Wednesday, October 31, 2012

பயமாக இருக்கிறது!



பயமாகத்தான் இருக்கிறது.
நாட்டு நடப்பைப் பார்க்கையில் பயம் வராமல் இருக்க முடியுமா?
வலைப்பூ என்று  ஒன்று தொடங்கி எதையெல்லாமோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.
எனக்குத் தெரிந்து நான் சர்ச்சைக்குரிய செய்தி எதையும் எழுதியதில்லை.
ஆனாலும் பயமாகத்தான் இருக்கிறது!
நமக்கே தெரியாமல் எப்போதாவது ஏதாவது தவறாக எழுதியிருப்போமோ என்று.
இப்போது ட்விட்டரில் தொடக்கம்.முதலில் சின்மயி அவர்கள் புகாரின் பேரில் இருவர் கைது.
இப்போது கார்த்தி சிதம்பரம் அவர்கள் புகாரின் பேரில் ஒரு புதுச்சேரித் தொழிலபர் கைது.
இரண்டுக்கும் காரணம் ட்வீட்டுகள்
நாளையே இந்தச் சிக்கல் வலைப்பூவிலும் வரலாம்.
இப்போதே தங்கமணி கேட்க ஆரம்பித்து விட்டாள்சும்மா வியாபாரத்தைக் கவனிச்சிட்டு இருக்காம இதெல்லாம் எதுக்கு
எனவே ஒரு முடிவு செய்திருக்கிறேன்.
இனி என்ன எழுதினாலும் அவள் படித்து ஓகே செய்த பின்னரே வெளியிடுவது என்று!
இதில் அவளுக்கும் மிக மிக மகிழ்ச்சி!
இதை நீங்களும் முயன்று பாருங்களேன்.
குடும்பத்தில் குதூகலம் பொங்கும்!
……………………………………..

இரு கவுஜகள்
---------------------
இதயமில்லாதவன்
-----------------------------
 

இதயம் என்று ஒன்று
எனக்கு இருந்தது முன்பு
இன்றில்லை என்னிடம்
எடுத்துக் கொண்டுவிட்டாய் நீ!
பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
ஏனென்றால் இருப்பது இரண்டு
இன்று உன்னிடம்!
நான் இதயமில்லாதவன்!!

………………………….

நிழல்
--------

காதல் என்பது உன் நிழல் போல
அதைத் துரத்தினால்  
விலகி ஓடும்.
அதை விட்டு விலகிப்போ
அது உன்னைத் தொடர்ந்து வரும்!

Tuesday, October 30, 2012

தல ரசிகன்!



விஜய் தொலைக்காட்சியில் சனியன்று ஒரு புதிய யதார்த்தக் காட்சி ஒன்று பார்த்தேன். வெங்கட் பிரபு அவர்கள் நடத்தினார். நிகழ்ச்சியின் பெயர் ”கோலிவுட் கிங்’

அன்றுதான் நிகழ்ச்சி ஆரம்பம்.முதல் நிகழ்ச்சியாகத் தல  அஜீத் பற்றிய கேள்விகள் .பங்கு பெற்றவர்கள் அனைவரும் தல ரசிகர்கள்(நானும்தான்-ஹி,ஹி!).நிகழ்ச்சியின் வடிவம் புதுமையாக இருந்தது. 50 பேர் கலந்து கொண்டார்கள் என எண்னுகிறேன்.நான் பார்க்கும் போது 31 பேரே போட்டியில் இருந்தனர்,ஒரு கேள்விக்கு எத்தனை பேர் பதில் சொல்கிறார் களோ,அந்த எண்ணால் அந்தக்கேள்விக்கான தொகையைப்  (1000/2000/3000) பெருக்கி வரும் தொகை பாக்ஸ் ஆஃபிசில் சேர்க்கப்படும். இப்படி பாக்ஸ் ஆஃபிசில் பணம் சேர்ந்து கொண்டே வரும்.

கடைசியில் 4 பேர் போட்டியில் இருந்தனர்.பாக்ஸ் ஆஃபிசில் 4 லட்சத்துக்கு மேல். கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்பவருக்குப் பரிசு மற்றும் கோலிவுட் கிங் என்ற பட்டம்;அத்துடன்,ஒரு போனஸ் கேள்விக்கும் பதில் சரியாகச் சொன்னால்,பாக்ஸ் ஆஃபிஸ் பணமும்.!

தல ரசிகர்கள் அவர் பற்றிய விவரங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தனர்.ஆனால் கடைசிக் கேள்வியில் வெங்கட் பிரபு போட்டார் ஒரு குண்டு!கேள்வி -அஜீத் தன் பெற்றோர் பெயரில் தொடங்கிய மோகினி மணி பவுண்டேஷன்  எந்த வருடம் தொடங்கப்பட்டது? வழக்கம் போல் 4  தேர்வுகள்; சரியாகச் சொல்லி வெல்ல 25% நிகழ் தகவு! ஆனால் யாருக்கும் அதிர்ஷ்டம் இல்லை!நான்கு பேருமே தவறான விடை கூறினர்.

இதற்கான விடை சொல்லப்படவில்லை.நேயர்களுக்கு குறுஞ்செய்திக் கேள்வியாகக் கொடுக்கப் பட்டது.

இதைப் படிக்கும் தல ரசிகர்களே!உங்களுக்காவது தெரியுமா?

ஒரு திரை நாயகன் பற்றிப் பேசியதால், ஒரு செய்தி நினைவுக்கு வந்தது.திரைப்படங்களில் கதாநாயகன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும்,தன் பெற்றோரின் பணியில் உதவி புரிவான்.இதோ ஒரு நிஜ ஹீரோ!பெயர் மணிகண்டன்.படிப்பு சி.ஏ; வசிப்பது மைலாப்பூர் சென்னை.இப்போது சுந்தரம் பி.பி.ஓ வில் வேலை;இன்றும் காய்கறி கீரை வியாபாரம் செய்யும் தன் பெற்றோருக்கு உதவியாக  காய்கறிகளை வண்டியில் அடுக்கி உதவி புரிந்து விட்டுப் பின்னரே தன் பணிக்குச் செல்கிறார்!


Monday, October 29, 2012

விஸ்வரூபம்--சில வியப்பான தகவல்கள்!



விஸ்வரூபம் என்பது என்ன? யார்,எப்போது,எங்கே விஸ்வரூபம் எடுத்தார்?

இந்தக் கேள்விகளுக்கான  விடை பகவத்கீதையில் இருக்கிறது.

பதினோறாவது அத்தியாயத்தில்.பார்த்தன்  பகவானின் விஸ்வரூபத்தைக் காண விருப்பம் தெரிவிக்க,பகவான் பார்த்தனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார்.”என்னுடைய நூற்றுக் கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் பற்பல விதங்களாகவும் பல நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள தெய்விகமான உருவங்களைப் பார்” என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.

அர்ஜுனன் கண்டதென்ன?

அநேக முகங்களோடும்,அநேக கண்களோடும் கூடியவரும்,பல அற்புதமான காட்சிகள் கொண்ட வரும் அநேக விதமான தெய்வீகமான ஆபரணங்களோடு கூடியவரும்,திவ்யமான பற்பல ஆயுதங் களைக் கைகளில் ஏந்தியவரும்,தெய்விகமான மாலைகளையும் ஆடை களையும்  அணிந்த வரும், திவ்யமான வாசனைத் திரவியங்களைத் தம் உடலில் பூசிக் கொண்டி ருப்பவரும், எல்லா விதங்களிலும்  ஆச்சரியமயமானவரும் ,எல்லையற்றவரும், எல்லாப் புறங்களிலும் முகங்களோடு விளங்குகின்றவரும்,விராட் ஸ்வரூபமானவரும் ஆன தேவாதி தேவனான பரமேசுவரனை அர்ஜுனன் கண்டார்.

அர்ஜுனன் சொன்னான்”தேவனே !உங்கள் திருமேனியில் எல்லா தேவர்களையும்  அநேக பிராணி   வர்க்கங்களயும்,பிரம்மதேவனையும்,மஹாதேவனையும்  எல்லா ரிஷிகளையும், தெய்விகமான சர்ப்பங்களையும் பார்க்கிறேன்”

“உங்களை எண்ணிலடங்காத கைகள்,வயிறுகள் முகங்கள்,கண்கள் கொண்டவராகவும், எண்ணற்ற உருவங்கள் ஏற்றவராகவும்,எல்லாப் பக்கங்களிலும் பார்க்கிறேன்.உங்களுடைய முடிவான எல்லையைப் பார்க்கவில்லை.நடுப் பகுதியையும் பார்க்கவில்லை;மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை”

சந்திரன் சூரியன் ஆகியவை பகவானின் கண்களாக இருக்கின்றனவாம்

எல்லாமே அவனுக்குள் அடக்கம் என்பதையே விஸ்வரூபம் உணர்த்துகிறது!

Saturday, October 27, 2012

சூப்பரு சிங்கரும்,(விரல்) சூப்புற ரசிகர்களும்!



சூப்பர் சிங்கர் என்ற மகா நாடகத்தின் ஆறாம் அங்கம்முடிந்து விட்டது-பெரியவர் நடித்து மூன்று,சிறியவர் நடித்து மூன்று.

வழக்கம் போல் மக்களின் வாக்கு என்ற மாயத் தோற்றத்தின் மூலம்,நடுவர்களால் கடைசி 5க்கு வராமலே வெளியேற்றப்பட்ட  ஆஜித்,கட்டுப்பாடற்ற அட்டைச் சுற்றில்(wild card க்கு இதுவா தமிழ்?அபத்தம்!  என்னுடைய நேரடியான அர்த்தமற்ற தமிழாக்கம்!) மீண்டும் உள்ளே வந்து மக்கள் தீர்ப்பாகிய மகேசன் தீர்ப்பினால் வெற்றி பெற்று விட்டான்!

இறுதிச் சுற்றுக்கு முதலில் வந்த சுகன்யா,முதல் மூவருக்குள் வரவில்லை.இறுதிச் சுறில் இரண்டாவதாக நுழைந்த பிரகதி, இரண்டாவது இடத்தில்!

இது முதல் முறையல்ல.சென்ற பெரியவர்கள் போட்டியிலும் இது போல்தான் நடந்தது.அதன் பின் நடுவர்கள் கூடி ஒரு போஸ்ட் மார்ட்டம் நடத்தி,தோற்றுப்போன சத்தியப்பிரகாஷுக்காக ஒப்பாரி வைத்து,வென்றவனைச் சிறுமைப்படுத்தினர்.இம்முறையும் அது நடக்கும்.

நடுவர்களால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இறுதியில் வெல்கிறார் என்றால் அந்த நடுவர்கள் திறமையற்றவர்களா?இந்த தேர்ந்தெடுக்கும் முறையே பிழையானதா?அல்லது எல்லாம் நாடகமா?

இந்த முறையும் கடைசியில் மனோ பிரகதியிடம் கூறினார்”உனக்கும் ,ஆஜித்துக்கும் அரை பாயிண்ட் தான் வித்தியாசம்.நடுவர் மதிப்பெண்கள் சமம்.மக்கள் வாக்கில் ஆஜித் அதிகம்” என.

ஒவ்வொரு முறையும் அதே மூன்று நடுவர்கள் ஏன்? மாற்றலாமே?ஒரு பின்னணிப்பாடகர்,ஒரு சாஸ்த்ரீய சங்கீதப் பாடகர்,ஒரு இசை இயக்குனர்,ஒரு இசை விமரிசகர் என்று ஒரு நடுவர் குழுவை அமைக்கலாமே?இறுதிச்  சுற்றுக்கு முப்பது நடுவர்களை நியமித்து அவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கலாமே?இவையெல்லாம் என் எண்ணங்கள். 

எத்தனையோ நல்ல ஆலோசனைகள் பிறக்கக்கூடும்.

ஆயிற்று.அடுத்த நாடக அங்கத்துக்கான ஒத்திகைகள் தொடங்கப் போகின்றன.

அதையும்  ரசிகர்கள் விரல் சூப்பிக்கொண்டு பார்க்க வேண்டியதுதான்.

ஐயா ,சூப்புவதற்கு ஒரு குச்சி மிட்டாயாவது கொடுங்களேன்!!!

Sunday, October 21, 2012

இதுவன்றோ காதல்!இதுதான் காதல்!!



அக்டோபர்,19.1965

இரவு மணி 9.00.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் காலம்.

சியால்கோட்டில் இருந்த  எதிரி இலக்கை நோக்கி,ஆறு இந்திய ஜவான்கள்,ஊர்ந்து முன்னேறிக்கொண்டிருகிறார்கள்.

வான் வெளித் தாக்குதலில்,கண்ணி வெடிகள் வெடிக்கின்றன.

அறுவரும் காயமடைகிறார்கள்.

அதில் ஒருவர்,பெயர் ஷெரிஃப் ,கடுமையாகக் காயம் அடைகிறார்.

மருத்துவ மனையில் அவர் உயிரைக்காப்பாற்றுவதற்காகச் சிதைந்து போன அவர் கைகளை முழங்கை வரை வெட்டி விடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல.

அவரது இரண்டு கண்களும் காயப்பட்டு அவர் பார்வை இழக்கிறார்.

அவர் வயது—28.

இந்நிகழ்வுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் , அவரது நண்பன் வீட்டுக்குச் சென்றபோது அவன் சகோதரி கமலத்தைச் சந்தித்தார்.

இருவரும் காதல் வயப்பட்டனர்.

இப்போது இது நடந்து விட்டது.

அவர் கமலத்திடம் திருமணத்தைப் பற்றி மறந்து விட சொன்னார்.

ஆனால் அவள் கேட்கவில்லை.

கோவையில் அவர் சிகிச்சை பெறுவது அறிந்து அங்கு சென்று அவருக்குப் பணிவிடை செய்தாள்.

அவர் தமிழ் முஸ்லிம்.அவள் மலையாள இந்து.

அதானால் எழுந்த எதிர்ப்புகளைப் புறந்தள்ளி  1967 இல்அவள் அவரையே மணந்தாள்.

இப்போது அவருக்கு வயது 75;கமலத்துக்கு 70.

ஒரு பையன்(38)இரண்டு பெண்கள்.

இன்றும் அதே காதலுடன் வாழ்கிறார்கள்.

நினைக்கும்போதே நெஞ்சு நெகிழவில்லையா?

அந்தப் பெண்தெய்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

(செய்தி:டைம்ஸ் ஆஃப் இந்தியா,21-10-2012 )