இனம் என்ற சொல்லுக்குத் தமிழ் ஆங்கில அகராதியிலே காணப்படும் இணையான
ஆங்கிலச் சொல்….race,ethnicity,breed.
இங்கு பிறப்பின் அடிப்படையில் இனம் தீர்மானிக்கப்படுகிறது
ஆனால் திருவள்ளுவர் இந்த இனம் என்ற சொல்லை எப்பொருளில் பயன்படுத்துகிறார்?
சிற்றினஞ்சேராமை என்று ஓர் அதிகாரம்
அதில் முதல் குறள்….
”சிற்றினம்
அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.” (451)
சுற்றமாச் சூழ்ந்து விடும்.” (451)
இதற்கான தெளிவுரைகள் கீழே…
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர்
அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம்
உறவாகவே கருதி விடுவர்…..(சாலமன் பாப்பையா)
பெரியோர்,
கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம்
இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்…..(கலைஞர்)
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி
ஒதுக்கும், சிறியோரின் இயல்பு
அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.... (மு.வ.)
ஆக இங்கு இனம் என் று சொல்லப்படுவது பிறப்பின் அடிப்படையில் அல்ல.
குணத்தின்,செயலின், அடிப்படையில் என்பது தெளிவாகிறது.
தீய குணம் உடையோர்,தீய செயல் புரிவோர், கீழ்மக்களாவர்.அதுவே சிற்றினம்
இதே அதிகாரத்தில் இன்னொரு குறள்...
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. (452)
இனத்தியல்ப தாகும் அறிவு. (452)
இதற்கான பொருள்....
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன்
இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே
மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின்
இயல்பாகவே ஆகிவிடும்.....(சாலமன் பாப்பையா)
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு
அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப்
பெற்றதாகிவிடும்.....(கலைஞர்)
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு
அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல்
மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.... (மு.வ.)
இந்த இனம் என்னும் சொல்லைக் கூடா நட்பு
என்னும் அதிகாரத்திலும் காண்கிறோம்.
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்...(822)
மனம்போல வேறு படும்...(822)
இதற்கான தெளிவுரை..
வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான
நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்....(சாலமன் பாப்பையா)
உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.....(கலைஞர்)
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்...... (மு.வ.)
இங்கு இனம் என்பது
அன்புள்ளவர்,உற்றவர்,வேண்டியவர் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது.
இவையே இனம் பற்றி வள்ளுவர் சொல்வது