Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Wednesday, March 26, 2014

குமட்டுகிறது!



அருவருக்கத்தக்க ஏதாவது ஒன்றைப் பார்த்தால்,என்ன நடக்கும்?

நாம் சொல்வோம்—குமட்டுகிறது(உமட்டுகிறது,ஒமட்டுகிறது இப்படியும்)

அந்தக் குமட்டலுக்குக் காரணம் அந்தப் பொருள்,அந்தச் செயல்,அந்த இடம் இருக்கும் நிலை.

அதன் அசிங்கம்

ஒரு முறை எங்கள் அலுவலக ஊழியர் ஒருவர் சொன்னார்”கழிப்பறை நாறுகிறது. குமட்டு கிறது”என்று.
 
நேற்று ஐ பி எல் சூதாட்ட  வழக்கில் தீர்ப்புச் சொன்ன உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்”திரு.சீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவராக நீடிக்கும் வரை அவரது மருமகன் மெய்யப்பன் மீதான சூதாட்டம் மற்றும்போட்டி நிர்ணயம் ஆகிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நியாயமாக வெளிப்படையாக இருக்காது என்பது நன்கு தெரிந்திருக்கும் நிலையில் அவர் பதவியில் நீடிப்பது ’குமட்டுகிறது(nauseating)’”

அவர் இரு நாட்களில் பதவி விலக வில்லையெனில் நீதிமன்றம் இது சம்பந்தமான உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

என்ன அழகான சொற் பயன்பாடு!இதை விடச் சிறப்பாக இடித்துரைக்க முடியுமா?

வாழ்க்கையில் இந்தக் குமட்டல் வேறு காரணங்களினாலும் வருவதுண்டு.

குறிப்பாகக் கருவுற்றிருக்கும் பெண்களுக்குக் காலை நோய் என்று சொல்லப்படும் இந்தக் குமட்டல் வருவதுண்டு.

சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்து விடுவார்கள்.

அது அவர்களுக்கு ஒரு இன்பமான அவஸ்தை.

உறவினர்களுக்கோ மகிழ்ச்சிதரும் ஒரு செய்தி!

அந்தக்குமட்டல் மற்றவர் ரசிக்கும்,மகிழும் குமட்டல்.

ஆனால் முதலில் சொன்ன குமட்டல் அருவருப்பால் விளைந்த குமட்டல்.

குமட்டலை ஏற்படுத்தியது எதுவோ அது சரி செய்யப்பட்டால்தான் குமட்டல் நிற்கும்.

ஒரே சொல்லில் ,சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டார்கள் நீதிபதிகள்!


 

Monday, June 3, 2013

விண்ணுலகில் கிரிக்கெட்!


ராமுவும் சோமுவும் நீண்ட கால நண்பர்கள்.

இருவருக்கும் வயது 90.

ராமுவுக்கு உடல் நலம் குன்றி படுக்கையில் இருந்தார்.

அவருக்குக் கெடு வைத்து விட்டார்கள் மருத்துவர்கள்.

அவரைப் பார்க்க வந்த  சோமு, ராமுவிடம் சொன்னார்”ராமு!நாம் இருவரும் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்தோம்!இளமையில் ஒவ்வொரு ஞாயிறன்றும் கிரிக்கெட் விளையாடினோம்,பின்னர் எந்த ஆட்டத்தையும் பார்க்காமல் தவற விட்டதில்லை.நீ விண்ணுலகம் சென்ற பின் அங்கு கிரிக்கெட் இருக்கிறதா என்று எனக்குச் சொல்”

ராமு சொன்னார்”எனது உயிர் நண்பனுக்கு இது கூடச் செய்ய மாட்டேனா?”

மறுநாள் ராமு இறந்து விட்டார்.

ஓரிரு நாட்களுக்குப் பின் சோமு உறங்கிக் கொண்டிருந்த போது யாரோ சோமு,சோமு என அழைக்கும் குரல் கேட்டு கண்விழித்தார்.

அறை ஒளி வெள்ளமாக இருந்தது..

மீண்டும் குரல் கேட்டது....சோமு

அது ராமுவின் குரல்!

சோமு கேட்டார்”யார்?”

"நான்தான் ராமு,விண்ணுலகிலிருந்து... சோமு உனக்கு மகிழ்ச்சியான செய்தி வருத்தமான செய்தி இரண்டும் சொல்லப்போகிறேன்”

”ராமுவா?சொல்லு சொல்லு”

”முதலில் மகிழ்ச்சியான செய்தி!நீ கேட்டபடி இங்கு கிரிக்கெட் இருக்கிறது.ஞாயிறன்று கட்டாயம் ஆட்டம் உண்டு.வயதானவர்களே இங்கு கிடையாது,எல்லோரும் இளமையாகி விட்டோம்.எவ்வளவு நேரம் ஆடினாலும் களைப்படைவதே இல்லை”

“அப்படியா?மிக மகிழ்ச்சி.கெட்ட செய்தி?”

”வரும் ஞாயிறன்று நடக்க இருக்கும் போட்டியில் ஒரு அணிக்கு நீதான் தலைவன்!”

....................................................................

சோமு கேட்காமல் விட்டு விட்டார்..அங்கும் கட்டுப்பாட்டு வாரியம் உண்டா..தலைவர் உண்டா...விண்ணுலக பிரீமியர் லீக் எல்லாம் உண்டா..சூதாட்டம் உண்டா..என்றெல்லாம்!

இருக்கும் ...இங்கிருந்துதானே அங்கு போகிறார்கள்!