மனோகர் சுற்றும் முற்றும்
பார்த்தார்.
வீட்டை விட்டு வந்து நெடுநேரம் ஆகிவிட்டதைப் போல் தோன்றியது.
வீட்டுக்குத் திரும்பவேண்டும்.
ஆனால் வழி தெரியவில்லையே?
சிறிது யோசித்தார்.
நான்கு புறமும் சாலைகள்
நீண்டு கிடந்தன.
அதில் ஒரு சாலையின் வழியே
வந்ததாக அவருக்குத் தோன்றியது.
அந்தச்சாலையில் நடக்க
ஆரம்பித்தார்.
ஆனால் அவருக்குத் தெரியாது,செல்ல
வேண்டிய திசைக்கு நேர் எதிர்த் திசையில் சென்று கொண்டிருப்பது.
நடந்தார்;நடந்து கொண்டே
இருந்தார்……….
நேரம் கடந்தது.
சாலையோரம் இருந்த ஒரு
கல்லில் அமர்ந்தார்.
தாகம் எடுத்தது.
அருகில் எங்கும் தண்ணீர்
கிடைப்பதாகத் தெரியவில்லை.
வீடு எங்கே இருக்கிறது?
யோசனை,யோசனை.
ஆனால் கேள்விக்கு விடை
தெரியவில்லை
மேலும் சிறிது நடைக்குப்
பின் ஒரு பூங்காவை அடைந்தார்.
உள்ளே சென்று புல்தரையில்
அமர்ந்தார்.
நல்ல வேளையாக அங்கு ஒரு
குழாய் இருந்தது.
தண்ணீர் குடித்து விட்டுப்
புல் தரையில் படுத்தார்.
இருள் சூழத்தொடங்கியது.
பூங்கா காலியாகியது.
பூங்காக் காவலன் அருகில்
வந்து “பெரியவரே!பூங்காவைப் பூட்டப்போகிறேன்.எழுந்து வீட்டுக்குக்குப் போங்க” என்றான்.
அவர் எழுந்தார்.மீண்டும்
நடை
ஒரு இலக்கைத்தேடி,இலக்கில்லாத
நடை!குளிரத் தொடங்கியது.
சாலையோரத்தில் பலர் படுத்திருந்தனர்.
தானும் அவர்களுடன் படுத்தார்.
தூக்கமில்லாத இரவு!
மறு நாள் மீண்டும் தேடல்.
இவரது தேடலை,இவர் முகத்தில்
தெரியும் களைப்பை,கவலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் இயந்திர கதி மனிதர்கள் யாரும்
இல்லை.
நன்கு உடை உடுத்தியிருக்கும்
இவரை கடந்து செல்லும் காவல் துறையினரும் கண்டு கொள்ளவில்லை.
பசி;தாகம்.
யாரிடமும் கேட்க மனமில்லை.
எதிர்ப்படுவர் முகங்களையெல்லாம்
உற்றுப் பார்த்த படி செல்ல,பலர் அவர் பைத்தியமோ என
எண்ணி விலகிச்
சென்றனர்.
அவர் முகத்தைப் பார்த்து
அவர் களைப்பை உணர்ந்த ஓரிருவர் தண்ணீர் கொடுத்தனர்.
ஒரு நாள் இரண்டு நாள்,மூன்று
நாள்…..
உணவின்றிப் படுக்க இடமின்றி
அந்தக்காங்கிரீட் காட்டிலே அலைந்தார்.
கடைசி நாள்”ராமு,சோமு
”என்று மகன்களின் பெயரைச் சொல்லிய படியே பலவீடுகளின்
வாசலில் நின்றார்.
இந்தப்
பைத்தியக்காரன் யார் என்பதே ம(மா)க்களின் எண்ணமாயிற்று.
நடக்க முடியாமல் சுருண்டு
விழுந்தார்.
அந்தக் காங்க்ரீட் காட்டிலே
உறவுகள் இருந்தும் அநாதையாய்,மரணமடைந்தார்.
மக்கள் இப்போது அவரைக் கவனித்தனர்.தங்கள் வீட்டருகில் அநாதைப் பிணம்
என்றஎண்னத்தில் போலீஸுக்குப் போன் செய்தனர்.
பிணம் அப்புறப்படுத்தப்பட்டது.
……………………………………………
மனோஹர்லால் சர்மா,77,மே
30 அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.ஜுன் 4 அன்று பசி,தாகம்,சோர்வில் வாடி மரணமடைந்த அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவருக்கு
முதுமை மறதி நோய்.
அவர்
காணாமல் போனவுடன் அவர் புகைப்படத்துடன் காவல் துறையில் புகார் செய்யப் பட்டது.
ஆனால்
அவர் செத்தபின்தான் கண்டு பிடிக்கப்பட்டார்.
உணர்வுகள்
மரத்துபோன ஒரு நகரத்தின் அலட்சியம் இதற்குக் காரணம் என அவரது மருமகள் கூறினார்
(டைம்ஸ்
ஆஃப் இந்தியா-18-06-2013)