன்புள்ளவர்,உற்றவர்,வேண்டியவர் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவையே இனம் பற்றி வள்ளுவர் சொல்வது







Monday, February 17, 2014

தேவர் போன்றவர் யார்?!



புராணங்களில் படித்திருக்கிறோம்,தேவர்கள் ,அசுரர்கள் என்பவர் பற்றியெல்லாம்.... இருவருக்கும் இடையே எப்போதும் போர் நடந்து கொண்டேதானிருக்கும்.தேவர்கள் தோற்றுக் கொண்டே தானிருப்பர்.அவர்களைக்காப்பாற்ற ஏதாவது ஒரு கடவுள் அவதாரம் எடுத்து வரவேண்டும்.

தேவர்கள் மேலுலக வாசிகள்.அமிர்தம் அருந்தியதால் சாகா வரம் பெற்றவர்கள்.ஆயினும் ஏன் தோற்கிறார்கள்?

அவர்கள் சுக வாசிகள்.மது,மாது என்று காலத்தைக் கழிப்பவர்கள்.தேவகுமாரர்கள் ஏதாவது தவறு செய்து ஏதாவது முனிவரிடம் சாபம் வாங்கியவாறு இருப்பர் .அவர்கள் தலைவனான தேவேந்திரனே அப்படித்தான்!கௌதமர் என்ற முனிவரின் மனைவியாகிய அகலிகை மீது காம வசப்பட்டு கௌதமர் உருவந்தாங்கிச் சென்று அகலிகையைக் கூடி அதன் பயனாய் முனிவரால் உடலெல்லாம்  கண்ணாகச் சபிக்கப்பட்டவன்!(இங்கு கண் என்பது இடக்கரடக்கல்!).

ஆகவே நாம்தெரிந்து கொள்வது அவர்கள் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்பதே.

வள்ளுவர் சொல்கிறார்,இந்தத்தேவர்களைப் போன்றவர் யார் என்று…….

 “தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
  மேவன செய்தொழுக லான்”…..( குறள்-1073)

அதாவது  தாம்  விரும்புகின்றவற்றைச் செய்து மனம்போன போக்கில் நடப்பதால்,கயவர் தேவர்களைப் போன்றவர்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் அய்யன் வள்ளுவர்!

எப்படி அங்கதம் ?!


Monday, August 12, 2013

தமிழ்மணம்-நெடுநாள் வடை!

அவர் தமிழார்வம் உள்ள ஒரு அயல்நாட்டு நண்பர்.

ஒரு நாள் என்னைக்கேட்டார்”தமிழில் ’நெடுநாள் வடை’என்று ஒரு இலக்கியம் 
இருக்கிற தாமே!  வடையைப் பற்றி ஒரு இலக்கியமா!”.

”ஓ!அதைப்பற்றி ஆங்கிலத்தில் படித்தீர்களா?”

“ஆம்!”

நண்பரே!அது நெடுநாள் வடை அல்ல.’நெடுநல் வாடை”

“அப்படியென்றால் என்ன?”

”இது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழ்ந்து பாடப்பட்டது”

“அதற்கு ஏன் அந்தப்பெயர்?”

”நூலில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நடை பெறுகின்றன. தலைவனைப் பிரிந்து தவிக்கும் தலைவிக்கு அது மிக நீண்ட(நெடு) வாடைக் காலமாகப் படுகிறது.போரில் வெற்றி பெற்ற தலைவனுக்கொ வெற்றியின் காரணமாக ஒரு நல்ல வாடைக்காலமாகத் தோன்றுகிறது.  ஆகவே அது நீண்ட,நல்ல,வாடைக்காலம்!எனவே நூலின் பெயர் “நெடு  நல் வாடை’.இதுதான் புலவர் கவிதைகளின் சிறப்பு”

“அருமை”

“வடை ஒரு நாள் இருந்தாலே ஊசிப் போய்விடும்.நெடு நாள் இருந்தால் என்ன ஆகும்”

”எனக்கு இது தொடர்பான ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.இரு புலவர்கள் வடைபஜ்ஜி விற்கும் ஒரு டீக்கடைக்குப் போனார்கள்.வடை வாங்கினார்கள். வடையைப் பிய்த்துப் பார்த்தால் வடை ஊசிப்போய் நூல் வருகிறது.

ஒருவர் சொன்னார்” ஊசியிருக்கிறது”.இரண்டாமவர் சொன்னார் ”நூலுமிருக்கிறது”. வாசலில் ஒரு பெண் ஏதாவது கொடுப்பார்களா எனக் காத்திருப்பதைப் பார்த்தனர் ”தையலுக்காகும்” என அவளிடம் கொடுத்தனர்.என்ன தமிழ் விளையாட்டு பாருங்கள்”

“இப்போதெல்லாம் பெண்களுக்குத் தமிழ்க் கொடி ,தமிழ்ச்செல்வி என்றெல்லாம் அழகான பெயர்கள் வைக்கிறார்கள்;ஆனால் வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள்,அழகாகத் தமிழ் என அழைத்தால் என்ன”

”அழைக்கலாம்.ஆனால் பலருக்குத் தமிழின் சிறப்பான இந்தச் சிறப்பு ழகரம் உச்சரிக்க வருவதில்லையே.பழம் என்பதற்குப் பளம்,பயம்,பலம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.”

”ழகரம் என்றில்லை.லகர ளகர,னகர,ணகரமும் தகராறுதான்.சிறுவன் பல்லிக்குப்  போனான் என்கிறார்கள்.சுவரில் பள்ளி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.நெஞ்சத்துக்கு மணம் எனச் சொல்கிறர்கள்.பணம் என்பதைப் பனம்  என்கிறார்கள்.”

”ஆமாம்!குறிப்பாக இத்தகைய தமிழ்ப்பணியில் பெருந்தொண்டு ஆற்றுபவர்கள் தொ(ல்)லைக் காட்சியினர்தான்.

ஒரு நாள் ஓய்வில் வருகிறேன் ஐயா!தமிழ் பற்றி நிறையப் பேச வேண்டும்

வாருங்கள்.உங்களைப் போல் தமிழ் கற்ற  ஒருவர் திருக்குறளைத் திருத்த முனைந்த கதை ஒன்று சொல்கிறேன்!