சமீபத்தில் ஒரு திருமண
நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன்.
பெண்ணின் தந்தை என் நண்பர்;அசைவ முதலியார்.
பையன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்!
இன்னுமோர் நிச்சயதார்த்தம்.பெண் ஐயர்,பையன் நாயுடு.ஐந்து நட்சத்திர
ஓட்டலில் நடை பெற்றது!
சில நாட்களுக்கு முன்
எனக்குத் தெரிந்த ஒருவர்,அவரும் பிராமணர்தான்,என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்-அவரது
ஒரே பையன் ஒரு சீனப்பெண்ணைக் காதலிப்பதாகவும் அவளையே திருமணம் செய்து கொள்ளப் போகிறான்
என்றும்.நேற்று எனக்குத் தெரிய வந்தது,அவரே சென்னையில் மண்டபம் பார்த்து விட்டதாகவும்,திருமணத்தை
நடத்தி வைக்கப் போவதாகவும்.
ஒரு மணமகன் தேவை விளம்பரம் பார்த்தேன்(தங்கமணி சண்டைக்கு வருகிறாள்
நீங்கள் ஏன் அந்த விளம்பரம் எல்லாம் பார்க்கிறீர்கள்,இன்னொரு கல்யாண ஆசையா என்று!)
பிராமண வகுப்பைச் சேர்ந்த பையன் தேவையாம்.பெண்ணின் பெற்றோர் காதலித்து
மணம் புரிந்தவர்கள்.அம்மா,பிராமணர்;அப்பா பிள்ளை வகுப்பு என நினைவு.ஆனால் அவர்கள் பெண்ணுக்கு
பிராமணப் பையன்தான் வேண்டுமாம்!
தற்போது நடந்து வரும் பல கலப்புத் திருமணங்களைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது—மற்ற
சமூகத்தவரை விடப் பிராமணர்கள் இதில் அதிகம் வளைந்து கொடுக்கிறார்கள் என்று!
காதல் வயப்பட்ட இருவரும் அது வெறும் இனக்கவர்ச்சியாக இல்லாமல்,ஒருவரையொருவர்
புரிந்து கொண்டு,,அவர்கள் திருமணத்தின் முக்கியமாகக் கலப்புத்துமணத்தின், சாதக பாதகங்களை
அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது மிக அவசியம்.
என் நண்பர் ஒருவர் சொன்னார் ,அதர்மம் மிகும்போது வர்ணக்கலப்பு
நடைபெறும் என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லி
விட்டார் என்று. உண்மையா பொய்யா எனக்குத் தெரியாது.
ஆனால் கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பது
கண்கூடு.
ஆனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்களே தங்கள் பெண்/பையனுக்குக்
குறிப்பிட்ட சாதியில் துணை தேடினால் சாதி எப்படி ஒழியும்?!