Saturday, January 12, 2013

கொட்டுங்க போகி மேளம்-டம்,டம்!



போகிப் பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது. மறுநாள் தை பிறந்து விடுவதால்,அத் தை மகளை (அத்தை மகளையும்!)வரவேற்கத் தயாராகும் பண்டிகை இது.வழக்கமாக இந்நாளில் வீட்டில் இருக்கும் பழைய குப்பைகள், வேண்டாத பொருள்களை அகற்றிக் கொளுத்துவர். முன்பெல்லாம் பொங்கலுக்கு முன் வீடுகள் கட்டாயமாக வெள்ளையடிக்கப்படும். அப்போது விலக்கப்படும் பொருட்கள் போகியன்று கொளுத்தப்படும். இவ்வாறு பழையனவற்றைப் போக்கும் பண்டிகை ஆதலால் ‘போக்கி’ எனப் பெயர் வந்தது எனவும் காலப்போக்கில் அது போகி ஆக மருவி விட்டது எனவும் சொல்வர்.

இந்தக் கொளுத்தும் பழக்கம்  விரிவு படுத்தப் பட்டு,வீட்டின் பழைய குப்பைகள் மட்டுமன்றி, டயர்,ரப்பர் போன்ற பொருள்களும் எரிக்கப்பட்டு,ஊரே புகை மண்டலமாகிச் சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்படத் தொடங்கி விட்டது.போகியன்று காலை வெளியே வந்து பார்த்தால் மூடு பனி போல் புகைப்படலம் மறைத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இப்போது சில ஆண்டுகளாகக் காவல்துறை சிறிது கண்டிப்புடன் இருப்பதால் நிலைமை சிறிது சீரடைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

போகியன்று குப்பையை எரிப்பதுடன் சிறுவர் கையில் ஒரு தப்பட்டை வைத்து அடித்துக் கொண்டே போகியோ போகி எனக் கூவியவாறு இருப்பர்.இந்த தப்பட்டை “ போகி மேளம்” என அழைக்கப்படுகிறது.

இந்த மேளம் சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூரில்தான் செய்யப்படுகிறது.மண் வட்டிலின் மீது எருமைத்தோலை இழுத்து ஒட்டி இந்த மேளம் தயாரிக்கப் படுகிறது.

போகி என்ற பெயருக்கு வேறு ஒரு காரணமும் சொல்லப் படுகிறது.போகம் என்ற சொல்லி லிருந்து இது பிறந்ததாம்.விளைச்சல் இருபோகம்,முப்போகம் என்றெல்லாம் சொல்லக் கேட்டி ருப்போம். ஒரு போகம் முடிந்து நல்ல விளைச்சல் கண்டு,கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையே இது.எனவே போகத்திலிருந்து வந்தது போகி என்றும் கூறுவர்.

இந்தியா ”வேற்றுமைகளின் நடுவே ஒற்றுமை” மிகுந்த நாடு.இந்தப் போகியன்று வடக்கிலும் ஒரு பண்டிகை கொண்டாடப் படுகிறது;அதற்குப் பெயர் ”லோஹ்ரி”(கிட்டத்தட்ட போகி என்பது போலவே இருக்கிறதல்லவா?!)அன்று  காலனிகளில் சொக்கப்பனை போல் ஒன்று எரிக்கும் வழக்கம் உள்ளது.அன்று கட்டாயமாக எள்ளு மிட்டாய்,வேர்க்கடலை எல்லாம் சாப்பிடுவர்.

வாருங்கள் நாமும் சுற்றுச் சூழலை மாசு படுத்தாமல் போகியைக் கொண்டாடுவோம்!

போகியோ போகி----டம டம டம டம்!

9 comments:

  1. புதிய தகவலுடன் கூடிய சிறப்புப் பதிவு அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!
      சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்

      Delete
  2. உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி;வாழ்த்துகள் உங்களுக்கும்!

      Delete
  3. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ;வாழ்த்துகள் உங்களுக்கும்.

      Delete
  4. நல்லதொரு தகவல் பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  5. விளக்கம் அருமை.தெரிந்துகொண்டேன் !

    ReplyDelete