Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Wednesday, April 3, 2013

நான் போன உல்லாசப் பயணம்!(தொடர்ச்சி)

மைல்சாமியைக் கும்பிட்ட பின்,அருகில் இருந்த மண்டபத்தில் அமர்ந்து சீட்டு விளையாட ஆரம்பித்தோம்.

கொரிப்பதற்குப் பாட்டி தயார் செய்து கொண்டு வந்திருந்த சேவு வேறு.

சிறிது நேரம் போனதும் ,பாட்டி புறப்படலாம் என்று சொன்னதும் எல்லோரும் புறப்பட்டோம்.
கொஞ்சம்  தூரம் நடந்ததும்,வரும்போதே எங்களைக் கவர்ந்த ஒரு மாந்தோப்பு வந்தது.
                                                     இதுதான் அந்த மாந்தோப்பு

பாட்டியிடம்  உள்ளே சென்று பார்க்கலாமா எனக் கேட்டோம்.

பாட்டியும் நம்ம பெரியசாமி தோப்புதான் ,வாங்க போகலாம் என்று சொல்ல,அனைவரும் தோப்புக்குள் நுழைந்தோம்.

அங்கு ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த தோப்புக்காரர்”வாங்க பெரியம்மா, நல்லாருக் கீங்களா”என்று கேட்டு விட்டு,எங்களைப் பார்த்து ”பேரப்பிள்ளைகளா?’ எனக் கேட்டார்.

பாட்டியும்”ஆமாம்;லீவுக்கு வந்திருக்காங்க.பொழுது போகலைன்னாங்க.அதான்,கொ.பட்டி போயிட்டு வரோம்.தோப்பைச் சுத்திப் பார்க்கணும்னாங்க;அதான்” என்றார்.

பாக்கட்டும் என்று அவர் சொல்லி விட்டு ஒரு வேலையாளிடம் ”பழனி!அஞ்சாறு அணிக்கீறிப் பழமாப் பறிச்சுப் பிள்ளைகளுக்குக் கொடு” என்றார்

நாங்கள் தோப்பைச் சுற்றிவந்தோம்.அருகில் தொங்கிய சில மாம்பழங்களைத் திருட்டுத் தனமாகப் பறித்து இட்லி இருந்த பாத்திரத்தில் போட்டுக் கொண்டோம்.
                                    இதுதான் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாம்பழம்

ஒரு சுற்று சுற்றி வந்த பின் அவரைக் கேட்டேன்”இது என்ன மாம்பழம்?ருமானியா?” என்று

அவர் சொன்னார்”இல்லை தம்பி.இது பாலாமணி” .

எங்களுக்குச் சிரிப்பு வந்தது.ஏனெனில் என் அக்காவின் வகுப்பாசிரியை பெயர் அதுதான்!

(பின்னாளில் அவரை மாம்பழம் என்றே குறிப்பிட ஆரம்பித்தோம்!)

பாட்டி அவரிடம் இங்கேயே உக்காந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறோம் என்று சொல்லி விட்டு அவரையும் சாப்பிடக் கூப்பிட்டார்.

அவர் மறுக்கவே நாங்கள்,புளி,தயிர் சாதங்களைச் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டோம்.

சாப்பிட்ட பின் நடப்பது சிரமமாக இருந்தது.

அந்தப்பக்கமாக வந்த ஒரு மாட்டு வண்டியில் ஏறிப் போகலாம் என்று நாங்கள் சொல்ல பாட்டியும் வண்டிக்காரனிடம் பேசினார்.
                                         இதுதான் நாங்கள் ஏறிப்போன மாட்டுவண்டி

நாங்கள் வண்டியில் ஏறி சௌக்கியமாக ஊர் வந்து சேர்ந்தோம்!

டிஸ்கி:இந்தப் பயணம் பற்றிய மறைக்கப்பட்ட சில திடுக்கிடும் உண்மைகள் கீழே!

சில நாட்களாகவே மனத்தில் ஒரு எண்ணம்;ஆசை.
பல பிரபல பதிவர்கள் பயணக்கட்டுரை எழுதுவதைப் பார்த்து எழுந்த ஆசை.

ஆசை இருக்குத் தாசில் பண்ண,அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
அவர்களெல்லாம் பயணம் போகிறார்கள்,கையில் கேமிராவை வைத்துக் கொண்டு சுட்டுத் தள்ளுகிறார்கள்;பதிவு போடுகிறார்கள்.
நானோ பயணம் ஏதும் போவதில்லை;போனாலும் ஒரு அரைநாள்,ஒரு நாள் பயணம்தான்.
அதிலும் படம் எடுக்க என்னிடம் கேமிரா கிடையாது.
என் கைபேசியிலும் கேமிரா,நீலப்பல்,பச்சைப்பல் இந்த மாதிரி விசேடங்கள் எதுவும் கிடையாது.
சாதாரண அடிப்படைக் கை பேசி!
என்ன செய்வது?
யோசித்தேன்.
சிறு வயதில் கிராமத்தில் பாட்டியுடன் சென்ற ஒரு பயணம் நினைவுக்கு வந்தது.
எங்கோ ஒரு பட்டிக்குப் போனோம்,வழியில் ஒரு மாந்தோப்பில் நுழைந்தோம் என்பதைத் தவிர வேறெதுவும் நினைவில்லை.
எனவே அந்தக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு,கற்பனைச் சரக்கைச் சேர்த்தேன்.
கட்டுரை பிறந்தது.
ஆனால் படங்கள் இன்றி பதிவு சுவாரஸ்யமாக இருக்காதே?!
பதிவில் படம் சேர்க்க வேண்டிய இடங்களை முதலில் தீர்மானித்தேன்.—கிராமத்துச் சாலை, இட்லி ,ஆறு,மாந்தோப்பு,மாம்பழம்,கட்டைவண்டி ஆகியவை சேர்க்கலாம் என முடிவு செய்தேன்.
இணையத்தில் படங்களைத் தேடிப் பிடித்தேன்.
பதிவு தயார்!
இதுதான் பதிவு பிறந்த கதை!

இப்படிக் கற்பனையான ஒரு பயணத்தைப் பற்றி எழுதி ஏமாற்றியதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்!
நீங்கள் தரும் தண்டனையை ஏற்கத் தயாராக உள்ளேன்!
மைல்சாமியே போற்றி!
(மீள் பதிவு முடிந்தது)
 

Tuesday, April 2, 2013

நாங்களும் போவோமில்லே பயணம்?!-பயணக்கட்டுரை



இப்போதெல்லாம் பயணம் பற்றிய பதிவுகள் அதிகமாகி விட்டன.

பல பதிவர்கள்,தாங்கள் சென்ற பயணங்கள் பற்றி அழகிய படங்களுடன் எழுதி என்னைப் போல் எங்கும் போக முடியாத  அபாக்கியவான்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.

அந்தக் கட்டுரைகளைப் படித்தபின் கட்டாயம்  இரண்டு ஜெலுசில் மாத்திரைகள் சாப்பிட வேண்டியிருக்கிறது (வயிற்றெரிச்சல் குணமாக!)

வெங்கட் நாகராஜ்,மோகன் குமார்,பிலாசபி பிரபாகரன் என்று பலர்.

இந்த லிஸ்ட்டில் இப்போது புதிதாக அண்ணன்"மின்னல் வரிகள்” பாலகணேஷ் வேறு சேர்ந்து விட்டார்-குளு குளு கொடைக்கானல் போய் வந்த அனுபவத்துடன்!

அவருக்குக் குளு குளு!  ஹூம்!

எனவே இன்று என் பழைய பயண அனுபவம் ஒன்றை மீள் பதிவாகத் தந்து என்னை சமாதானப் படுத்திக் கொள்கிறேன்!

இதோ……………………….


இது ஒரு மறக்க முடியாத பயண அனுபவம்.

நான் சிறுவனாக இருந்த போது சென்ற ஒரு பயணம்.

எங்கள் பாட்டி ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

ஒரு முறை விடுமுறைக்கு நாங்கள்-நானும் என் சகோதரிகளும்-அம்மாவுடன் கிராமத்துக்குப் போனோம்.

முதன் முறை கிராமத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே இருந்தது.

வைக்கோல் போரில் குதிப்பது,குளத்தில் குளிப்பது என்று புதிய பல செயல்கள் மகிழ்ச்சி யளித்தன.


                                                  நாங்கள் குளித்த  கிராமத்துக் குளம்

ஆனால் நான்கு நாட்களில் எல்லாம் போரடித்து விட்டது.

எங்கள் பாட்டியை எங்காவது அழைத்துச் செல்லச் சொல்லித் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டோம்.

எனவே ஒரு நாள் கிராமத்துக்கு அருகில் இருந்த கொக்கரக்கோபட்டிக்குப் போகலாம் என முடிவு செய்யப்பட்டது.

அங்கு போய் ஆற்றில் குளித்து விட்டுக் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பி வரலாம் எனத் திட்டம்.

அந்த நாளும் வந்தது.

காலை எழுந்து பாட்டி புளிசாதம்,தயிர்சாதம்,இட்லி,சட்னி எல்லாம் தயார் செய்தார்கள்.

எல்லோரும் 7 மணி அளவில் புறப்பட்டோம்.

கொ.பட்டிக்கு நடந்தே சென்று திரும்புவதாகத்தான் முடிவு.

நடந்தால் ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் என்று பாட்டி சொன்னார்கள்.

உற்சாகமாகப் புறப்பட்டோம்;பாடியபடியே சாலையில் நடந்தோம்
                                                    நாங்கள் நடந்து சென்ற சாலை
                                        

ஒரு மணி நேரத்தில் கொ.பட்டி ஆற்றை அடைந்தோம்.

அதற்குள் பசி வந்து விட கொண்டு போன இட்லிகளைக் காலி செய்தோம்.


                                         இதுதான் இட்லி-நாங்கள் சாப்பிடுவதற்கு முன்!

பின் ஆற்றில் நீண்ட  நேரம் அட்டகாசம் செய்தோம்.


                                                   இதுதான் நாங்கள் குளித்த ஆறு

பின் கரை ஏறி,உடை அணிந்து கோவிலுக்குப் போனோம் ;

கோவில் என்று எதுவும் இல்லை.

சாலை ஓரத்தில் ஒரு கல்லுக்கு துணி சுற்றிப் பொட்டிட்டு  மாலைகள் போட்டிருந்தார்கள்.
பெயர் மைல்சாமியாம்.

                                                      படம் எடுக்க அனுமதிக்கவில்லை!


என் அக்காதான் கண்டுபிடித்துச் சொன்னாள்.அது ஒரு மைல் கல்;அதை சாமியாக்கி விட்டார்கள்;அதனால்தான் பெயர் மைல்சாமியாக இருக்கும் என்று.

சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டோம்.

இனி ஊர் திரும்ப வேண்டியதுதான்.

நாளை 2 ஆம் பாகம்.

ஊர் திரும்பும்போது நடந்த  எதிர்பாராத சம்பவங்கள்-படங்களுடன்!


(தொடரும்)