Wednesday, April 29, 2015

இளைஞர்களுக்காக,இளைஞரால்.... இத்யாதி இத்யாதி!



ஹலோ!யாரு குட்டனா? பழையபடியும் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல!”
ஏன்,எழுதக்கூடாதா?”
அப்படி இல்ல .நீங்க கட்டாயம் தொடர்ந்து எழுதணும்.எங்களை மாதிரி இளைஞர்களுக்காக வலைப்பூ  நடத்தும் இளைஞர் நீங்க தொடர்ந்து எழுதணும்.அதுதான் எங்க ஆசை
ரொம்ப நன்றிங்க
இது போல் நேற்று முதல் பத்துக் கால்கள்.
எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி?
ஹூம்!
இப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் .
ஆனால் நடக்கவில்லையே!
நானே ஏதாவது இப்படி நினைத்துப் பார்த்தால்தான் உண்டு!
ஒரு ஆறு பேரைத்தவிர யாரும் ஒண்ணும் சொல்லவில்லை.
எட்டிப்பாத்தவங்களே மொத்தம் 117 பேர்தான் இது வரை.
இதுக்காக எல்லாம் எழுதாம இருந்துவிடுவேனா என்ன?
எழுதத்தான் போகிறேன்.
இளைஞர்களுக்காக,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ!
இதை ஏன் சொல்ல வேண்டும்?
எல்லோருக்கும் தெரியும் இது ’இளைஞர்களுக்கான’ வலைப்பூ என்று
எனவே அதை நீக்கி விடலாம்.
நான் இளஞன் என்பதை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
எனவே இளைஞரால் என்பதை நீக்கி விடலாம்.
பதிவின் எழுத்தே சொல்லும் இது இளைஞர் வலைப்பூ என்று.
எனவே இளைஞர் என்பதை நீக்கி விடலாம்.
கடைசியில் வலைப்பூ!
இது வலைப்பூ இல்லாமல் வேறு என்ன?
எனவே அதையும் நீக்கி விடலாம்.
மிஞ்சியிருப்பது.....ஒன்றுமில்லை!
அதுதான் இந்த வலைப்பூ!!
டிஸ்கி:இப்போதுதான் கவனித்தேன்.சென்ற பதிவுடன் ட்ரிபிள் செஞ்சுரி அடிச்சுட்டேன்!
ஆதரவுக்கு(!) நன்றி!


Tuesday, April 28, 2015

ஹையோ ஹையோ!

தந்தை தன் ஐந்து வயதுப் பெண்ணுக்குக் கதை சொல்லி விட்டு,அவளைப் பிரார்த்தனை செய்தபின் தூங்கச் சொன்னார்.

அவள் பிரார்த்தனை முடிவில்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவைக் காப்பாற் றட்டும்; பாட்டியைக் காப்பாற்றட்டும்;தாத்தாவை வரவேற்கட்டும்”என்றாள் .

தந்தை ஏன் அவ்வாறு சொல்கிறாய் எனக்கேட்க,என்னவோ சொல்ல வேண்டும் எனத் தோன்றியது என்றாள்.

மறுநாள் தாத்தா இறந்து போனார்

சில மாதங்களுக்குப்பின் ஓர் இரவு பிரார்த்தனைக்குப் பின்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவைக் காப்பாற்றட்டும்;பாட்டியை வரவேற்கட்டும்”என்றாள்

மறுநள் பாட்டி இறந்துபோனாள்

அப்பா எண்ணினார் இவளிடம் அபூர்வ சக்தி இருக்கிறது

நாட்கள் நகர்ந்தன.

ஓர் இரவில் அவள் பிரார்த்தித்தாள்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவை வரவேற்கட்டும்”

தந்தைக்கு தூக்கி வாரிப் போட்டது.

அப்படியானால் மறுநாள் தான் சாகப்போகிறோமா?

காலை மிகச் சீக்கிரமே அலுவலகம் சென்று விட்டார்

அன்று அச்சத்துடனே செயல் பட்டார்.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை.


நெஞ்சை அடைப்பது போல் இருந்தது

தண்ணீர் குடித்தார்.

காய்ச்சல் வருவது போல் இருந்தது

மாத்திரை போட்டுக் கொண்டார்

எப்படியாவது நள்ளிரவு கடந்து விட்டால் போதும்

அதுவரை அலுவலகத்திலேயே இருந்து விட முடிவு செய்தார்.

அன்றைய பொழுது நரக வேதனைதான்.

நள்ளிரவு கடந்தது.

ஒரு நிம்மதி மூச்சு விட்டுப் பின் வீடு திரும்பினார்.

மனைவி கேட்டாள் ”வேலை மிக அதிகமா/”

அவர் சொன்னார்”என் வாழ்க்கையிலேயெ இது போன்ற மோசமான நாள் இருந்ததில்லை.”

மனைவி சொன்னாள்”எனக்கு மட்டும் என்ன?இங்கே ஒரே பிரச்சினை.தபால் கொடுக்க வந்த தபால்காரர் மாரடைப்பில் நம் வீட்டுப் படியிலேயே இறந்து விட்டார்!”

Wednesday, December 10, 2014

மருத்துவம் செய்யும் கணினி!



ராமுவுக்கு ஒருநாள் பயங்கரத் தலைவலி. நண்பன் சோமுவிடம் சொன்னான்எனக்குத் தலைவலி மண்டையைப் பிளக்கிறது.மருத்துவரைப் பார்க்கப்போகிறேன்.”

உடனே சோமு சொன்னான்அநாவசியமாக மருத்துவருக்குச் செலவழிக்காதே..மருந்துக் கடையில் ஒரு கணினி இருக்கிறது.அதனிடம் உன் சிறுநீரின் மாதிரி கொடுத்தால் அது கண்டுபிடித்துச் சொல்லி விடும் பிரச்சினை என்ன  என்றும் அதன்காரணத்தையும் என்ன செய்ய வேண்டும் என்பதையும்.20 ரூபாய்தான் செலவு.’

ராமு சிறுநீரை ஒரு குப்பியில் எடுத்துக் கொண்டு கனினியிடம் போய் சிறுநீரை ஊற்றிவிட்டுப் பணத்தையும் செலுத்தினான்.கணினி கடாமுடா எனச் சப்தங்கள் எழுப்பியது.சில பல விளக்குகள் ஒளிர்ந்தன.கடைசியில் ஒரு சீட்டு வெளியே வந்து விழுந்தது.அதில் எழுதியிருந்தது” உனக்கு ஒற்றைத் தலைவலி.அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.அதிக மன அழுத்தம்,சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெயிலில் போகக்கூடாது.ஒரு வாரம் கழித்து மீண்டும் வா”

அவன் ஆச்சரியப்பட்டான்.ஆனால் ஒரு வாரம் கழித்து வரும்போது அதைச் சோதித்துப் பார்த்த் விடுவது என முடிவு செய்தான்.

ஒரு வாரம் கழித்துக் கொஞ்சம் குழாய்த்தண்ணீர்,தன் நாயின் மலம்,தன் மனைவி மகள் இவர்களின் சிறுநீர் எல்லாம் கலந்து கொண்டுபோய் கணினியில் கொட்டி பணத்தை கட்டினான்.முன்பு போலவே,கட முட சப்தம் விளக்குகளுக்குப் பின் கனினி ஒரு சீட்டைத் துப்பியது.

அதில் எழுதியிருந்தது---

“உன் குழாய் நீரில் சாக்கடை கலந்திருக்கிறது.

உன் நாய் வயிற்றில் பூச்சி இருக்கிறது.

16 வயதான உன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள்

ஆறு மாதமாக உன் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள்.

இவ்வளவு பிரச்சினை இருந்தால் எப்படித் தலைவலி வராமல் இருக்கும்?”

Thursday, October 23, 2014

கத்தி...ஒரு பார்வை




பல தினங்களாகவே கத்தி பற்றி ஊடகங்களில் வெகுவாகப் பேசப்பட்டு வருகிறது. கத்திக்காயம் பட்டால் டாக்டரிடம்தானே(!) போக வேண்டும்?!கத்தியால் காயம் படுவது என்பது வேறு;கத்திக் கத்தியே காயம் படுவது என்பது வேறு.இந்த பரபரப்பான சூழலில் கத்தி பற்றிய என் பார்வை…….

Wednesday, September 17, 2014

நின்னைச் சரணடைந்தேன்



என் நாளை பொலியச் செய்ய
       
     ஒரு அழகிய புன்னகை போதும்

என் வலிகளை மறக்கச் செய்ய
       
     ஒரு மென்மையான தொடுகை போதும்

என் பயங்களை ஓடச் செய்ய
      
     ஒரு உடல் சேரும் அணைப்பு போதும்
     (வளியிடை போகப்படாஅ முயக்கு)

என் கவலைகள் தீர்வதற்கு
      
     ஒரு ஆறுதல் வார்த்தை போதும்

எவர் தருவார் இவையெல்லாம்
        
     என் அன்பே உன்னை அன்றி!

டிஸ்கி:என்னடா ரொம்பநாளாக்காணாமப் போனவன் திரும்பி வந்திருக்கானே என திகைக்கிறீர்களா?

மதுரையில பதிவர் சந்திப்பு வருதாமில்ல!நாமளும் ஒரு பதிவர்தான்னு நெனவு படுத்தத்தேன்! 

தொடர்ந்து கொஞ்ச நாளைக்கு எழுதிக் ’கொண்டே ’போடலாம்னு இருக்கேன்!
    
       


Wednesday, July 30, 2014

தங்க மைசூர்பாகு!

ராமசாமி வீட்டின் சுவர், ஒரு பக்கமாக இடிந்து விட்டது. அவர் கொத்தனாரை வரவழைத்து சரி செய்ய வேண்டினார்.

 வந்த கொத்தனார் வாசலில் ஒரு பொட்டலத்தைப் பார்த்தார். 

என்னவாக இருக்குமென பிரித்துப் பார்த்த போது, அது நிறைய தங்கக்கட்டிகள் இருந்தன. அவருக்கு ஆச்சரியம்...அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வந்தது கண்டு மகிழ்ந்தார்.

ராமசாமியின் வீட்டுக்குள் அதை வைத்து விட்டு, வேலையைச் செய்ய ஆரம்பித்தார். ராமசாமியின் மனைவி கொத்தனாரிடம், "" பொட்டலத்தில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டாள்.

""அது வேறு ஒண்ணுமில்லே அம்மா! குழந்தைங்க மைசூர்பாகு வேணுமுனு கேட்டாங்க! அதான் வாங்கி வச்சிருக்கேன்.வேலையை முடிச்சுட்டு வீட்டிலே போய் கொடுக்கணும்,'' என்றார்.

ராமசாமியின் மனைவிக்கு மைசூர்பாகு என்றால் ஏக இஷ்டம். கொத்தனார் சாப்பிடப்போன நேரத்தில், ஒன்றை எடுத்து சாப்பிட்டு விட்டால்,அவருக்கென்ன தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் பொட்டலத்தை பிரித்தாள். உள்ளே தங்கக் கட்டிகளைப் பார்த்ததும்அதிர்ந்தாள். அதேநேரம், மூளை வேகமாக வேலை செய்தது. 

அவசர அவசரமாக கடைக்குப் போய் ஒரு பொட்டலம் மைசூர்பாகு வாங்கி வந்தாள்.  பொட்டலத்தில் அதை வைத்து விட்டு , தங்கக்கட்டிகளை எடுத்துக் கொண்டாள்

திரும்பி வந்த கொத்தனார் வேலையை முடித்து விட்டு, பொட்டலத்தை கையில் எடுத்தார். எடை குறைவாக இருந்தது. 

பிரித்துப் பார்த்தால் உள்ளே மைசூர் பாகு...!

அப்போது அசரீரி ஒலித்தது.(வேறு யார்?ராமசாமியின் மனைவிதான்)

""கொத்தனாரே! அந்த கட்டிகள்ராமசாமியை உன் மூலமாக அடைய வேண்டும் என்ற விதியிருந்தது. அதன்படி அது நடந்தது.அதேநேரம், ராமசாமி மூலமாக உனக்கு மைசூர்பாகு வர வேண்டும் என்பது விதி. அதுவும் சரியாக நடந்தது. யாருக்கு என்னவர வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் கொடுத்து விடுவேன்,'' என்றது.

பாவம் கொத்தனார்!


Friday, April 11, 2014

பழம் வேண்டும்;மரம் வேண்டாம்!-2

இந்த உருவகக்கதை, எத்தனையோ குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சி.
பெற்றவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து, பட்டினியிருந்து, போராடி பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள். வளர்ந்து, கை நிறைய சம்பாதித்துக்கொண்டு, திருமணமானபின், பெற்றவர்கள் பிள்ளைகளின் கண்களுக்கு மிகவும் வேண்டாத அருவருப்பான, உருவங்கள். அவர்கள் அளிக்கின்ற தொல்லையில் மனம் அடிபட்ட நிலையில், பெற்றோர்கள் எங்கோ ஒரு மூலையில்!