Thursday, January 10, 2013

பெண்கள் கெட்டிக்காரர்கள்தான்!

ரூபவதி 18 வயது எழில்.அவளது சாதுர்யம் பழகுபவர்களை அவள் வசப் படுத்தும்.அழகு ஆக்ரமிக்கும்.கணவன் ப்ரிதிவி வீரபராக்ரமன்.அந்த நாட்டு அரசன்  அஜாதசத்ரு நடத்தும் வீர விளையாட்டுப் போட்டிகளில் ஏழு ஆண்டுகளாக முதல் பரிசு ப்ரிதிவிக்குத்தான்.பராக்கிரமம் மிக்க வீர க்ஷத்திரியன் தன் கணவன் என்ற பெருமிதம் ரூபவதிக்கு நிறைய உண்டு.

திருமணமான 6 மாதத்தில் ,நாட்டில் ஆண்டு தோறும் நடக்கும் வீரவிளையாட்டுகளில் எட்டாவது முறையாக பங்கேற்கத் துடித்துக் கொண்டிருந்தான் ப்ரிதிவி.போட்டியில் நிரந்தரமாக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் தூமகேது அந்த முறை முதலிடத்தை அடையக் கொடூரமான திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.அவனுக்கு நீண்ட காலமாக ரூபவதியின் மீதும் ஒரு கண் உண்டு.குதிரைப் பந்தயத்தின்போது பிரிதிவியின் குதிரைக்கு மயக்க மருந்து கொடுத்து அவனை நிலைகுலைப்பது என்பதே திட்டம்.

ரூபவதி சக்தி உபாசகி.அமானுஷ்யமான சக்திகள் அவள் கணவருக்கு வரப்போகும் ஆபத்தை உணர்த்தியும் அவளால் கணவனைக் காப்பாற்ற முடியவில்லை.

பாதி மயக்கத்தில் தாறுமாறாக அதிவேகமாக ஓடிய குதிரையிலிருந்து நிலைகுலைந்து விழுந்து தலை ஒரு பாறையின் மீது மோத,கண்பார்வை இழந்தான் பிரிதிவி.

உஜ்ஜயினியில் நடுக்காட்டில் வாசம் புரியும் காளியைத் தரிசித்து அருள் வேண்டினால் கணவனின் பார்வையை மீட்கலாம் என ரூபவதி நம்பினாள்.கோவில் அடர்ந்த கானகத்தில் இருப்பதால் தம்பதியை அங்கு அனுப்ப பெற்றோர் பயந்தனர்.ஒரு பவுர்ணமி நள்ளிரவில் ஓசைப்படாமல் ரூபவதி கணவனை அழைத்துக் கொண்டு காளியைத் தரிசிக்கப் புறப்பட்டாள்.

கோவிலை அடைய இரண்டு நாளாகும்.வழிப்போக்கர்கள்,மற்ற யாத்திரிகர்கள் உதவ வனத்தில் கிடைத்த காய்கனிகளை உண்டு வழிநடந்தனர்.கோவில் அருகே ஓடும் சப்ரு ஆற்றின் கரையை நள்ளிரவில் அடைந்தனர்.

மறுநாள் காலை சூரியோதயத்துக்கு முன்பே ஆற்றில் குளித்து தெய்வ தரிசனத்துக்குத் தயாராகிகொண்டிருந்தனர்.

கைலாயத்தில்,சக்தி சிவனிடம் ரூபவதியின் கட்டுக்கடங்காத பதி பக்தியையும் அசாத்திய துணிச்சலையும்மெச்சிப் பேசிக்கொண்டிருந்தாள்.சிவன் சிரித்துக் கொண்டே”ரூபவதியின் உண்மை ஸ்வரூபத்தை இப்போது பார்” என்றார்.

(இன்னும் வரும்)


3 comments:

  1. ‘ரூபவதியின் உண்மை ஸ்வரூபத்தை’ அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. தொடர்ந்து தொடராக எழுதுங்கள்,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இதிலும் சஸ்பென்ஸா! ரைட்டு!

    ReplyDelete