Wednesday, February 27, 2013

நாம் அனைவரும் பென்சில்களா?!



      ஒரு சிறந்த பென்சிலாக விளங்க வேண்டுமானால்,அந்தப் பென்சில்—
      
           தன்னை ஒருவர் கையில் எடுத்துக் கொள்ளச் சம்மதித்தால்தான் சிறப்பான செயல்களைச்     செய்ய முடியும்
     
     தேவைப் படும்போதெல்லாம் நன்கு சீவி கூர்படுத்தப்படத் தயாராக இருக்க வேண்டும்- அது வலித்தாலும் கூட.
    
      செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்
    
      உள்ளே என்ன இருக்கிறதோ அது மிக முக்கியம்
    
       எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் தெளிவாக எழுத வேண்டும்;தன் செயலைப் பதிக்க வேண்டும்

 இப்போது அந்தப் பென்சிலின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போமா?

கடவுளின் கையில் நம்மை ஒப்படைக்க வேண்டும்நம்மிடம் இருக்கும் திறமைகள் மற்றவருக்குப் பயன்பட வேண்டும்
.
வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம்;ஆனால் அவையே நம்மைக் கூர் படுத்திச் சிறக்கச் செய்யும் சாதனங்கள்.

நம் தவறுகளைத் திருத்தி நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்குள்ளே என்ன இருக்கிறது என்பது மிக முக்கியம்

வாழ்வில் எந்தக்கட்டத்திலும் எந்த நிலையிலும் சோர்வின்றிச் செயல் பட்டு நம் முத்திரை பதிக்க வேண்டும்

நாம் பென்சில் போலத்தான்.

படைத்தவன் நம்மைப் படைத்த நோக்கத்தைச் சரிவர நிறவேற்ற வேண்டும்.

வாழ்க்கையில் சிறக்க வேண்டும்!



Monday, February 25, 2013

இதுதாண்டா காதல் (தத்துவம்!)

சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க...
புரியாட்டியும் நீங்களே ஏதாச்சும் புரிஞ்சுக்குங்க....


தத்துவம் 1

"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."


தத்துவம் 2

"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."


தத்துவம் 3

"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."


தத்துவம் 4


"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கணும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கிற எல்லாரையும் பொண்டாட்டியா
நெனைக்கறது ஆம்பளை புத்தி..."


தத்துவம் 5


"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."


தத்துவம் 6


"ஏன்னா அவ அழகுன்னு சொல்லுறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லுறவன் True லவ்வர்..."


தத்துவம் 7


"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்க...."


தத்துவம் 8

"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."


தத்துவம் 9


"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."
 


நன்றி
(தமிழ்த் தாயகத்திற்காக
சவிதா செல்வராஜ் )

Saturday, February 23, 2013

பொய் சொல்றாங்க,!



பொய்  சொல்வது

1) குழந்தைக்கு- ஒரு குற்றம்

2) வாலிபர்க்கு- ஒரு தவறு

3)காதலனுக்கு- ஒரு கலை

4)வழக்கறிஞருக்கு- ஒரு  தொழில்

5)அரசியல்வாதிக்கு- ஒரு தேவை

6)பிரம்மச்சாரிக்கு- ஒரு திறமை

7)முதலாளிக்கு- ஒரு மேலாண்மைக் கருவி

8)ஊழியருக்கு- ஒரு சாக்குப் போக்கு


கொசுறு............


நட்பு?!
...............
அவனைப் பற்றி

ஆயிரம் குற்றம் 

சொன்னாய்நீ

என்னிடம்

என் எண்ணமெல்லாம்

என்னைப் பற்றி

அவனிடம் என்ன

 சொன்னாய்  நீ

என்பதில்தான்!  
.......................................




Friday, February 22, 2013

கம்ப ரசம்



பழ ரசம் பருகியிருப்பீர்கள்.

மிளகு ரசம் பருகியிருப்பீர்கள்.

இன்று சிறிது கம்ப ரசம் பருகுவோமா?

கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி.

பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்!

வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான்.
தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி .

இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்.

இராமனை இகழ ஆரம்பிக்கிறான்.

அதில் ஒரு பாடல்……

கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை!

”ஓவியத்தில் எழுத முடியாத அழகுள்ள ராமனே!உன் குலத்தோர் அரச தர்மம் தவறாதவர்கள். ஆனால் நீ?!சீதையைப் பிரிந்ததனால் மனம் பேதலித்து இவ்வாறு செய்தாயோ?” என்கிறான் வாலி.

இகழும்போது கூட அவன் அழகைப் புகழ்வானா என ஒரு கேள்வி!எனில் வேறு என்ன 
பொருள் கொள்ளலாம்?

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாகத் தீட்டி வைப்பர்(புகைப்பட வசதி கிடையாது!)அவ்வாறு” இந்த நிகழ்ச்சியை ,நீ என்னைக் கொன்ற நிகழ்ச்சியை, படமாகத் தீட்டினால் உன்னை அதில் எழுத முடியாது;ஏனெனில் நீ மறைந்திருந்து கொன்றாய்,   எனவே ஓவியத்தில் தெரிய மாட்டாய் “என்பதும் ஒரு பொருளாகத் தோன்றுகிறது .

அதுவே கம்ப ரசம்.

இன்னொரு பாடல்.

கைகேயி இராமனிடம் ”பரதன் அரசாளவும்,நீ மரவுரி தரித்துக் காட்டுக்குப் பதினான்கு ஆண்டுகள் போகவும் வேண்டும் என அரசன் சொன்னான்” என்றுசொல்கிறாள்

அப்போது இராமன் சொல்கிறான்...

'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்

”தசரதன் சொல்லாமல் நீங்களே சொன்னாலும் நான் மறுப்பேனா?பரதனுக்குக் கிடைத்தால் எனக்கே கிடைத்த மாதிரிதானே” எனச் சொல்கிறான்.

இதையே வேறு கோணத்தில் பார்க்கலாம்.

“ இது மன்னவன் பணியன்று;

ஆனாலும் உங்களின் இந்தப்பணியை நான் மறுப்பேனா?

நான் பெறப்போகும் அதே செல்வத்தைத்தானே(மரவுரி)பரதனும் பெறப்போகிறான் (அடியனேன் பெற்றதன்றோ என் பின்னவன் பெற்ற செல்வம்).

நடந்த உண்மையையும்,நடக்கப்போகும் உண்மையையும் இராமன் கூறுவது போல் உள்ளதல்லவா?

இதுதான் கம்பரசம்!

பிறிதொரு சமயம் இன்னும் கொஞ்சம் கம்ப ரசம் பருகலாமா?

(வாரியார் ஸ்வாமிகள் சொல்லக்கேட்டவை)

Wednesday, February 20, 2013

பெண்ணுக்கும் ஆணுக்கும் என்ன வேறுபாடு?!



ஒரு பெண் ஒரு நாள் இரவு வீடு திரும்பாமல் வெளியே தங்கி விட்டு,மறுநாள் காலை வீடு திரும்பினாள்.கணவனிடம்”நேற்று இரவு நேரமாகிவிட்டதால் என் உயிர்த்தோழி ஒருத்தியோடு தங்கி விட்டேன்”என்று.

அவள் கணவன் அவள் உயிர்த்தோழிகள் பத்துப் பேருக்கு தொலை பேசி விசாரித்தான். அவர்கள் அனைவரும் அவர்களுக்குத் தெரியாது  எனச் சொல்லி விட்டார்கள்!
..
ஒரு ஆண் இரவு வீடு திரும்பாமல் மறுநாள் காலை வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம் சொன்னான்”நேற்று நேரமாகி விட்டதால் என் உயிர் நண்பன் ஒருவனுடன் தங்கி விட்டேன்.”

அவன் மனைவி அவன் உயிர் நண்பர்கள் பத்துப்பேரைத்தொலை பேசியில் தொடர்பு கொண்டாள்;

அதில் எட்டுப்பேர் அதை உண்மையென்றும் அவருடன்தான் தங்கியதாகவும் சொன்னார்கள்!

இருவர் அதோடு நில்லாமல் இன்னும் அங்குதான் இருப்பதாகவும் சொன்னார்கள்!

இதுதான் பெண்ணுக்கும் ஆணுக்கும் வேறுபாடு!

(நன்றி :டைம்ஸ் ஆஃப் இந்தியா)
……………………………
ஒரு பெண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறாள்
ஒரு ஆணின் கவலையே திருமணத்துக்குப் பின்தான் ஆரம்பமாகிறது!
……………..
ஒரு பெண் ஒருவனை மணக்கும்போது அவன் மாறுவான் என்ற நம்பிக்கையோடு மணக்கிறாள்;  ஆனால் அவன் மாறுவதில்லை

ஓர் ஆண்  பெண்ணை மணக்கும்போது அவள் மாறமாட்டாள் என நம்புகிறான்;ஆனால் அவள் மாறி விடுகிறாள்!
……………..

வாழ்க்கையில் இருநேரங்களில் ஒரு ஆணால் பெண்ணைப் புரிந்துகொள்ள முடிவதில்லை! 

1)திருமணத்துக்கு முன்2)திருமணத்துக்குப் பின்!
……………………………

கொஞ்சம் இருங்க!தங்கமணி என்னவோ சொல்கிறாள்!

என்னம்மா?

இன்னிக்கு ராத்திசிச் சாப்பாடு கிடையாதா?! 

அய்ய்ய்யோ!