Friday, September 25, 2015

புண்ணாக்கு,புண்ணியகோடி,புதுக்கோட்டை!



வழக்கமாக அல்லது அநேகமாக அனைவரும் பதிவு எழுதிவிட்டு அதன் பின் பொருத்தமான தலைப்பு வைப்பார்கள்.

சில நேரங்களில் தலைப்பு வைத்துவிட்டு அதற்குத் தக பதிவு எழுதுவதும் உண்டு.

நேசித்து தலைப்பு வைத்தபின் எழுதுக
யோசித்து அதற்குத் தக!

அப்படி எழுதுகிறேன் இன்று!

இப்படி ஒரு தலைப்பு வைக்க ஒரு  உந்துதல் உண்டு!

புண்ணாக்கு 80 எள்,தேங்காய்,கடலை ஆகியவற்றை ஆட்டி எண்ணை டுத்தபின் மிஞ்சும் சக்கை.

பிண்ணாக்கு என்பது புண்ணாக்கு ஆகி விட்டது.

மாட்டுக்குத் தீவனமாகவும் வைக்கப்படுவது இது.

சில மனிதர்களைப் புண்ணாக்கு என்று வர்ணிப்பதுண்டு!

காளமேகப் புலவரின் பாடல் ஒன்றில் சிலேடையாக வருகிறது புண்ணாக்கு...

“ஆடிக்குடத்தடையும் ஆடும்போதே இரையும்
 மூடித் திறக்கின் முகங்காட்டும்-ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடு பாம்பெள்ளெனவே ஓது”

இது உங்கள் அனைவருக்கும் தெரிந்தபாடல்தான்.பொருளும் தெரிந்தவர்கள்தான் நீங்கள்.
எனவே இதைப்பற்றி வேறெதுவும் எழுதப்போவதில்லை!

புண்னியகோடி 80 யார்? அன்பேவா படத்தில் டி ஆர் ராமசந்திரன் புண்ணாக்கு வியாபாரி
யாக வருவார் .

அவர் பெயர் புண்ணாக்கு புண்ணியகோடி!


புதுக்கோட்டைதான் இன்றையா சூடான செய்தி!அங்கு நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பு பற்றி எழுதாதவர் பதிவரே அல்ல என்பது போல் அனைவரும்  வரிந்து கட்டிக் கொண்டுஅது பற்றி ஏதாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.நானும் என் பங்குக்கு ஏதோ எழுதி விட்டேன் முன்பே.இன்னும் 15 நாட்கள்தான்.சிறுவர்களாக இருந்தபோது தீபாவளியை எதிர்பார்த்து, நாட்களை எண்னியவாறே காத்திருப்போம்!அது போன்ற ஒரு மன நிலையில் இருக்கிறார்கள் பதிவர்கள்.

பாக்கியவான்கள் போய் வாண வேடிக்கையோடு கொண்டாடுங்கள்!


Tuesday, September 22, 2015

ஹர ஹர மகாதேவ்!



தொ’ல்’லைக் காட்சியில் இராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தேன்.


வானரப்படையினர் போருக்குச் செல்கையில் “ஹர ஹர மகாதேவ்” என்று சொல்லியவாறு செல்கின்றனர்.


அதைக்கேட்டவுடன் எதையோ நினைத்து எனக்குக் ”குபுக் ”என்று சிரிப்பு வந்து விட்டது. 
(குபுக் என்று எப்படிச் சிரிப்பு வரும்?)


நல்ல வேளை அருகில் யாரும் இல்லை.இருந்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வேன்?!


”ஹர ஹர மகாதேவ் கி”


சிரிப்பில்தான் எத்தனை வகை? இதைக் கலைவாணர் தனது ஒரு பாட்டில் அழகாகச் சொல்லி யிருப்பார்;சிரித்துக்காட்டியிருப்பார்.

நமது நகைச்சுவையை ரசித்துப் பிறர் சிரிக்கலாம்; ஆனால் நம்மைப் பார்த்து யாரும் சிரிக்கும் நிலை ஏற்படக்கூடாது! அதைதான் கவிஞர் புலமைப் பித்தன் சொன்னார்”சிரித்து வாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” என்று


நம்மோடு சேர்ந்து சிரிக்கப் பலர் இருப்பர்;ஆனால் நம்மோடு சேர்ந்து அழ எத்தனை பேர் இருப்பார்கள்?


இப்போது சிரிக்கப் போகிறீர்களா ?

அல்லது இதையெல்லாம் படிக்க நேர்ந்ததே என்று அழபோகிறீர்களா?

Saturday, September 19, 2015

நிலா நிலா ஓடி வா!

நிலா என்றவுடன்  கவிஞன் அதை ஒரு பெண்ணின் முகத்துக்கு ஒப்பிடுவான்

“கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்” 
“நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்”
என்றெல்லாம் பாடுவார்கள்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.

ஒரு முழு நிலா இரவு.
தொலைபேசி அழைத்தது.
எடுத்தேன்
நண்பர் ஒருவர் பேசினார்.குரலில் ஒரு  பர பரப்பு.”நிலாவைப் பாருங்கள்;சாய்பாபா தெரிகிறார்.”

வெளியே சென்றேன்.பார்த்தேன்.
ஆம் சத்திய சாய் பாபாவின் முகம் தெரிந்தது.

நிலவின் கருப்பான பகுதி அவர் முடி போலவும் மீதிப் பகுதி அவர் முகம் போலவும் தெரிந்தது.
என் பங்குக்கு நான் ஒரு நண்பருக்கு ஃபோன் செய்து சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து அவர் தொலைபேசினார்.
“ஆமாம்.பார்த்தேன்.கால் மேல் கால் போட்டு சாயி அமர்ந்திருக்கிறார்”

நான் வியந்தேன்.
நான் சொன்னது சத்திய சாயி.
அவர் பார்த்த்து ஷீர்டி சாயி.
புரிந்து கொண்டேன் 

எதை நினைத்துக் கொண்டு பார்க்கிறீர்கள்,அது அங்கே தெரிவதை.
இத்தனை நாட்கள் வடை சுடும் கிழவி கூடத் தெரிந்தாளல்லவா?!
எல்லாம் மனம் செய்யும் மாயம் அன்றி வேறில்லை!

காஜல் ரசிகருக்குக் காஜல் கூடத் தெரியலாம்! 

நீல நிலா தெரியுமா ?

ஆங்கிலத்தில் சொல்வார்கள்”once in a blue moon" என்று 


மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையே நிகழ்வது.
ஒரே மாதத்தில் இரு முழு நிலவுகள் வந்தால்,இரண்டாவது நீலநிலா எனப் படுகிறது.
19 ஆண்டுகளுக்கு ஒரு முறை,ஒரே ஆண்டில் இரண்டு மாதங்களில் இரு முழு நிலவுகள் வருமாம்!


இரு நீலநிலா!

இனி மனங்கவர்ந்தவரின் முகத்தை  முழு நிலவில் கண்டு களியுங்கள்!
.

Thursday, September 17, 2015

தமிழ்மணம் ரேங்கும்,பெயர் மாற்றமும்!



சில நாட்களாக ஒரே யோசனை.

உக்காந்து யோசிச்சாச்சு;நின்னு யோசிச்சாச்சு

ரூம் போட்டுக்கூட யோசிச்சாச்சு

உருப்படியா ஒரு ஐடியாவும் வரலை

நேத்து தூக்கத்தில ஒரு கனவு !

அதில ஒரு சாமியார் வந்து”மகனே!எளிய வழி இதுதான்”னு ஒரு வழியைச் சொன்னாரு

யோசிச்சாச் சரியாத்தான் இருக்குது!

விசயம் இதுதாங்க,

என்னோட பதிவுக்கு நிறைய பேர் வருகை தரணும்

கருத்துச் சொல்லணும்

ஓட்டுப்போடணும்

தமிழ் மணம் ரேங்கில மேல போகணும்

இதை எப்படிச் சாதிக்கலாம்னுதான் யோசனை.

தினம் ஒரு பதிவு எழுதலாம்!

நிறைய பதிவுல போய் பின்னூட்டம் இடலாம்!

நிறைய பேருக்கு ஓட்டுப் போட்டுட்டு,த.ம.+1 ன்னு சொல்லிட்டு வரலாம்

இதெல்லாம் போதாது

அதுக்குத்தான் சாமியார் வழி சொன்னார்!

ரொம்ப எளிசான வழி!

ஆமாங்க

என் பேரை மாத்திக்கப் போறேன்


பல பேர் சோசியங்க கிட்ட போய் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அதிர்ஷ்டப் பெயரா மாத்திக்கிறாங்க இல்ல?  

அது மாதிரி.......

இன்று முதல் என் பெயர் “குட்டன்ஜி

ஆனா இது சரியா இருக்கான்னு நீங்கல்லாம் சொன்னாத்தான் நான் மாத்திக்குவேன்!

வரலாறு காணாத அளவில் வந்து கருத்துச் சொல்வீங்களா?!

Wednesday, September 16, 2015

என்னங்க!புதுக்கோட்டை போறீங்களா?



என்னங்க!புதுக்கோட்டை போகப் போறீங்களா?

என்ன,திடீர்னு கேக்குறே?

ஏதோ பதிவர் சந்திப்பு திருவிழா அக்டோபர் 11 ஆம் தேதின்னு சொன்னீங்களே,அதுக்குப் போகப் போறீங்களான்னு கேட்டேன்.

எனக்கு யாரைத் தெரியும், அதை விட என்னை யாருக்குத் தெரியும்?நான் அங்க போய் என்ன செய்ய?

என்ன இப்படிச் சொல்றீங்க?போய் நாலு பேரைப் பார்த்துப் பேசிப் பழகினா தன்னால தெரிஞ்சுட்டுப்  போகுது;போயிட்டு வாங்க.

என்னம்மா இவ்வளவு அக்கறை,நான் போறதில?

இல்ல.நானும் உங்க கூட வரலாமேன்னுதான்!

ஹே!இது பதிவர் சந்திப்புதான்.பதிவர் குடும்ப சந்திப்பு இல்ல!எல்லாரும் இப்படிக் குடும்பத் தோட வந்தா அங்க சந்திப்பா நடக்கும்?அதுவும் எல்லருக்கும் சோறு போட்டுக் கட்டுப் படியாகுமா? இப்பவே பட்ஜட்டில கால் பாகம்தான் சேர்ந்திருக்காம்,பாவம்.சிலர் குடும்பமே பதிவர் குடும்பம்! அவங்க வேணா வரலாம்.அதைத்தவிர ஒரு பதிவர் பேரே குடும்ப் பதிவராம்! அது ஏனோ தெரியலை

நாம வெளில சாப்பிட்டுக்குவோம்! 

அதெல்லாம் சரியா வராது/அது சரி நீ ஏன் வரணுங்கிறே?

அங்க பாக்கறத்துக்கு நெறய இருக்காமில்ல!அருங்காட்சியகம்,ஞானலாயா நூலகம்,சித்தன்ன வாசல்,ஆவுடையார் கோவில்,குடுமியான் மலை,திருமயம் மலைக்கோட்டை அப்படின்னு!

அதஎல்லாம் பின்னால எப்பவாச்சும் பாத்துக்கலாம்.இப்ப சந்திப்பு முக்கியம்;ஆனா எங்க போனாலும் எனக்கு இன்னொண்ணு ரொம்ப முக்கியம்!

சாப்பாடுதானே?

ஆமாண்டி!சோறுதான் !நமக்கு சைவம்தான்! இந்த  சைவம்,அசைவம் ரெண்டும் கலக்கிறது எல்லாம் சரியா வராது. அதுவும் தட்டைக் கையில ஏந்திக்கிட்டு அம்மா தாயேன்னு வாங்கிச் சாப்பிடறதெல்லாம் நமக்குச் சரியா வராது.

இந்த வயசில இப்படி பஃப்ஃபே பிடிக்காதுன்னு சொல்றீங்களே,வயசானவர் மாதிரி!


 ஆமாம்!இலை போட்டு வித விதமா வடை பாயசத்தோட பரிமாறணும், சாப்பிடணும். அதுவும்  பாயச பக்கெட்டை என் முன்னால வச்சு குடிக்கக் குடிக்க ஊத்திக்கிட்டே இருக்கணும்!


சாப்பிடறதிலயே இருங்க!போட்டியெல்லாம் வச்சிருக்காங்களாம்.-மூணு கட்டுரைப்போட்டி, ரெண்டு கவிதைப் போட்டி. ஏதாவது எழுதிப் பரிசு வாங்கலாமில்ல!

ரொம்பச் சுளுவாச் சொல்லிட்ட?எம்பரம்பரையிலயே ஒரு பய எழுதினது கெடையாதே!நான் என்ன எழுத? ஆமக்கதைதான் எழுதணும்!

சரி விடுங்க! எழுத வேண்டாம்,போக முடியல அப்படின்னாலும் உங்க விவரங்களைக் கையேட்டுக்கு அனுப்பலாமில்ல?

அதுல ஒரு சிக்கல் இருக்கே?

அதுவா? சரி விடுங்க!

விழா நல்லா நடக்கணும்னு இங்கிருந்தே வாழ்த்துவோம்!

சந்திப்பு பற்றிய என் முந்தைய பதிவுகள்....

http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_20.html

http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_19.html

http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_18.html