Saturday, October 20, 2012

ஷாக் அடிக்காத ஜோக்ஸ்!




                   

கடவுள் : உனக்கு ஒரு வரம் தரேன்.என்ன வேணும் கேளு ?

 
கவுண்டமணி: பத்தாயிரம் கோடி பணம் வேணும் .

கடவுள் : இது பேராசை.வேற ஏதாவது கேளு.

 
க.ம.: இன்னைக்கு முழுக்க எங்க ஊட்டுல கரண்ட் இருக்கணும்.

கடவுள் : பணத்த டாலரா தரவா,ரூபாயா தரவா ?

 
க.ம.: ஹே ஹேய்....யாருகிட்ட !
...................................................

        தாமஸ் ஆல்வா எடிசன்---
                                            நமக்கு மின்சார பல்பு கொடுத்தவர்

                                                 இந்தப்படத்தில் யார்?
                                              

                                        நமக்கு மின்சாரம் தருவதில் பல்பு கொடுத்தவர்
                                                  (இருட்டில் படம் தெரியவில்லை!)



                               இரவு நேர இந்தியா-சாட்டலைட் படம்--எங்கே தமிழ்நாடு?

Friday, October 19, 2012

காலமும் கன்னியும் காத்திருப்பதில்லை!



”என்னங்க!முன்னால எல்லாம் நிறைய புத்தகம் படிப்பீங்க.இப்பல்லாம் லெண்டிங் லைப்ரரி  பக்கமே போறதில்லை!வீட்டுல இருக்கற நேரமெல்லாம்  பதிவு ,பதிவுன்னு அதுவே  கதியா இருக்கீங்க!ஏன் நேரத்தை இப்படி வேஸ்ட் பண்றீங்க? நேரம் போனா வராதுங்க!”என் சிறந்த பாதி சொன்னாள்.

யோசித்தேன்—நேரத்தின் அருமை பற்றி.

//நேரத்தின் அருமை தெரியவேண்டுமானால்சிலரைச் சந்திக்க வேண்டும்.

ஓர் ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால் 5 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைச் சந்திக்க வேண்டும் .சிறு கவனக்குறைவால் படித்த பாடங்களையே மீண்டும் ஓர் ஆண்டு படிக்க வேண்டிய நிர்ப்பந்தம்!மீண்டும் ஓர் ஆண்டுக்குப் பின் தேர்வு!எவ்வளவு சங்கடம்?

ஒரு மாதத்தின் அருமையை உணர வேண்டுமானால்,குறைப் பிரசவமாகக் குழந்தை பெற்ற தாய்மார்களைக் கேட்க வேண்டும்.குறைப்பிரசவக் குழந்தைகளைக் காப்பாற்றுவதில்தான் எவ்வளவு இடர்ப்பாடுகள்?

ஒரு வாரத்தின் அருமையை உணர வாரப்பத்திரிகை ஆசிரியர்களைக்கேட்க வேண்டும்.

ஒரு நாளின் அருமை உணர,தினக்கூலிகள்,அன்றாடங்காய்ச்சிகள்,நடைபாதைக் கடைக் காரர்கள்,தள்ளுவண்டி வியாபாரிகளைக்  கேட்க வேண்டும்.’பந்த்’ என்ற வியாதியால் பாதிக்கப் படுபவர்கள் அவர்கள்.

பத்து நிமிடத்தின் அருமையைக் காதலர்களிடம் கேட்க வேண்டும்.காத்திருப்பின் இடர்களை, வலிகளை அவர்கள் சொல்வார்கள்.

ஒரு நிமிடத்தின் அருமையை உணர இரயிலைக் கோட்டை விட்டவர்களைக் கேளுங்கள்.” இப்பத்தான் வந்தேன்;அதற்குள் இரயில் புறப்பட்டு விட்ட்து” என்று பரிதாபமாகச் சொல்வார்கள்.

ஒரு விநாடியின் அருமை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தைச் சந்தித்தவர்களைக் கேட்க வேண்டும்.

மில்லி செகண்டின் அருமை பற்ரித் தெரிய வேண்டுமானால்,பந்தயங்களில் விநாடியின் நூறில் ஒரு பங்கில் பதக்கம் இழந்தவர்களைக் கேட்க வேண்டும்//

(லேனா தமிழ் வாணன் அவர்களின் சிந்தனை முத்துக்கள்)

எல்லாம் சரிதான்!அதற்காகப் பதிவெழுதவதை நிறுத்தி விட முடியுமா என்ன?!


டிஸ்கி:தலைப்பில் காலம் சரி.கன்னி எதற்கு?ஹி,ஹி,ஒரு கவர்ச்சிக்குத்தான்!

Thursday, October 18, 2012

மனைவி இல்லாத ராத்திரிகள்! !

எவ்வளவு நேரம்தான் சேனல்களை மாற்றி மாற்றி எதையாவது பார்த்துக் கொண்டி ருப்பது?

எதிலும் மனம் செல்லவில்லை.

மணி பார்க்கிறேன்;

11.00 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

வழக்கமாக 10.00 மணிக்குத் தூங்கி விடுவேன்

ஒரு மணிநேரம் அதிகம் சென்றும் உறக்கம் வரவில்லை.

அதற்காக இரவு முழுவதும் விழித்துக் கொண்டே இருக்க முடியுமா!

பின் நாளை அலுவலகத்தில் தூக்கம் வந்து தொலைக்குமே!

டி வியை அணைத்து விட்டுக் கட்டிலில் படுக்கிறேன் தலையணையை அணைத்தபடி.

இன்று அதைத்தான் அணைக்க முடியும்.

வழக்கமாய் தூங்கும் முன் மனைவியின் இதழ்களை என் இதழ்களால்   ஒற்றி எடுத்து 

குட்நைட் சொல்லி விட்டுத்தான் தூங்குவேன்.இன்றோ?

ஏதோ வெறுமை;மனத்தில் அமைதியின்மை;எதையோ இழந்த தவிப்பு.

புரண்டு புரண்டு--------

படுக்கை கசங்குகிறது;உறக்கம் வரவில்லை.

மணி 12 அடிக்கிறது

எங்கிருந்தோ ஒரு நாயின் ஊளை!

பஞ்சமத்தில் சுருதி சுத்தமாய்!

ஏதாவது பிரிவுக்கு அழுகிறதா?

ஊளை மறைந்து இப்போது ஏதோ கருவி இசை.

நாகஸ்வரமா,மாண்டலினா,குழலா?

ஒரு கலவை!

ஆனால் இந்த நேரத்தில் என்ன இது?

பூபாளராகம் இசைக்கப்படுகிறதே.?

ஏற்கனவே உறக்கம் இல்லை.

இந்த அழகில் காலை ராகமான பூபாளம் கேட்டால் எங்கே தூங்குவது?

புரண்டு,புரண்டு.............

தொடர்ந்து ஒலிக்கும் பூபாளம்!

ஏன்,ஏன்?

தூக்கம் தொலைந்த இரவாகிறது.

மணி பார்க்கிறேன்

5.00 மணி.

பூபாளம் நின்று விட்டது

லேசாக உறக்கம் வருகிறது

மீண்டும் இசை! ஆனால் இம்முறை நீலாம்பரியாக வருகிறது

மெல்ல,மெல்ல உறக்கத்தில் ஆழ்கிறேன்..

ட்ரி...ங்,ட்ரி...ங்

திடுக்கிட்டு விழிக்கிறேன்.

என் தொலை பேசிதான்.

தூக்கக் கலக்கத்துடன் எடுக்கிறேன்.”ஹலோ”

”என்ன !மணி 7 ஆகுது இன்னும் தூக்கமா?ஆபீஸ் போற ஐடியா இல்லையா?நான் இல்லைன்னா அவ்வளவுதான்;தூக்கம்தான்.எப்படித்தான் உங்களுக்கு இப்படித் தூக்கம் வருதோ;நான் என்னடான்னா நேத்து ராத்திரி பூரா உங்க நினப்பிலேயே தூங்காம இருந்திருக்கேன். நீங்க நல்லாத் தூங்கறீங்க?”

என்ன அநியாயம்?நடந்தது என்ன என்று தெரியாமலே!

நான் என்ன சொன்னாலும் அவள் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

அவள் மட்டுமல்ல.

எல்லாத் தங்கமணிகளும் அப்படித்தான்!

ரங்கமணிகளின் தவிப்பைப் புரிந்து கொள்வதே இல்லை!

இந்தக்கதையை யாருக்கு ச் சமர்ப்பணம் செய்வது?

ரங்கமணிகளுக்கா?தங்கமணிகளுக்கா?

டிஸ்கி:மனைவி இல்லாத இரவுகள் எனத்தலைப்புக்கொடுக்க எண்ணினேன்.ஆனால் ராத்திரிகள் என்பதில் அழுத்தம் அதிகம் இருப்பது போல் தோன்றியது!

Wednesday, October 17, 2012

சிறப்புச் செய்திகள்-வாசிப்பது குட்டன்!



ராமு:என்ன சோமு ?ரொம்ப கவலையோடு காணப்படுறே?

சோமு:எல்லாம் குழந்தையில்லாக்கவலைதான்.கல்யாணம் ஆகி 10 வருசம் ஆச்சு இன்னும் குழந்தையில்லை.எல்லா டாக்டரையும் பாத்தாச்சு.ஒரு குறையும் இல்லை ரெண்டு பேர் கிட்டயும்னு சொல்லீட்டாங்க.எல்லாக் கோயிலுக்கும் போயாச்சு;ஒண்ணும் பிரயோசனம் இல்லை. வயசும் எனக்கு 40,அவளுக்கு 35 ஆச்சு.இன்னைக்குப்பாரு,பக்கத்து வீட்டில  குழந்தைக்குத் தொட்டில் விழா.எல்லாப் பெண்களையும் கூப்பிட்டிருக்காங்க;என் மனைவியைக் கூப்பிடலை. அவ அழுதுகிட்டே இருக்கா!அதான் ரொம்ப வருத்தமா இருக்கு.

ராமு:இதுக்கு ஏம்பா இவ்வளவு வருத்தப்படறே?40 வயசெல்லாம் ஒரு வயசா?ஹரியானாவில் ஒருத்தருக்குக் குழந்தை பிறந்திருக்கு;இரண்டாவது குழந்தை .அவர் வயசு என்ன தெரியுமா?96!ரெண்டு வருசத்துக்கு முன்னாலே  முதல் குழந்தை பிறந்ததாம்.குழந்தை வேணும்னு உறுதியோட இருந்தாராம்;ரெண்டு பிறந்தாச்சு.உனக்கும் பிறக்கும்; நம்பிக்கையோடு இரு.எதிர்மறை எண்ணங்களுக்கு ரெண்டு பேருமே இடம் கொடுக்காதீங்க!

சோமு:ரொம்ப நன்றி ராமு.மனசு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கு. ஆமாம் நீ எப்பவும் போல டி.வி நிறைய பாத்துக்கிட்டுதான் இருக்கயா?

ராமு:ஆமாம்பா.ராத்திரி மூணு மணி நேரமாவது ரெண்டு பேரும் டி.வி. பார்ப்போம். வேறென்ன தான் செய்ய?

சோமு:நான் ஒரு செய்தி படிச்சேன்.ஒரு மணி நேரம் டி.வி பார்த்தா வாழ்நாளில் 22 நிமிடம் குறையுமாம்!ஒரு நாளைக்கு 3 மணி நேரம்னா, 66 நிமிடம்-அதாவது ஒரு மணி நேரமாவது குறையும்.ஒரு வருசத்துல 365 மணி நேரம் அதாவது 15 நாட்களுக்கு மேல்.60 வருசம் வாழ்க்கைன்னால்  30 மாதம் வாழ்நாள் குறைந்து விடும். பார்த்துக்கோப்பா!

ராமு:அய்யோ!இது வேறயா?இனிமே குறைச்சிடறேன்.இன்னொரு  நகைச்சுவையான செய்திஇதுவும் ஹரியானாதான்.ஒரு காப் பஞ்சாயத்தில சொல்லிருக்காங்க.பசங்கல்லாம் இந்தச் சீன உணவான சௌ மீன் –நூடில்ஸ்- அதிகம் சாப்ப்டறதாலதான் அங்கு கற்பழிப்புகளெல்லாம் அதிகமா நடக்குதாம்!எப்படியிருக்கு?காரணம் கண்டு பிடிக்க ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல!

 அப்புறம் சொல்ல மறந்துட்டேனே;அந்த ஹரியானா வயசானவர் தினம் 2லிட்டர் பசும்பால் குடிக்கறாராம்! நல்ல பச்சைக் காய்கறி சப்பாத்தி இதெல்லாம் அவர் உணவாம்!குறிச்சு வச்சுக்கோ!
வர்ட்டா!


Tuesday, October 16, 2012

ஒரு முன்னாள் புறக்குடியிருப்பாளரின் புலம்பல்!



வயது-1

பட்டுப்புடவைகள்;வேட்டி பேண்ட் சட்டைகள்,செண்ட் வாசனை
எல்லோரும் கூடிக் கொண்டாடும் விழா!
என் முதல் ஆண்டு நிறைவு விழா!
எல்லோரும் பாடுவர்
“ஹேப்பி பர்த்டே டு யு டியர் ரமணி!
ஆனால் என் பெயர் ஸ்ரீனிவாச ராமானுஜ வெங்கடரமணன்!

வயது 10

வகுப்பில் என்று முதலிடம்
உறவும்,குருவும் வியக்கும் முதன்மை
இட்லி,தோசை ,சாம்பார் சட்னி
தயிர்சாதம் சாப்பிடச் சாப்பிடப்
சாப்பாட்டு ராமனாய் ஆகிறேனோ!

வயது 21

ஐஐடியில் பிடெக் முதல் வகுப்பு
இன்ஃபோசிஸ் வேலை
நாளை பறக்கிறேன் பெங்களூருவுக்கு
அப்புறம்....யு,எஸ்! என்றாவது!

வயது 26

நான்கு ஆண்டுகள் ஆயிற்று
யு எஸ் வாசம்.
தேடியும் கிடைக்கவில்லை
மனம்போல் பெண்
ஹூம்!

வயது 30

என் சுயம்பாகம் சாப்பிட்டு
நாக்கு செத்துப் போச்சு!
ஊருக்குப் போகும்போது
அம்மாவிடம் சொல்லி
சமைக்கத் தெரிந்த ஒரு
பெண்ணைக் கூட்டி வந்துடணும்—
கல்யாணம் பண்ணித்தான்!

வயது 45

இரண்டு குழந்தைகள் எனக்கு
அருமையாய்ப்  பெயர்வைத்தேன்
கிருஷ்ணசாமி,மகாலக்ஷ்மி என
இன்றவர்கள் க்ரிஸ்,மேகியாகி விட்டார்கள்
கலாசாரம் சம்ப்ரதாயம்—ஊஹூம்!
வயிற்றில் பந்து சுருள்கிறது
அவர்களை எண்னி!

வயது 61

இப்போது நான் தஞ்சையில்
நானும் மனைவியும் மட்டும்
பிள்ளைகள் அமெரிக்காவில்
இந்தியா அவர்களுக்குப் பிடிக்கவில்லை!

வயது 75

இந்தியாவில் ஒரு புண்ணியக்ஷேத்திரம்
பாக்கியில்லை,எல்லாம் போயாச்சு!
நாளெல்லாம் டி.விதான் சீரியல்தான்!
என்ன வாழ்க்கை இது ?
என்ன ஆச்சு என் கனவுகள்?
ரெண்டு கல்யாணம்,ஒரு டைவர்ஸ்
எல்லாம் ஆச்சு பசங்களுக்கு!
என்ன ஆச்சு கலாசாரம்;
என்ன ஆச்சு பாரம்பரியம்
என்ன ஆச்சு குலப் பெருமை
எல்லாம் போச்சு!
போயே போச்சு!