”கல்யாணம் பண்ணிப்பார்;வீட்டைக்
கட்டிப்பார் ” என்று சொல்வார்கள்.
இரண்டிலும் உள்ள சிரமத்தை எடுத்துக்காட்டுவதற்காகச்
சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை.
இரண்டுக்குமே அதிகபொருள் செலவு;அதிக நேரம் தேவை-சரியாகத் திட்டமிடுதல், தவறின்றிச் செயலாற்றுதல்-,அதிக உழைப்பு தேவை.
ஆனால் இன்றைய சூழலில்,பொருட்செலவைத் தவிர மற்ற சிரமங்கள் இல்லாமல் போய் விட்டன.
கல்யாணத்துக்கும் காண்ட்ராக்டர் இருக்கிறார்;வீடு கட்டவும் காண்ட்ராக்டர் இருக்கிறார்.
என் உறவினர் ஒருவர் ஒரு ஹோட்டலில் மகளின்
திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார்.
அப்போது அந்த ஓட்டலின் மேலாளர் கூறினாராம்”மணமகன்,மணமகள்,காசோலைப் புத்தகம்
மூன்றுடன் வாருங்கள் போதும் ”என்று
ஆம் திருமணம் நடத்துவது என்பது அவ்வளவு எளிதாகி
விட்டது.
ஆனால் ஒரு பதிவர் திருவிழா நடத்துவது என்பது
திருமணம் ,வீடு இரண்டையும் விட மிகப் பெரும் செயலாக இருக்கிறது
என்பது ஒரு நண்பர் வழியாக எனக்குக் கிடைக்கும் செய்திகள் மூலம் தெரிகிறது.
இரண்டு மாதமாகத் திட்டமிடல்.
ஒவ்வொரு வாரமும் ஆலோசனைக் கூட்டம்.
பணியைப் பிரித்துகொண்டு செயலாற்றும் தனித்தனிக் குழுக்கள்.
குழுக்களின் ஒருங்கிணைப்பு.
இன்னும் நான்கு நாட்களே பாக்கி இருக்கும் நிலையில்
கடைசிக்கட்ட ஆலோசனைகள்.
சிறப்பான உணவு ஏற்பாடு.
காவல் துறையின் அனுமதி பெறல்
விழாவுக்கு முதல்நாள் முதல் வெளியூர்ப்
பதிவர்களை வரவேற்றல்.
தங்குமிடம் ஏற்பாடு செய்தல்
விழாவன்று மேடை,ஒளி ஒலி ,புகைப்படம் ,வீடியோ ஏற்பாடுகள்.
தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள்.
நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு.
கடைசி நாள் வரை நிகழ்ச்சி நிரலை மேம்படுத்தத் திட்டமிடல்
எல்லாவற்றுக்கும் மேலாக விழாவன்று நேர மேலாண்மை.
எவ்வளவு ஈடுபாட்டுடன்,சரியாகத்
திட்டமிட்டு,பணிகளைப் பிரித்துக் கொண்டு
முழு மூச்சுடன் செயல்படுகிறார்கள் இந்த
இளைஞர்கள்!
இந்த உழைப்புக்குப் பரிசாக
கிடைக்கப்போவது விழாவின் மகத்தான வெற்றி!
அடுத்த வாரம் இந்நேரம் விழா சிறப்பாக
நடந்தேறி . விழா அமைப்பாளர்களுக்கு திருஷ்டி கழித்து முடிந்திருக்கும்.
இளைப்பாற நேரம் சிறிதும் இன்றி அலுவலகப் பணி.அழைக்க ஓடிக்கொண்டிருப்பார்கள்!
ஆனால் புதிய நண்பர்களின் அறிமுகம்,விரிவடைந்து விட்ட நண்பர் வட்டம் அனைத்துக்கும் மேலாக சாதித்து விட்டோம் என்ற மன நிறைவு அவர்கள் களைப்பைப் போக்கி விடும்
வாழ்த்துக்கள் !
டிஸ்கி:”கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்” என்று கடோத்கஜன் பாடுவது போல் பாட வைக்கும் விருந்து காத்திருக்கிறதாமே!
என்ன மெனு சொல்லுங்கப்பா,நாரதரும் தேவேந்திரனும் தெரிஞ்சுக்கட்டும்!