என்ன துணிச்சல்
உங்களுக்கு கமல் சார்?......தொழில் நுட்பத்தில் சிறந்த ,அழுத்தமான கதைக்கருவைக் கொண்ட தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு
எடுத்துச் செல்லும் ஒரு படத்தை,யார் உணர்வும் உண்மையாகப் புண்படா வண்ணம் எடுப்பதற்கு!
நடந்து தேய்ந்த பழைய பாதையில் சென்று மசாலா
படங்களை எடுக்காமல் ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களை எடுத்தமைக்காக நீங்கள் குற்றம்
சாட்டப்பட வேண்டியவர்தான்!
அதுவும் உங்கள் பணத்தை முதலீடு செய்து? நம்பமுடியாத
செயல். வருந்தி உழைத்துத் தேடிய இந்தப் பணத்தை நிலத்திலோ,தங்கப் பத்திரங்களிலோ அல்லது
அதனினும் மேலாக ஒரு அரசியல் கட்சி துவங்குவதிலோ செலவு செய்திருக்கலாம் எனத் தெரியாதா? எங்கு சம்பாதித்தேனோ அங்குதான் செலவு செய்வேன்
என்று இருப்பது முட்டாள்தனம் இல்லையா?!
ஆக்க பூர்வமாக,தனிச்
சிறப்பாகச் சிந்திக்க என்ன துணிச்சல்!கடந்த 51 ஆண்டுகளாக எங்களையெல்லாம்
மகிழ்வித்து,அழ,சிரிக்க வைத்து எங்கள் வாழ்க்கையின் அங்கமாகப்
போயிருக்கிறீர்கள்;இதற்காகவே நீங்கள் தண்டிக்கப் பட வேண்டும்!
கொஞ்சம் திரும்பிப்
பார்ப்போமா?
‘ஹே ராம்’ என்றொரு
படம்! மஹாத்மாவுக்கு தமிழ் சினிமாவின் யாவுங்கடந்த பாராட்டாக அமைந்தது.ஆனால் படம்
வெளியாகும் முன்பே ஒரு காந்தி வெறுப்பாளர் என முத்திரை குத்தப் பட்டீர்கள்!
மரணதண்டனையைக்
குறித்து விருமாண்டி என ஒரு இணையற்ற படம் எடுத்தீர்கள் ஆனால் படத்தின் பெயர்ச்
சிக்கலில் நீதிமன்றத்துக்கு அலைந்தீர்கள்!
தசாவதாரம் என்றொரு
படம்.விளம்பரங்களைப் பார்த்தே படத்தைப்பற்றித் தவறாகப் புரிந்து கொண்டவர்களால்,இந்துமத
விரோதி என அழைக்கப்பட்டீர்கள்!
இனியாவது இப்படிப்
படம் எடுப்பதை நிறுத்தக்கூடாதா?!
உங்களுக்கும்
உங்களைப்போன்ற பட உலகில் உள்ள சிறந்த படைப்பாளிகளுக்கும் ”உங்கள் உடல்
நலம்,மனநலம்,வாழ்வு இவற்றில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் சிறந்த படைப்புகள்
தருவதை நிறுத்துங்கள்” என்று ஒரு பாடம் புகட்டுவதற்காகவாவது ..........
விஸ்வரூபம் தடை
செய்யப்படத்தான் வேண்டும்!
(behind woods.com என்ற தளத்தில் இந்திராணி நாராயண் என்பவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்)