Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Tuesday, October 30, 2012

தல ரசிகன்!



விஜய் தொலைக்காட்சியில் சனியன்று ஒரு புதிய யதார்த்தக் காட்சி ஒன்று பார்த்தேன். வெங்கட் பிரபு அவர்கள் நடத்தினார். நிகழ்ச்சியின் பெயர் ”கோலிவுட் கிங்’

அன்றுதான் நிகழ்ச்சி ஆரம்பம்.முதல் நிகழ்ச்சியாகத் தல  அஜீத் பற்றிய கேள்விகள் .பங்கு பெற்றவர்கள் அனைவரும் தல ரசிகர்கள்(நானும்தான்-ஹி,ஹி!).நிகழ்ச்சியின் வடிவம் புதுமையாக இருந்தது. 50 பேர் கலந்து கொண்டார்கள் என எண்னுகிறேன்.நான் பார்க்கும் போது 31 பேரே போட்டியில் இருந்தனர்,ஒரு கேள்விக்கு எத்தனை பேர் பதில் சொல்கிறார் களோ,அந்த எண்ணால் அந்தக்கேள்விக்கான தொகையைப்  (1000/2000/3000) பெருக்கி வரும் தொகை பாக்ஸ் ஆஃபிசில் சேர்க்கப்படும். இப்படி பாக்ஸ் ஆஃபிசில் பணம் சேர்ந்து கொண்டே வரும்.

கடைசியில் 4 பேர் போட்டியில் இருந்தனர்.பாக்ஸ் ஆஃபிசில் 4 லட்சத்துக்கு மேல். கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்பவருக்குப் பரிசு மற்றும் கோலிவுட் கிங் என்ற பட்டம்;அத்துடன்,ஒரு போனஸ் கேள்விக்கும் பதில் சரியாகச் சொன்னால்,பாக்ஸ் ஆஃபிஸ் பணமும்.!

தல ரசிகர்கள் அவர் பற்றிய விவரங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தனர்.ஆனால் கடைசிக் கேள்வியில் வெங்கட் பிரபு போட்டார் ஒரு குண்டு!கேள்வி -அஜீத் தன் பெற்றோர் பெயரில் தொடங்கிய மோகினி மணி பவுண்டேஷன்  எந்த வருடம் தொடங்கப்பட்டது? வழக்கம் போல் 4  தேர்வுகள்; சரியாகச் சொல்லி வெல்ல 25% நிகழ் தகவு! ஆனால் யாருக்கும் அதிர்ஷ்டம் இல்லை!நான்கு பேருமே தவறான விடை கூறினர்.

இதற்கான விடை சொல்லப்படவில்லை.நேயர்களுக்கு குறுஞ்செய்திக் கேள்வியாகக் கொடுக்கப் பட்டது.

இதைப் படிக்கும் தல ரசிகர்களே!உங்களுக்காவது தெரியுமா?

ஒரு திரை நாயகன் பற்றிப் பேசியதால், ஒரு செய்தி நினைவுக்கு வந்தது.திரைப்படங்களில் கதாநாயகன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும்,தன் பெற்றோரின் பணியில் உதவி புரிவான்.இதோ ஒரு நிஜ ஹீரோ!பெயர் மணிகண்டன்.படிப்பு சி.ஏ; வசிப்பது மைலாப்பூர் சென்னை.இப்போது சுந்தரம் பி.பி.ஓ வில் வேலை;இன்றும் காய்கறி கீரை வியாபாரம் செய்யும் தன் பெற்றோருக்கு உதவியாக  காய்கறிகளை வண்டியில் அடுக்கி உதவி புரிந்து விட்டுப் பின்னரே தன் பணிக்குச் செல்கிறார்!


Tuesday, October 9, 2012

நாசமாய்ப் போகட்டும் நேசமும் பாசமும்!



“என்ன அமுதா?புது கைபேசியா?”

”ஆமாம் அகிலா.என் வீட்டுக்காரர் வாங்கித் தந்தார்.5000 ருபாய்!நான் வேண்டாமின்னு சொன்னாக் கேக்கவே இல்லை.”

“நானும்தான் ஒரு கைபேசி வேணும்னு என் வீட்டுக்காரரைக் கேட்டுக்கிட்டே இருக்கேன். எங்க?அந்தத் துப்பில்லாத மனுஷன் எனக்குக் குடுத்ததெல்லாம் வருசத்துக்கு ஒரு குழந்தை தான்.   வேற எதுக்கும் பிரயோசனமில்லை.”

“இப்பல்லாம் 2000 ரூபாய்க்குக் கூட நல்ல கைபேசி கிடைக்கிறது அமுதா.எப்படியாவது வாங்கிடு.உன்னைப் பார்த்தா 4 பிள்ள பெத்தவ மாதிரியே இல்லை.நீ மட்டும் ஜீன்ஸ் போட்டுக் கையில கைபேசியோடு போனா உன்னை எல்லாரும் கல்லூரி மாணவின்னே நினைப்பாங்க”

ஆசைத்தீயை மூட்ட ஒரு பொறி விழுந்து விட்டது.

கற்பனை செய்து பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது.

எப்படியாவது வாங்கி விட வேண்டியதுதான்.

கைக்குழந்தை அழுதது.

எப்பப்பார்த்தாலும் நை நை என்று அழகை.குழந்தையை எடுத்துச் சமாதானப் படுத்தினாள்.

போன வாரம் சந்தித்த அந்த தம்பதி நினைவுக்கு வந்தனர்..

ஒரு முடிவுக்கு வந்தாள்.

குழந்தையுடன் புறப்பட்டுச் சென்றாள்.
 ..............
மதிய உணவுக்கு வீடு வந்த கணவன் மனைவியைப் பார்த்து வியந்தான்!”என் மனைவியா இது?!”

ஜீன்ஸும் டாப்ஸும் அணிந்து கல்லூரி மானவி ப்போல் இளமையாய்,ஸ்டைலாய்!
கையில் செல்போன் வேறு!

”என்ன அகிலா,ஏது இதெல்லாம்?”

“போன வாரம் சொன்னேன் இல்லீங்க,ஒரு குழந்தையில்லாத தம்பதி நம்ம குழந்தையை கேட்டாங்கன்னு.பாவமா இருந்திச்சு.குழந்தையை குடுத்திட்டேன்.5000ரூபாய் கொடுத்தாங்க. அதில்தான் இதெல்லாம் வாங்கினேன்,நல்லாருக்கா”
.......................................
......................................
இது கதையல்ல நிஜம்.

சில நாட்களுக்கு முன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியின் அடிப்படை யில் புனையப்பட்டது.(செய்தி-ரூபாய் 5000க்குத் தன் குழந்தையை விற்று செல்போனும் ஜீன்ஸும் வாங்கினாள் ஒரு பெண்)

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

உறவு ,பாசம் இவையெல்லாம் பொருளற்றன,தேவையற்றனவாகி விட்டனவா?

அவற்றை விட கைபேச்சியும் ஜீன்ஸும் மதிப்பு மிக்கவை ஆகி விட்டனவா?

இது கலாசார முன்னேற்றமா,கலாசாரச் சீரழிவா?

Quo vadis?

Monday, September 24, 2012

அணுசக்தி வேண்டாம்-சுஜாதா!

அணுசக்தி வேண்டாம்;  (1-10-1988 - தினமணியில் எழுத்தாளர் சுஜாதா எழுதியது.) 

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும்  சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோ
ம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.
 

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-

அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம். அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-

அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம். இவ்வளவு தகிடுதத்தம் பண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-

உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-

இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-

நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-

அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-

நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-

ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-

அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி


சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி. இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


( நன்றி:தமிழ் தாயகம்- stalinvp jeyachandr​an)

Thursday, September 13, 2012

திருக்குறள் விளக்கப்படம்!


          பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
          சால மிகுத்துப் பெயின்.                     குறள்-475-(வலியறிதல் )

       மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் அப்பண்டமும் அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால்        அச்சு முறியும்.
      (வேற்றுப்பொருள் வைப்பணி)

Tuesday, September 11, 2012

கிழிந்த டவுசரும் நனைந்த டயப்பரும்!



முதலில் டவுசர் பற்றிச் சில விசயங்கள்.

என் அப்பா சொல்வார்,அவர் பள்ளிப்படிப்பு முடியும் வரை அரை டிரௌசர்தான் அணிவாரம். கல்லூரியில் சேர்ந்த பின் ட்ரவுசர் அணிய முடியாது என்பதாலும்,பேண்ட் தைக்க வசதி இல்லாததாலும் வேட்டி அணிந்து தான் கல்லூரி செல்வாராம்;அதுவும் நாலு முழம் வேட்டி.மாலை வீடு திரும்பியதும்,வேட்டியை அவிழ்த்து மடித்து வைத்து விட்டுப் பழைய ட்ரவுசர்களை அணிந்து கொள்வாராம்.

ஒரு நாள் மாலை அவ்வாறு ட்ரவுசர் அணிந்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கல்லூரித்தோழன் ஒருவன் அவரைப் பார்த்து “என்னய்யா,ட்ரவுசர் போட்டிருக்கீரு/” என்று ஆச்சரியத்துடனும் ஏளனமாகவும் கேட்டானாம்.அக்காலத்தில் கல்லூரி  மாணவன் என்றால் அவன் அரை ட்ரவுசர் அணிவது கேவலாமாக,சிறு பிள்ளைத் தனமாகக் கருதப் பட்டது.

ஆனால் இப்போது வயதானவர்கள் கூட அரை ட்ரவுசர் அணிந்து ஊரெல்லாம் சுற்றுகிறார்கள்!

என் அப்பா கிழிந்த ட்ரவுசர் பற்றிக் கூட சொல்லுவார்.சிறுவர்கள் விளையாடும்போது அதிகம் கண்ட இடத்தில் உட்கார்ந்து,சறுக்கி எல்லாம் செய்வதால்,உட்காரும் இடத்தில் ட்ரவுசர் கிழிந்து போகுமாம்.அதற்காக அதைத் தூக்கி எறிந்து விட முடியுமா?பின் பக்கம் அந்தக் கிழிசலின் மேல் ஒரு சதுரத் துணித்துண்டை ஒட்டுப்போட்டுத் தைத்து விடுவார்களாம்.ஆனால் ட்ரவுசர் கலர் நீலம் என்றால் ஒட்டு சிவப்பாக இருக்குமாம்!

ஆகவே டவுசர் கிழிந்தால் கவலை வேண்டாம்.ஒட்டுப் போட்டு அணிந்து கொள்ளலாம்!!

”நீங்க இந்த மாதிரி செஞ்சதே இல்லையா?!”

அடுத்து டயப்பர்.

குழந்தைகளுக்காக உருவான சாதனம்.

இப்போது வயதானவர்களும் அணிந்து கொள்கிறார்கள்.1877 இல் மரியா ஆலன் என்பரால் 
முதலில் யு எஸ்ஸில் துணி டயப்பர்  பெரிய அளவில் தயாரிக்கப் பட்டது.

 ஈரமாகி விட்ட டயப்பரை நீண்ட நேரம் மாற்றாமலே இருந்தால் அப்பகுதி சிவந்து அரிப்பு எடுத்து விடும்.

அதிக விவரத்துக்கு விக்கிபீடியா பார்க்கவும்.



கொச்சைப் படுத்தப்பட்ட மண உறவு!



என்னங்க!
என்ன விசயம் சொல்லு.
நம்ம பக்கத்து வீட்டுல வேலை செய்யறாளே பாரு.
அதுக்கென்ன?
அவங்க வீட்டிலே பாத்திரம் கழுவறா;துணி துவைக்கிறா;கூட்டித் துடைக்கிறா.
சரி?
சம்பளம்1000 ருபாயாம்!
ஓஹோ!

அப்புறம் கனகா வீட்டுல சமையலுக்கு ஆள் வச்சிருக்காங்க.
ஆமாம்,ரெண்டு பெரும் வேலைக்குப் போறாங்க இல்ல?
சரிங்க ,சம்பளம் மாசத்துக்கு 3000 ருபாயாம்.
ஓஹோ!

சுசிலா குழந்தையைக் க்ரெச்சில  விடறா இல்ல?
ஆமாம்.
அதுக்கு 1500 ரூபாயாம்!

இதெல்லாம் எதுக்குச் சொல்றே?
இல்லீங்க இந்த மூணு வேலைக்கே 5500 ருபாய் ஆகுதில்ல?
ஆமாம்.

நம்ம வீட்டுல நாந்தான்  சமைக்கிறேன், பாத்திரம் கழுவறேன்,கூட்டறேன்,குழந்தையைப் பாத்துக்கறேன்.இன்னும் எவ்வளவோ செய்யறேன்.எனக்கு எவ்வளவு சம்பளம் தரப் போறீங்க?

என்ன திடீர்னு இப்படி கேக்குற?

பேப்பர்ல பாத்தீங்கல்ல?மகளிர்,குழந்தகள் மேம்பாட்டு அமைச்சகம்,மனைவிக்குக் கணவன் சம்பளம் தரணும்னு சட்டம் கொண்டு வரப் போகுதாம்.

ஊம்.சரிதான்.ஆனா இன்னும் முக்கியமான சேவை ஒண்ணு இருக்கே அதுக்குக் கூலி கொடுக்க ஆரம்பிச்சா,என் சமபளமே பத்தாதே?!அதுக்கு என்ன செய்யறதாம்?அதைப் பத்தி ஒண்ணும் சொல்லலியா?

 இதைச் சொன்னதுக்காக என்னை ஒரு “குறுமதி படைத்த  ஆண் பன்றி” என்று கூடச் சொல்வாங்க!(male chauvinist pig) 

ஆனா,கணவன் மனைவி உறவு என்பது கொச்சைப் படுத்தப்படுகிறதுங்கறதே உண்மை!