Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, April 19, 2013

உலகிலேயே அழகான பெண்!



ஓர் அழகான கிராமம்;பச்சைக்கம்பளம் போர்த்தியது போல் வயல்கள்;பழங்கள் கனிந்து குலுங்கும் சோலைகள்.சல சல என ஓடும் தெளிவான நீர் நிரம்பிய ஆறு;ஒரு பூலோக சொர்க்கம்தான்.

அவ்வூரில் ஒரு திருவிழா .ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் விழா.கடைகள், விளையாட்டுகள்,பாட்டு,நடனம் என  ஊர் கோலாகலமாக இருக்கும்.பக்கத்து ஊர்களிலிருந் தெல்லாம் மக்கள் வந்து சேர,கூட்டம் ஜே ஜே என்று இருக்கும்.

ஒரு முறை விழாக் காண அண்டை ஊரிலிருந்து ஒரு சிறுவனும் அவன் தாயும் வந்தனர்.
அச்சிறுவனுக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.அவன் தாய் அவனுக்கு நிறையத் தின் பண்டங்கள்  வாங்கித் தந்தாள்.தன் தாயின் கையைப் பிடித்துக்கொண்டே அக்கூட்டத்தில் அவன் சுற்றி வந்தான்.களைப்படந்த தாய் ஓரிடத்தில் சாய்ந்து அமர்ந்து கண்மூடச் சிறுவனும் அவளுடன் அமர்ந்தான்.

அப்போது ஒரு வண்ணமயமான பட்டாம்பூச்சி அங்கு பறந்து வரவே அதைப்பிடிக்கும் ஆவலில் அச்சிறுவன் அதைத்துரத்த ஆரம்பித்தான்.துரத்திக் கொண்டே வெகு தூரம் சென்ற பின் தாயைப் பிரிந்து வந்து விட்டதை உணர்ந்தான்.திரும்பிச் செல்லும் வழி அவனுக்குத் தெரியவில்லை.அழ ஆரம்பித்தான்.

அவ்வழியே வந்த ஒருவன் அவனை ஏன் அழுகிறாய் எனக்கேட்க சிறுவன் தாயைப் பிரிந்த வந்து விட்டதைச் சொன்னான்,அந்த மனிதன் கேட்டான்”உன் தாயிடம் நான் சேர்ப்பிக் கிறேன்.  உன் தாய் எப்படி இருப்பார்கள்?”

சிறுவன் சொன்னான்”மிக அழகாக இருப்பார்கள்”

மனிதன் சிறுவனை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

எதிரில் ஓர் அழகான பெண் வருவதைப் பார்த்து அம்மனிதன் கேட்டான்”இவள்தான் உன் தாயா?”

சிறுவன் சொன்னான்”இல்லை .என் தாய் அழகாக இருப்பார்கள்”

அம்மனிதன் வியப்படைந்தான் ,அவ்வளவு அழகான பெண்ணா என்று.

சிறிது நேரம் தேடி அலைந்த பின் எதிரில் கவலை தோய்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டதும் சிறுவன் ஓடிச் சென்று அம்மா என்று கட்டிக்கொண்டான்.

அம்மனிதன் பார்த்தான்.

அந்தப் பெண் அழகாயில்லை.மாறுகண்.தூக்கிய பல் வரிசை என்று அழகற்றவளாயிருந்தாள்.

அம்மனிதன் கேட்டான்”இவளையா அழகானவள் என்று சொன்னாய்?”

சிறுவன் அழுத்தமாகச் சொன்னான்”ஆமாம்.என் அம்மாதான் எனக்கு உலகிலேயே அழகானவள்”


(டாக்டர்.ஹிதேந்திரநாத் சட்டோபாத்தியாயா அவர்களின் சிறுகதையின் அடிப்படையில் எழுந்தது)

Tuesday, December 11, 2012

தர்ம சங்கடம்!



ஏ.சி.பி. குட்டன் மனைவியுடன் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அவர் கடமையில் மிகக் கண்டிப்பானவர்.நேர்மை தவறாதவர்.

அந்த ஊர் ரவுடிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

மக்களின் ஒழுங்கு பற்றி மிகக் கண்டிப்பாக இருப்பவர்.

தான் போகும் வழியில் யாராவது ஒழுங்கீனமாக நடப்பதைக் கண்டால்,அதற்கான தண்டனை தராமல் விட மாட்டார்.

பொது இடங்களில் காதல் என்ற பெயரில் நடக்கும் சல்லாபங்களை அறவே வெறுத்தவர்.

அப்படி யாரையாவது பார்த்தால் அவர்களை விசாரித்து ,அவர்களைப் பற்றிய ஆதரங்களைச் சரி பார்த்துக் கண்டித்து அனுப்புவார்.

தன் கீழ் பணி புரிபவர்க்கும் இது விஷயத்தில் கடும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இருவரும் வெளியே செல்லத் தயாராயினர்.

காரில் ஏறிப் புறப்பட்டனர்.

மாலை முடிந்து இருள் பரவிக் கொண்டிருந்தது.

செல்லும் வழியில் முக்கியமான எதையோ மறந்து விட்டதாக மனைவிக்குச் சந்தேகம் வரக், கைப்பையத் திறந்து பார்த்தார்.

வண்டி செல்லும்போது சரியாகப் பார்க்க முடியவில்லை.

கணவரை வண்டியை நிறுத்தச் சொல்லி விட்டுக் கைப்பையைக் கவிழ்த்துத் தேட ஆரம்பித்தார்.

அந்தநேரத்தில்—

மூடப்படிருந்த காரின் கண்ணாடி தட்டப்பட்டது.

கண்ணாடியை கீழே இறக்கினார் குட்டன்.

வெளியே ஒரு காவலர்.

உள்ளே யார் இருக்கிறார்கள் எனப் பார்த்தார்.

அவருக்குக் குட்டனைத் தெரியவில்லை.

“இந்த நேரத்தில் இங்கு காரை நிறுத்தி விட்டு என்ன செய்கிறீர்கள்?”எனக் கடுமையாகக் கேட்டார்.

குட்டன் திகைத்தார்.

தான் யார் என்று சொல்ல மனமில்லை,சங்கடமாக இருந்தது

“நாங்கள் ஒரு கல்யாண வரவேற்புக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.இது என் மனைவி. கைப்பயில்  தேடுவதற்காக வண்டியை நிறுத்தினோம்.”

”ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?”

நல்ல வேளையாக அவரும் மனைவியும் குழந்தையும் சேர்ந்து எடுத்த ஃபோட்டோ டேஷ்போர்டில் இருந்தது.

அதைக்காட்டினார்.

“சரி போங்க” காவலர் நகர்ந்தார்

ஏசியிலும் ,ஏசிக்கு வியர்வை வந்தது!